புதுக்கோட்டையில் ‘கற்பி’ எனும் பெயரில் கல்விப் பேரியக்கம் உதயமானது.
கவிஞரும், எழுத்தாளரும், பேராசிரியருமான துவாரகா சாமிநாதன். அவர் இணையர் லாவண்யாவோடு இணைந்து தொடங்கிய இயக்கம், கல்வி கலை இலக்கியத் தளமாக தொடங்கப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, முத்துக்குமரேசன் தலைமை வகித்தார்.கற்பி இயக்கத்தை கவிஞர் தங்கம்மூர்த்தி தொடக்கி வைத்து பேசியதாவது:
கவிஞர் துவாரகா சுவாமிநாதனின் பார்வை நேர்மறையாக வும், விசாலமாகவும், இளைய தலைமுறையின் மீது அக்கறையாகவும், பெயர் புகழ் பதவி என எதையும் எதிர்பாராத வெள்ளந்தியான மனதோடும் இருந்ததுதான் எல்லோரையும் இதில் இணைத்து இருக்கிறது.
மேலும் புதுக்கோட்டை மட்டுமல்ல அது அருகில் இருக்கும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், பொள்ளாச்சி என்று நம்மைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இலக்கியத்தை துல்லியமாக உணர்ந்து உயர்த்திப் பிடிக்கிற படைப்பாளிகள் சோர்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள்.
அவர்களை சந்திக்கும் போதும் அவர்கள் படைப்புகளில் பயணப்படும்போதும் அவர்களது இலக்கியச் செறிவினை அறிந்து ஆச்சரியப்படுவேன். இலக்கியத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கிய வடிவத்தில் உயிர்ப்போடு உலவி வருவது அத்தனை மகிழ்ச்சியை தருகிறது.
கவிஞர் துவாரகா சாமிநாதனின் கற்பி இயக்கம் பல புதிய பரிமாணங்களை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி.
முன்னதாக பா. முருகானந்தம் அவர்களின் ‘மெயில் பை’ எனும் நாவலை தங்கம்மூர்த்தி அறிமுகம் செய்தார். தொடர்ந்து, கவிஞர் ராஜலட்சுமியின் கவிதை நூலும், லட்சுமி சிவகுமாரின் குறுநாவல்களும், கவிஞர் தாவூத் பாஷாவின் கவிதை தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டன.
கவிஞர் சூர்யா சுரேஷ், ஆங்கரை பைரவி, மைதிலி கஸ்தூரி ரங்கன் ஆகியோர் நூல்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்கள்.
கவிஞர் யாழி, கவிஞர் பாரதி மோகன், கவிஞர் சொக்கமேளா, கவிஞர் சுரேஷ் மான்யா, பேராசிரியர் விஸ்வநாதன், கவிஞர் ராஜலட்சுமி,கவிஞர் தாவூத் பாஷா, கவிஞர் ரமா ராமநாதன், கவிஞர் வம்பனார் அன்பழகன், விழாவில் பல ஊர்களில் இருந்தும் படைப்பாளிகள் பலரும் பங்கேற்றனர்.