மிதி வண்டி…
முதன் முதல்
என்னை கவர்ந்த
அறிவியல் அதிசயம்
நீதான்
என்னைப்போல்
நீயும்
காற்றை இழுக்காமல்
காலத்தை
தள்ள முடியாது
சிறுவயதில்
உன்னை தொடும்போதெல்லாம்
என்னுள்
ஆயிரம் மின்சாரவிளக்குகள்
ஒளி விடும்
உன்னை
இயக்கவேண்டுமென்று
கனவுகள்
ஒவ்வொருநாளும்
என்னுள் நடைபோடும்
அன்று..
நான்
வித்தை செய்வதற்கும்
விளையாடுவதற்கும்
நீயே கருவி
என்
உந்து சக்தியையும்
ஊக்க சக்தியையும்
நீயே
வெளி கொண்டுவந்த
அருவி
என் தந்தை
உன்னை மிதித்துதான்
என்னை உயர்த்தினார்
வாழ்க்கையை நகர்த்தினார்
வயல்காடுகளை
வளப்படுத்தினார்
பால்ய பருவத்தில்
உன்னை
இயக்கியதே
என் வீரத்தின்
வெளிப்பாடாக உணர்ந்தேன்
வெற்றி அடைந்ததாக
எண்ணி மகிழ்ந்தேன்
விண்ணில் சிறகடித்து
பறந்தேன்
என்னுடன் நீ..
பள்ளிக்கு வந்திருக்கிறாய்
படம் பார்க்க வந்திருக்கிறாய்
பலசரக்கு வாங்க வந்திருக்கிறாய்
பந்தயத்திலும் கலந்திருக்கிறாய்
பலநேரம்
பழகிய நண்பர்களை சுமந்திருக்கிறாய்
கல்லுக்கு படியாத நீ..
முள்ளுக்கு படிந்திருக்கிறாய்
உனக்கு
உடலெல்லாம் இரும்பு என்றாலும்
உள்ளம் கரும்பு…..
ஆதாமைப்போல்
நீயும்
அவளுக்காக
அந்த
இடைப்பட்ட இரும்பு கம்பியை
இழந்திருக்கிறாய்
எத்தனை யுகங்கள் வந்தாலும்
நீயே
இயங்கும் வண்டிகளுக்கு
இலக்கணமாய் இருப்பாய்……!
மீண்டும் ஒரு யுகத்தை
எழுந்துவந்து படைப்பாய்
என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது
மிதி வண்டி!
##மரு.மு.பெரியசாமி##
புதுக்கோட்டை