Close
நவம்பர் 24, 2024 9:17 மணி

புத்தகங்களை அறியலாம்…கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)

நூல் விமர்சனம்

கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)ஆசிரியர்: சிக்மண்ட் ஃப்ராய்ட். தமிழில் : நாகூர் ரூமி

புத்தகத்தின் பெயர்:கனவுகளின் விளக்கம்  (The interpretation of dreams) ஆசிரியர்: சிக்மண்ட் ஃப்ராய்ட். தமிழில் : நாகூர் ரூமி. பக்கங்கள்: 75 –வெளியீடு: பாரதி புத்தகாலயம்.

இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து மதங்களும் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. கனவுகளை அறிவியல் ரீதியாக பார்க்கும்படி, ஒட்டுமொத்த நம்பிக்கைகளையும் புரட்டிப் போட்டு இருக்கிறார் ஃப்ராய்ட்.இப்புத்தகத்தைப் படித்த பின் அவரவர் கனவுகளை அவரவர் விளக்கிக் கொள்ளலாம்.

ஆசிரியர் பற்றி:  சிக்மண்ட் ஃப்ராய்ட் 1856 இல் பிறந்தார்.
வியன்னா யுனிவர்சிட்டியில் மருத்துவம் பயின்ற இவர் மனித மூளைகளை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டினார்.பின் அவரது நண்பர்கள் ஹிப்னாடிஸம், ஃப்ரீ அசோசியேஷன் போன்ற முறைகளை தங்கள் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதை தானும் பின்பற்றினார்.

அப்பொழுது மனித மூளைகளை ஆராய்வதற்கு பதில் மனித மனங்களை ஆராய்வது அவசியமானது என்பதை உணர்ந்து 1897 முதல் கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினார். ஆரம்பத்தில், ஆழ்மனதில் உள்ள பாலுணர்வின் வெளிப்பாடே கனவு என்ற கருத்தைக் கொண்டிருந்தார் , பல எதிர்ப்புகளை சந்தித்த  பிறகு மற்ற உணர்வுகளும் மனித கனவுகளுக்கும் , மனித குணத்தை மாற்றக் கூடிய காரணிகளாகவும் இருக்கின்றன என்று ஒத்துக் கொண்டார்.1939 இல் இறந்தார். சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களின் ஆராய்ச்சியின்படி கனவுகளை எவ்வாறு விளக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கான சில குறிப்புக்களை இங்கே பார்க்கலாம்.

 குறியீடு: உதாரணமாக வட்டம் என்றால் நிலா. மென்மைக்கு ரோஜா மற்றும் பல.. அதற்கான உதாரணங்கள் விளக்கங்கள் புத்தகத்தில் தெளிவாக உள்ளன.

வெளி விஷயம் மற்றும் உள் விஷயம்: கனவு வருவதற்கு காரணமாக வெளிவிஷயமோ அல்லது ஆழ்மனதில் உள்ள ஒரு விஷயமோ காரணமாக இருக்கும்.வெளி விஷயத்துக்கு உதாரணம்,நாம் உறங்கும் பொழுது அருகில் கொசுவத்தி சுருள் எரிந்து கொண்டிருந்தால், நெருப்பு பிடிப்பது போல் கனவு வரலாம். உறங்குபவரது நெற்றியில் யாராவது ஐஸ் கட்டி வைத்தால் கனவில் வியர்ப்பது போலவோ அல்லது குளிர்வது போலவோ வரலாம்.  உள்விஷயத்திற்கு உதாரணமாக, சிறுவயதில் நாம் விருப்பப்பட்டு நமக்கு நிறைவேறாத ஆசைகள் ஞாபகங்கள் கனவில் வரலாம்

கனவின் குணாம்சம்:எந்த ஒரு கனவும், நாம் ஒரு சினிமா பார்ப்பது போல் முழுமையாக இருக்காது .கனவுகள் அனைத்தும் அபத்தமானதாகவும், தொடர்ச்சியற்றதாகவும் இருக்கும்.அதன் காரணமாகவே கனவுகளை நாம் ஞாபகம் வைத்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக படாததால் எளிதில் கனவுகள் மறந்து போகின்றன..

கனவின் ஞாபகசக்தி:பொதுவாக யானைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்று கூறுவார்கள். கனவிற்கு நூறு யானைகளின் ஞாபக சக்தி இருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.அதற்கு உதாரணங்களாக நிறைய கனவுகளை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். நாம் சிறுவயதில் பார்த்த ,செய்த சில நிகழ்வுகள் 20 வருடங்களுக்குப் பிறகு கூட நம் கனவுகளில் வரலாம். கனவு கழிவுகளை வெளியேற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுகிறது.நம் மனம் நீண்ட நாட்களாக சேர்த்து வைத்திருந்த குப்பையை வெளியேற்றி, மனதை பளிச்சென்று வைத்துக்கொள்ள கனவு பயன்படுகிறது.

கனவில் ஒழுக்கம்: கனவு காணும் பொழுது மனிதமனம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.நம்முடைய உண்மையான குணாம்சம் கனவில்தான் வெளிப்படுகிறது.ஒருவர் வெளிப்புறத்தில் எவ்வளவு ஒழுக்க சீலராக இருந்தாலும் அவரது ஆழ்மனதில் உள்ள கெட்ட விஷயங்கள் நிச்சயமாக கனவில் வந்து விடும் .  பொதுவாக கனவுகள் அனைத்தும் நம் விருப்பம் நிறைவேற்றுவதற்கான காரணிகளாக இருக்கின்றன.

சிறுவயதிலிருந்து நிறைவேறாத ஆசைகள், கனவின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன என்கிறார் ஃப்ராய்ட்.  கனவுகளால் விஷயங்களை சுருக்க முடியும் . நாம் கண்ட கனவை நான்கு வரிகளை கூறிவிட முடியும் என்றால் ,அதற்கான விளக்கங்கள் 40 பக்கங்களுக்கு இருக்கும் .

இயக்க தடை:கனவில் சிலநேரம் நம்மால் ஓடமுடியாது, பஸ், ரயில் ஆகியவை நம் அருகில் இருந்தும் அவற்றில் ஏறமுடியாது, இதற்கான காரணம், தூக்கத்தில் கை, கால்களை அழுத்தி படுத்திருப்பது. நம்மால் அசைக்க முடியாதபடி கையையோ காலையோ அழுத்தி உறங்கிக் கொண்டிருந்தோமானால் இம்மாதிரியான கனவுகள் வரலாம்.

அலட்சியம்: சில சமயங்களில் பரீட்சைக்கு தாமதமாகச் செல்வது, ஆசிரியரிடம் திட்டு வாங்குவது போன்ற கனவுகள் வயது முதிர்ந்தவர்களுக்கும் வரலாம் ,அதற்கு காரணம் சிறுவயதில் நாம் அலட்சியமாக செய்த தவறுக்கு ஆசிரியர்களிடம் திட்டு வாங்கியது போல், முதிர்ந்த வயதிலும் வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் அலட்சியமாக இருக்கும் சமயத்தில் இம்மாதிரியான கனவுகள் வரலாம்.

கனவுகளால் நம்முடைய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும்.கவலைக் கனவுகள் வந்தால் இதய நோய் இருப்பதற்கு அறிகுறியாக இருக்கலாம், அதற்காக அனைத்து கலலைக்கனவுகளும் இதய நோய்க்கு காரணம் என்று புரிந்து கொள்ளக் கூடாது. மேற்கண்ட அனைத்திற்கும் பல கனவுகளும் அதற்கான விளக்கங்களையும் அளித்திருக்கிறார்.புத்தகம் முழுக்க சிக்மண்ட் ஃப்ராய்டின் நோயாளிகள் கண்ட நிறைய கனவுகள் அதற்கான விளக்கங்களும் உள்ளன.

மொழிபெயர்ப்பாளர் ஃப்ராய்டை கேள்வி கேட்கிறார்,

மன நோயாளிகளை மட்டுமே ஆராய்ச்சி செய்துள்ளார், மனநோயாளிகள் கண்ட கனவும் ஆரோக்கியமானவர்கள் கண்ட கனவையும் எப்படி ஒன்றாக பார்ப்பது என்று.பிராய்ட் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.  பைத்தியம் என்பது விழிப்பு நிலையில் ஏற்படும் கனவு .இது ஒன்றை தவிர ஆரோக்கிய மானவர்களுக்கும் மன நோயாளிகளுக்கும் எந்த வித்யாசமும் இல்லை என்று.

பிராய்டின் ஆராய்ச்சிகள் அனைத்தும் பாலுணர்வு எனும் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்ததால் பல்கலைக்கழக நண்பர்கள் அவர் மீது குற்றச்சாட்டு வைத்தனர் . நிறைய நண்பர்கள் அவரை விட்டுப் பிரிந்தனர்.

மார்க்சிய பார்வை கொண்ட எரிக் ஃப்ரம் எனும் உளவிய ளாளர்,  ஃப்ராய்டின் பார்வை தவறு என்றும், கனவுகளை வர்க்க அடிப்படையில் அலசி ஆராய வேண்டும் என்றும் ,ஒரே கனவு வெவ்வேறு வர்க்கத்திற்கு வருமானால் அவை இரண்டுக்கும் ஒரே அர்த்தம் ஆகாது என்றும் கூறுகிறார்.

என்னதான் ஃப்ராய்டின் மேல் பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் ,முதன் முதலில் மனித மனங்களை அலசி ஆராய்ந்து கனவுகளுக்கான புதிய விளக்கங்களை அளித்து முன்னோர்களின் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து புரட்சியை ஏற்படுத்திய பெருமை அவரையே சேரும்.

நன்றி:அ. யோகானந்தி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top