புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழக சிறப்புத் தலைவரும், இலக்கிய சமூக அமைப்புகளுக்கான கொடையாளருமான பேக்கரி மஹராஜ் உரிமையாளர் சீனு.சின்னப்பா கடந்த ஆண்டு காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் கடந்த ஏப். 26-ஆம் தேதி முதல் யோகாசனப் போட்டிகள், ரத்த தான முகாம், சிலம்பம், கராத்தே, ஓவியப் போட்டிகள், மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும்’ என்ற தலைப்பில் 60 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் நா. முத்துநிலவன் கவியரங்கை தொடக்கி வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் சொ. சுப்பையா கலந்து கொண்டு, பல்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
சீனு. சின்னப்பா பெயரில் மாநில அளவிலான இலக்கிய விருதுகள்
இதையடுத்து ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி பேசியதாவது:
அடுத்த ஆண்டு முதல் அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா பெயரில், தமிழகம் தழுவிய இலக்கிய விருதுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளோம். அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கவியரங்கில் ஒதுக்கிய நேரத்தில் உள்ளன்போடு பங்கேற்று கவிதை படைத்து சிறப்பித்த கவிஞர்களுக்கு மனம் நிறைந்த நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்தார்