Close
ஜனவரி 14, 2025 10:35 மணி

உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைக்கப்பட வேண்டும்: பாரதிகிருஷ்ணகுமார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சான்றோர்கள்

புதுக்கோட்டை, ஜன : உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைப்பதுதான் அந்த படைப்பா ளியை அடையாளப்படுத்தும் என்றார் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதிகிருஷ்ணகுமார்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற விழாவில், ஆலங்குடி வெள்ளைச்சாமியின் ‘குலசாமியின் முத்தம்‘ என்ற கவிதை நூலை வெளியிட்டு  மேலும் அவர் மேலும் பேசியதாவது:

மொழிதான் மனிதனை நாகரிகம் உள்ளவனாக மாற்றுகிறது. மனிதனை அழகுபடுத்திய மொழியை கவிஞர் அழகுபடுத்துகிறான். யாருக்கும் தெரியாத சொற்கள் என்று கிடையாது. அதே நேரத்தில் வேறு, வேறு இடங்களில் கிடந்த சொற்களை அருகருகே கொண்வந்து கவிஞன் புதிய மொழியை உருவாக்குகிறான்.

எளிய சொற்களைப் பயன்படுத்தி வெள்ளைச்சாமி அழகிய கவிதைகளைப் படைத்து இருக்கிறார். எளிமையாக எழுதுவது எளிமையானது அல்ல.

உண்மைகளை சுமந்து நிற்கிறது இந்தத் தொகுப்பில் அறிவியலுக்குப் புறம்பாக ஒரு வார்த்தையும் இல்லை. எந்த இடத்திலும் கவிஞன் மண்டியிடவில்லை. அந்த வகையில் இது சிறந்த முற்போக்கு இலக்கியம் என வகைப்படுத்தலாம். ‘எல்லாவற்றையும் ஏறி மிதிக்கும் பசித்தவனின் வயிறு’ என்று ஒரு கவிதையில் எழுதி இருப்பார். இதுபோன்ற போர்க்குணம் மிக்க கவிதைகளை உள்ளடக்கியது இந்தத் தொகுப்பு.

புதுக்கோட்டை
விழாவில் பேசுகிறார், எழுத்தாளர் பாரதிகிருஷ்ணகுமார்

சமூகத்துக்கு என்ன சொல்லப் போகிறோம், அதை எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது எழுத்தாளனுக்கு உள்ள சவால். குழந்தை களுக்குச் சொல்வதானால், குழந்தைப் பருவத்துக்கே சென்று வாழ்ந்துவிட்டு, பிறகு நிகழ்காலத்துக்கு வந்து எழுத வேண்டும்.

சத்தியத்துக்கும் உண்மைக்கும் நெருக்கமாக எழுதுவது மிகவும் முக்கியம். உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைப்பது முக்கியம். அதுதான் படைப்பாளியை அடையாளப் படுத்தும். இன்பமும், வலியும், வியப்பும் என எல்லாமும் உண்மைதான். எனவே, எழுத்தில் எங்கும் பொய் இருக்க முடியாது, இருக்கக் கூடாது என்றார் பாரதி கிருஷ்ணகுமார்.

பின்னர் அவர் நூலை வெளியிட்டார். முதல் பிரதியை பேக்கரி மஹராஜ் குழுமத் தலைவர் அருண் சின்னப்பா  பெற்றுக் கொண்டார்.

ஸ்ரீபாரதி மகளிர் கல்விக் குழுமத் தலைவர் குரு.தனசேகரன், எம்எஸ் சுவாமிநாதன் ஆய்வு நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் நா.முத்துநிலவன், மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன், பேரா. மு.பாலசுப்பிர மணியன், புலவர் கு.ம.திருப்பதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக கவிஞர் நேசன் மகதி வரவேற்றார். கவிஞர் சு.பீர்முகமது நன்றி கூறினார். நிகழச்சியை கவிஞர் மகா சுந்தர் ஒருங்கி ணைத்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top