Close
டிசம்பர் 3, 2024 5:15 மணி

புதிய களங்களைத் தேடி பயணிக்கும் சமகால எழுத்தாளர்கள்: ந. முருகேசபாண்டியன்

புதுக்கோட்டை

சித்தன்னவாசல் இலக்கிய சந்திப்பு சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

சமகால எழுத்தாளர்கள் புதிய களங்களைத் தேடி பயணிக்கின்றனர் என்றார் ந. முருகேசபாண்டியன்.

சித்தன்னவாசல் இலக்கியச் சந்திப்பு நடத்திய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா (22.07.2023)  சனிக்கிழமை  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு  அறிவியல் இயக்க அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்து பேசினார். இதில், புலியூர் முருகேசன் எழுதிய பீ தணக்கன். சுரேஷ்மான்யா எழுதிய அப்பாவை வரச்சொல்லுங்கள்.  ப. வெங்கடேசன் எழுதிய பறவையின் குரலால் எழுதுபவன்.. ஆகிய  3 நூல்கள் வெளியிடப்பட்டன.

எழுத்தாளர்கள் பா. முத்து, புதுகை செல்வா ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர்.

 புலியூர் முருகேசன் எழுதிய பீ தணக்கன் சிறுகதை தொகுப்பு நூலை ஜோ.டெய்சிராணி,  சுரேஷ்மான்யா எழுதிய அப்பாவை வரச்சொல்லுங்கள் சிறுகதை தொகுப்பு நூலை கீதாஞ்சலி மஞ்சன், ப. வெங்கடேசன் எழுதிய பறவையின் குரலால் எழுதுபவன்  கவிதை தொகுப்பு நூலை க. உஷாநந்தினி ஆகியோர் அறிமுகம் செய்து உரையாற்றினர்.

கவிஞர் ஜீவி, எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர்  கருத்துரையாற்றினர்.

இலக்கிய விமர்சகர் ந. முருகேசபாண்டியன்  பேசியதாவது:
இன்றைய சிறுகதை எது என்ற கேள்வி முக்கியமானது. தமிழ் மொழி பயன்பாட்டுக்குரியதா? என்ற சந்தேகப்படுகிற இளைய தலைமுறையினர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதிலும் கையில் ஸ்மார்ட் போனுடன் 24 மணிநேரமும் மின்னணு உலகின் வழியாகக் கேளிக்கைக்குள் மிதக்கிற வர்கள், சிறுகதையை வாசிப்பது, மிகவும் குறைவு. என்றாலும், இளம் படைப்பாளர்கள் பின்-காலனியச் சூழலில் நெருக்கடிக் குள்ளான வாழ்க்கை குறித்துப் புனைகதைகள் மூலம் சூழலை விசாரிக்க முயலுவது தொடர்கிறது.

விளிம்புநிலையினரின் வாழ்க்கையைப் புனைவாக்குவதன் மூலம் மையத்தில் வலுவாக உறைந்திருக்கும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பின் நவீனத்துவத் செயல்பாடு நடைபெறுகிறது.

பால் சமத்துவமின்மை, சாதிய ஒடுக்கு முறையுடன் மதஅடிப்படைவாத அமைப்புகளின் ஆதிக்கம் இன்று மேலோங்கிக் கொண்டிருக்கிறது. உடல்களை மதத்தின் பெயரால் அடக்கியொடுக்குவது வலுவடைந்துள்ளது.

மனிதர்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கிற வன்மம், வன்முறை, குரோதம், அற்பத்தனம், பொறாமை, கருமித்தனம், பொறுக்கித்தனம் போன்றவற்றைக் கதையாக்கும் போக்கு, இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அன்றாட வாழ்வில் கசப்பும் துயரமும் பொங்கி வழிந்தாலும், மேன்மை குறித்து அக்கறை கொள்கிற கதைசொல்லிகள், கதைகளின் வழியாகச் சூழலின்மீது எதிர்வினையாற்று கின்றனர். புலியூர் முருகேசன், சுரேஷ் போன்ற படைப் பாளர்கள், எழுதியுள்ள கதைகள் சமகாலத்தின் குரல்களாக விரிந்துள்ளன.

சிறுகதை மொழியானது கவிதைக்கு நெருக்கமாகச் செறிந்த நிலையில், மனதின் விசாலங்களைப் பதிவாக்குவது முக்கியமானது. கதைசொல்லல் என்பது வாசிப்பின்மூலம் வாசகரின் மனதில் உருவாக்கும் படிமங்களும், காட்சிகளும் முடிவிலியாகத் தொடரும்போது புதிய எழுத்து உருவாகிறது.

அவை, கதையுடன் பின்னிப் பிணைந்து உருவாக்கும் உலகம், கவர்ச்சிகரமானது. குற்றவுணர்வுடன் வாழப் பழகியவர்களாக மனிதர்கள் மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், இன்று எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள், நிரம்பியுள்ளன.

யதார்த்தக் கதையாடல்கள், விளிம்பு நிலையினரின் வாழ்க்கையில் ஏன் இப்படியெல்லாம் சம்பவங்கள் நிகழ்கின்றன என்ற கேள்வியை எழுப்புகின்றன. எளிய மனிதர்கள் என்றாலும் அவர்களுடைய மனதின் துடிப்புகள், கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன.

காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள குடும்ப அமைப்பின் புனிதம் என்ற எல்லையை எளிதாக அத்துமீறுகிற கணவன் மனைவிக்கிடையிலான உறவு பற்றிய விவரிப்புகள், கவனத் திற்குரியன. அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகிற பல சம்பவங்கள், எந்தவொரு படைப்பாளியாலும் கற்பனை செய்ய இயலாதவாறு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்படியெல்லாம் நடக்குமா என யோசிக்கவைக்கிற புனைவுகள் நிரம்பிய யதார்த்த வாழ்க்கையின் அசலான முகம், கதைகளில் பதிவாக்கியுள்ளது. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சிறுகதையின் வடிவம், உத்தி, செய்நேர்த்தி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்தனர்.

கதையில் ஒரு பாத்திரம் சற்றுக் குரலை ஓங்கிப் பேசிவிட்டால், கதையின் அழகியல் குறைவுபட்டதாகப் புலம்பி, ஒதுக்கினர். இன்று எப்படி வேண்டுமானாலும் கதை சொல்வதற்கான சாத்தியப்பாடுகள் பெருகியுள்ள நிலையில், அழகியலுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

சமகால எழுத்தாளர்கள், புதிய களங்களைத் தேடியவாறு பயணிக்கையில், இதுவரை படைப்பாக்கத்தில் கையாளப் படாமல், ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களைக் கதைகளாக்க முயன்றுள்ளனர். பாலியல் குறித்து மூடுண்ட மனநிலையு டைய தமிழர் வாழ்க்கையில் பெண்ணுடல் பற்றிய பிரமைக ளைத் தகர்த்துவிட்டு, புதிய பேச்சுகள் கதைகளின் வழியாக உருவாக்கப்பட்டுள்ளன.

காமம் பெண்ணையும் ஆணையும் உயிரியல்ரீதியாகப் படுத்துகிற பாடுகளையும், அவை சமூகத்துடன் முரண்படு கிற அல்லது ஒத்திசைகிற நிலைகளையும் கதைகளாக்கு வதில் நவீனக் கதைசொல்லிகளுக்குத் தயக்கம் எதுவுமில்லை.

பெண்ணியம், தலித்தியம், சூழலியம் என நுண்ணரசியல் எழுச்சி பெற்றுள்ள தமிழ் அரசியல் சூழல், சிறுகதை ஆக்கத்தில் புத்தொளி பாய்ச்சுகிறது. இனவரைவியல் தன்மைக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்படும் கதைகளில் மண் சார்ந்து இருப்பினைக் கேள்விக்குள்ளாவது, தொடர்கிறது.

பொருளியல் ஏற்றத்தாழ்வு, வறுமை காரணமாக விளிம்பு நிலையிரின் வாழ்க்கை இன்று மதிப்பீடு இழந்து வதைக்குள்ளாகியுள்ளது. இன்னொருபுறம் நகரமயமாதல் காரணமாக தொலைந்து கொண்டிருக்கும் கிராமத்து நிலவெளியில், குடும்ப உறவுகள் பெரிய அளவில் சிதலமடைகின்றன.

இருப்பினில் இருந்து அந்நியமாதல் எங்கும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இருப்பதா? இறப்பதா? என்ற கேள்விகளின் வழியாகத் சுயத்தைத் தொலைத்தவர்களும் மனப்பிறழ்வாளர்களும் பெருகிடும் சூழலில், பொங்கி வழிந்திடும் கசப்பின் நெடியடிக்கும் சிறுகதைகள் எழுதப் படுவது தற்செயலானது அல்ல.

சுரேஷ் மான்யாவின் கதைசொல்லல் முழுக்க விளிம்பு நிலையினரின் அவல வாழக்கையைப் பதிவாக்கியுள்ளது. அப்பாவை வரச் சொல்லுங்கள் கதையில் அம்மாவும் அப்பாவும் எப்பொழுதும் சண்டையிடுகின்றனர்.

அப்பாவுக்கு இன்னொரு பெண்ணுடன் பாலுறவு. ஏன் இப்படி ஆண் உலகம் குடும்பத்தைப் புறக்கணிக்கிறது என்ற கேள்வியை வாசிப்பினில் சிறுகதையாசிரியர் எழுப்புகிறார் என்றார் ந. முருகேசபாண்டியன்.

முன்னதாக, எழுத்தாளர் பீர்முகமது வரவேற்புரையாற்றினர். புதுகை புதல்வன் நன்றி கூறினார்.விழாவை மைதிலி கஸ்தூரிரங்கன், த.ரேவதி ஆகியோர்  ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  பேராசிரியர்  கண்ணம்மாள், பேராசிரியர் தமிழ்இலக்கியா, பிம்பம் சாகுல், தேனி விசாகன், வினோத், ஜி.பி. இளங்கோவன், பாரிசிவன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top