தமிழர்களின் அச்சமில்லா வீரத்தை நம் வரலாறுகள் பறைசாற்றுகின்றன என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.
கோவை விஜயா பதிப்பகம் சார்பில் மதுரை மாவட்டம், மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக்கழக அரங்கில் காலாபாணி நாவலுக்கு 2022 -ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, எழுத்தாளர் மு. ராஜேந்திரன் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி மேலும் பேசியதாவது:
வரலாறு படிப்பதிலும் வரலாறு படைப்பதிலும் நமக்கிருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் வரலாறை ஆவணப்படுத்துவதில் இல்லை.
எத்தனையோ வரலாற்றுப் பதிவுகள் நம்மிடத்தில் இல்லை. மருது சகோதரர்களின் வீரத்தை ஆங்கிலேயே அதிகாரி வெல்ஷ் எழுதிய நூலில் இருந்து தெரிந்து கொள்கிறோம். வெல்ஷ் எழுதிய நூலில் சின்ன மருது, பெரிய மருது, சின்ன மருதுவின் மகன் துரைசாமி, அவர்களது வீரம், நேர்மை, நாட்டுப் பற்று பற்றி விரிவாக எழுதுகிறார்.
2022 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது பெற்ற காலாபாணி நாவல் 1802 -ஆம் ஆண்டு நடந்த சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவர், சின்ன மருது மகன் துரைசாமி இவர்களுடன் 72 பேரை நாடு கடத்தி துன்புறுத்திய வரலாறை பேசுகிறது.
நாடு கடத்தப்பட்ட முதல் அரசர் இவர் ஆவார்.ஆங்கிலேய அரசு தீவாந்திர தண்டனை என்று அழைக்கபடும் காலா பாணி தண்டனை வழியே நடத்திய கொடூர தாக்குதல்களை
நாவலாசியர் விருதாளர் மு. ராஜேந்திரன் விவரிக்கிற போக்கில் பல இடங்களில் கண்களில் நீர் கசிவதை நிறுத்த இயலவில்லை. அந்த உணர்ச்சி தான் இந்த நாவலின் வெற்றி என்பது.
விருதாளர் மு. ராஜேந்திரன், திருவண்ணாமலை ஆட்சியராக இருந்தவர். இந்திய அளவில் சாகித்ய அகாதெமி விருது பெறும் மூன்றாவது ஐ ஏ எஸ் அதிகாரியாவார் இவர். தமிழகத்தில் இவ்விருது பெறும் முதல் ஐ ஏ எஸ் அதிகாரி.
இந்தியாவின் மிகப் பெரிய விருது இந்நூலுக்குக் கிடைத்ததன் மூலம் ஏனைய இந்திய மொழிகளில் இந்நூல் மொழி பெயர்க்கப்படும். தென்னிந்தியர்களின் தியாக வரலாற்றை, வீரத்தை வட இந்தியர்கள் அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு ஏற்படும்
நாவலை எழுத நாவலாசிரியர் பல ஆய்வு நூல்களை துணைக் கு எடுத்துக்கொண்டதோடு, கதை நடத்த இடங்களுக்கு களப் பயணமும் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது. ஒரு விறுவிறுப் பான நடையில் பயணப்படும் நாவல் நாம் அறிந்திடாத நம் வரலாற்றுத் தகவல்களை நமக்குத் தருகிறது.
விடுதலை வேட்கை எல்லோரிடத்திலும் கொழுந்துவிட்டு எரியும் காலக்கட்டத்தில் அனைத்து சாதியினரும் அதில் தன்னை இணைத்துக் கொண்டனர். பங்கேற்ற எல்லோரின் பெயர்களோடும் சாதி பெயர் ஒட்டிக்கொண்டிருந்ததே தவிர சாதி வெறி எவரிடத்திலும் இருந்ததே இல்லை.
நாடுகடத்தப்பட்ட 73 வீரர்களும் திருமயம் கோட்டையில் இரண்டு மாதங்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.சின்ன மருது மகன் துரைசாமி உள்ளிட்ட பலருக்கு வாந்தி பேதி வந்து பாதிக்கப்பட்டபோது பிரான்மலை வைத்தியர் வந்து சிகிச்சை செய்தார் என்ற எவருக்கும் தெரியாத புதிய செய்தியை நாவல் விவரிக்கிறது.
இதுவரை யாரும் தொட்டிராத மறைக்கப்பட்ட வரலாறை வெளிக்கொணர்ந்த வகையில் இந்நாவல் நாம் அறிய வேண்டிய புதிய வரலாறு என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.
இதையடுத்து கவிஞர் ஆத்மார்த்தி இந்நூலைப்பற்றி விரிவாகப் பேசினார். ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு செயலர் மு. கருணாகரன் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் மு. ராஜேந்திரன் ஏற்புரையாற்றினார்.
விஜயா பதிப்பக நிர்வாகி மு. வேலாயுதம் வரவேற்புரை யாற்றினார்.நிகழ்ச்சியை எம். ரேவதிசுரேஷ், கே. ராதா ஆகியோர் நிகழ்வை தொகுத்தளித்தனர். அகநி பதிப்பக நிர்வாகி எழுத்தாளர் மு. முருகேஷ், கவிஞர் வெண்ணிலா மற்றும் மேலூர் முக்கிய பிரமுகர்கள், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.