Close
நவம்பர் 2, 2024 12:30 காலை

இளைய தலைமுறையினருக்கு யாரும் வழிகாட்டியாக இருக்க முடியாது : எழுத்தாளர் பவாசெல்லத்துரை

இங்கிலாந்திலிருந்து சங்கர்

எழுத்தாளர் பவாசெல்லத்துரை

எழுத்தாளர் பவா செல்லத்துரை இங்கிலாந்தில் மேற்கொண்ட பயணத்தின்போது விமர்சகர் இலண்டன் சங்கர் நடத்திய நேர்காணல்.. உங்கள் பார்வைக்கு..

கேள்வி :   பல இளைய தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருக்கிறார்களா?

பவா செல்லத்துரை: இளைய தலைமுறையினருக்கு யாரும் வழிகாட்டியாக இருக்க முடியாது  என்பதை நம்புகிறவன் நான். ஒரு எழுத்தாளன் தன் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தரிசனங்களை இந்த சமூகத்தோடு பகிர்ந்து கொள்கிறான்.

அப்படியான பகிர்தலில் ஒரு வாசகன், ஒரு எழுத்தாளனோடு கனெக்ட்டை  ஏற்படுத்திக் கொள்கிறான். தனக்கு ரிலேட் ஆகும் போது, சில எங்ஸ்டர்ஸ் சில வயதானவர்கள், சில பெரியவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் அந்த எழுத்தாளனோடு ரிலேட் ஆகிறார்கள்.

அப்படி பார்க்கிற பொழுது நான் எழுதியதை விட, நான் எழுதியதை வாசித்த வாசகர்களை விட என் குரல் வழியாக கதைகளை கேட்டு என்னோடு ரிலேட் ஆனவர்கள் தான் அதிகம்.  அதற்காகவே  நான் அவர்களுக்கு…

இந்த பத்து வருடங்களில் என்னோட  பயணித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கு குறையாமல் இருக்கும். ஆனால்  இப்பொழுது ஒரு 200, 300 பேர் மட்டுமே என்னோடு பயணிக்கிறார்கள்.

மீதமுள்ள ஒன்பதாயிரத்தி எழுநூறு பேரும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சந்தோஷங்கள் துயரங்கள்  ஆகியவற்றை பிடித்துக் கொண்டு  ஆங்காங்கே நின்று விடுவார்கள். மீதம் உள்ளவர்கள் என்னை பின்தொடர்ந்து  வந்து கொண்டே இருப்பார்கள்  அவர்கள் என்னை பின்தொடர்கிறார்கள் என்கிற பெருமிதம் என்னிடம் கிடையாது.

என்னோடு உரையாடுகிறார்கள், என்னோடு அவரவர் வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார்கள். நான் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். என்னிடமிருந்து சில விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அந்தப் பகிர்தல் தான், ஒரு எழுத்தாளன் இந்த சமூகத்திற்கு கொடுக்க

வேண்டியிருக்கிறது. ஆகையால் ஒரு எழுத்தாளனை பின் தொடர்பவன் அல்லது வழிமொழிபவன் அல்லது ஒரு எழுத்தாளனின் பேச்சைக் கேட்டு தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்பவன்  என்பதெல்லாமே மித் மட்டுமே, பொய் மட்டுமே. இவை எதுவுமே வேண்டாம்.  நாம் நம்முடைய அனுபவ பகிர்தலை  இந்த வாழ்க்கையை, இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.

கேள்வி  :எழுத நினைக்கும் போது யாரையேனும் மனதில் நினைத்துக் கொண்டு எழுத துவங்குவீர்களா?

பவா செல்லத்துரை: எந்த எழுத்தாளனும்  யாரையும் மனதில் நினைத்துக் கொண்டு எழுதுவதாக எனக்குத் தோன்றவில்லை. எப்போதோ  கிடைத்த அனுபவத்தை  விதை நெல்லாக மாற்றி மனதிற்கு உள்ளே  அதை அடைகாத்து, அந்த விதை நெல்லை பக்குவப்படுத்து கிறான். ஒரு சில விதை நெல்களை பக்குவப்படுத்துவதற்கு, ஒரு நாள் போதும், ஒரு மாதம் போதும், ஒரு வாரம் போதும், ஆறு மாதம் போதும், நேரம் எடுத்துக் கொண்டாலும் கூட.

ஒரு கதையை ஒரு எழுத்தாளன் அடைகாக்கிற காலம்  இருக்கிறது அல்லவா.., அது மிகவும் நீண்டது.  உடனடியாக எழுதி விட வேண்டும், உடனடியாக பிரசவித்து விட வேண்டும், உடனடியாக இந்த உலகம் தன்னை பாராட்டி விட வேண்டும் போன்ற உணர்வுகள் இருக்கலாம்.

அதை நான் தப்பு என்று கூறவில்லை. அது சில எழுத்தாளர்களுக்கு இருக்கலாம். எனக்கு வந்து என்னுடைய பச்சை இருளன், என்னுடைய சத்துரு  என்னுடைய  ஓனான்குடி சுற்றிய  ராஜாவின் நினைவுகள், என்னுடைய கோழி, என்னுடைய நீர் .., இந்த எல்லா கதைகளும் என் மனதிற்குள் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நான் அடைகாத்தவை. அந்த கதைகளை நீங்கள் வாசிக்கும் பொழுதே, என் அணுக்கச் சூடு அந்தக் கதைகளில் இருப்பதை உங்களால் உணர முடியும்.  உடனடியாக எழுதி விட வேண்டும் என்கிற எந்த அவசரமும் எனக்கு இருந்தது இல்லை. எந்த பிரசவமும் எனக்கு தேவையில்லை  இந்த இடத்தில் தான் ஒரு வணிக பத்திரிகை எழுத்தாளனும், ஒரு சிறு பத்திரிக்கை எழுத்தாளனும்  வேறுபடுகிறார்கள்.

ஒரு வணிக எழுத்தாளனுக்கு  உடனடியாக அந்த கதைகளை பிரசுரம் செய்து, ஒரு சின்ன காசு பெரிய காசு எல்லாம் ஒன்னும் வராது.  அதை ஒரு பத்திரிக்கையில் பிரசுரித்து, ஒரு தொகுப்பு  ஒன்றை தயார் செய்து அவன் அப்படி பயணித்து விடுகிறான்.  ஆனால் ஒரு சிறு பத்திரிக்கை எழுத்தாளனுக்கு, அவனது கதை  பிரசுரம் ஆவதற்கு எவ்வளவு நாள் எடுத்தாலும், அவனுக்கு கவலை இல்லை. சிறு பத்திரிகை எழுத்தாளனுக்கு மட்டுமே  பிரசுரிக்கப்பட்ட கதைகளையும்  மறுபடியும் எழுதிப் பார்க்கும் சுதந்திரம் இருக்கிறது.

பிரசுரம் ஆகிவிட்டது என்றாலே அது முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை.., பிரசுரம் ஆகி இருக்கலாம் தொகுப்பில் வந்திருக்கலாம். அதற்குப் பிறகு கூட உங்கள் கிரியேட்டிவிட்டி வேலை செய்யலாம் ஏனென்றால் ஒரு எழுத்தாளன் என்பவன்  தொடர்ந்து  படைப்புக்கு தான் இயங்கிக் கொண்டிருக்கிறான்.  அந்த படைப்பு என்பது  பிரசுரம் ஆகிவிட்டவுடன்  அணைந்து போவது கிடையாது. தொடர்ந்து அவனுக்குள் ஒரு தணல் போல்  எரிந்து கொண்டே இருக்கும். பிரசுரத்திற்கு வந்த பிறகு கூட  தொகுப்பில் வந்த பிறகு கூட இந்த கதையை இப்படி எழுதிப் பார்க்கலாமே  இந்த கதையின் முடிவை இப்படி  யோசித்துப் பார்க்கலாமே, இந்த கதையின் உரையாடலை, இப்படி   நீட்டித்துப் பார்க்கலாமே என்று ஒரு எழுத்தாளனுக்கு தோன்றும் போது அந்த கதையை மறுபடியும் அவன் எழுதலாம்.

நான் அப்படி எழுதியும் இருக்கிறேன்.  ஆகையால் நான் கதை எழுத உட்காரும் பொழுது, யாரையும் மனதில் நினைத்துக் கொண்டு உட்கார மாட்டேன். வெறுமையான மனதோடுதான் அமர்ந்து எழுதுவேன்.  உதாரணத்திற்கு நட்சத்திரங்கள்  ஒளிந்துகொள்ளும் கருவறை என்று ஒரு கதை எழுதினேன்.

அந்த கதை நான் யாரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன் என்றால்  எங்கள் சானோர் வீடுகளில் தெருக்களில்  செக்கம்  அப்படின்னு ஒருத்தங்க இருந்தாங்க, ஊமையன் என்று ஒருவர் இருந்தார். அனைவருமே பஜனை கொஸ்டியோடு வருபவர்கள்.

ஊமையன் என்பவரை பற்றி தான் கதை எழுத வேண்டும் என்று நான் அந்தக் கதையை எழுதத் தொடங்கினேன். ஆனால் ஊமையன் காட்டு விலங்கு போல் அந்த கதையில் வந்து சென்று விடுவான். மேரி வில்லியம்ஸ் என்கிற  ஒரு பெண்ணின் கதையாக அந்த கதை மாறிவிட்டது .

ஆகவே ஒரு எழுத்தாளன் திட்டமிட்டு இவர்களைப் பற்றி தான் எழுத வேண்டும். இவர்களைப் பற்றி தான் நினைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எழுத தொடங்குவதில்லை.

கேள்வி 3 of 16:   நடைபாதை கடைகளில்  புத்தகங்கள் வாங்கிய அனுபவம்உண்டா?

பவா செல்லத்துரை: உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அப்படியான அனுபவம் எனக்கு இருந்ததே இல்லை ஏனென்றால் திருவண்ணாமலை  மாதிரியான ஒரு நகரமும் அல்லாத ஒரு கிராமமும் அல்லாத ஒரு ஊரிலிருந்து  சென்னையிலேயே வசிக்கிறவங்களுக்கு அல்லது நகரங்களில் வசிப்பவர்களுக்கு நடைபாதை கடையில் புத்தகங்கள் வாங்கின அனுபவம் இருக்கலாம்.

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் அப்படி  நிறைய அனுபவங்கள் தனக்கு இருப்பதாக பதிவு செய்திருக்கிறார்.  திருவண்ணாமலையில் இருந்து  எப்போதாவது தான் நான் சென்னைக்கு செல்வேன். எனக்கு அங்கு தங்கி  நடைபாதை கடைகளில் சுற்றி திரிந்து  புத்தகம் வாங்கும் தேவை ஏற்படவில்லை.

நான் தேடுகிற நவீன இலக்கியங்கள் சார்ந்த பழைய புத்தகங்கள் கிடைப்பது கொஞ்சம் கடினம் . ஆங்கில புத்தகங்கள் கட்டு கட்டாக கிடைக்கும். அப்படி ஆங்கிலத்தில் வாசிக்கக்கூடிய  எஸ் ராமகிருஷ்ணன் மாதிரியான ஆட்களுக்கு அது பொருந்தும், எனக்கு அது பொருந்தவில்லை. ஆகவே நடைபாதை கடையில் புத்தகங்கள் வாங்கிய அனுபவம் எனக்கு இல்லை. ஆனால் புத்தகக் கடைகள் எங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியும்.

திலீப் குமார்  மைலாப்பூரில் அவருடைய வீட்டிலேயே சின்னதாக ஒரு புத்தக ஸ்டால் வைத்திருந்தார்  அப்படியான இடங்களுக்கு நான் தேடி தேடிச் சென்று புத்தகங்கள் வாங்குவது உண்டு. நிறைய புத்தகக் கடைகளுக்கு சென்று இருக்கிறேன்..,பிராண்டான  புத்தகக் கடைகளை தவிர்த்து விட்டு   சில இடங்களுக்கு போனால் சில புத்தகங்கள் கிடைக்கும் என்று யூகித்து செல்வேன்.

எங்கள் ஊர் அருகில் கள்ளக்குறிச்சி என்று ஒரு ஊர் இருக்கிறது, அங்கே டீ.எம். நந்தலாலா  என்கிற நண்பர் சைக்கிள் கடை வைத்திருக்கிறார். இப்பொழுதும் அந்த கடை இயங்கிக் கொண்டிருக்கிறது.  அந்த கடையில் அவருக்கு பிடித்த சில எழுத்தாளர்களின் புத்தகங்களை  வைத்திருப்பார். அவரிடமிருந்து புத்தகங்களை பெறுவதற்கு எல்லாம்  நான் பஸ் ஏறி கள்ளக்குறிச்சி சென்று இருக்கிறேன். இப்படியான அனுபவங்கள் எனக்கு உண்டு. ஆனால் நடைபாதையில் கடைகளில் போய் புத்தகங்கள் வாங்கின அனுபவம் எனக்கு கிடையாது.

#நேர்காணல் தொடரும்…இங்கிலாந்திலிருந்து சங்கர்#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top