அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்.. பாலகுமாரனின்.. இரும்பு குதிரை..
வாகனம் சார்ந்த தொழில் செய்யும் மனிதர்களான ஓட்டுனர், அவர்களது உதவியாளர், முதலாளிகள், இடைத் தரகர்கள், கூலிகள், பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களை சுற்றி தான் கதை நகர்கிறது. வாகன தொழிலின் தொழில் நுணுக்கங்களை அருமையாக இந்நாவலில் பயன்படுத்தி இருப்பார்.
பல வருட கூர்ந்த கவனிப்பும், கள ஆராய்ச்சியும் இல்லாமல் இது போன்ற நுணுக்கங்கள் சாத்தியமில்லை. வாகன கதைகளுடன் மனித கதைகளையும் அழகாக கோர்த்துள்ளார். வேறுபல அவரது படைப்புகளும் பலதரப்பட்ட தொழில்களை, அதன் நெளிவு சுழிவுகளை விலாவாரியாக பேசியிருக்கிறது.
இரண்டு லாரி கம்பெனிகள். ஒன்று காந்திலால் என்பவருக்கு சொந்தமானது, மற்றொன்று ராவுத்தருக்கு சொந்தமானது.
ராவுத்தரின் லாரிகள் இரண்டும் ஒரே நாளில் பிரச்சினைக்கு உள்ளாகின்றன. ஒன்று ஆளை அடித்து விட்டு வருகின்றது. இன்றொன்று கிணற்றை இடித்து தொற்றிக் கொண்டு நிற்கின்றது.
காந்திலாலின் லாரி, இன்னொரு நிறுவனத்தின் சுமையை ஏற்றி செல்லும் வழியில் காணாமல் போகிறது. அதைத்தேடி அந்த நிறுவன ஆளாக விஸ்வநாதன் போகின்றார். இங்குதான் கதை ஆரம்பம். இந்த நாவலில் விஸ்வநாதன் தான் முக்கிய கதாபாத்திரம். திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்பது ஆசை.
ஆனால் ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்கிறார். தான் செய்யும் வேலையில் இருந்து கொண்டே கனவு தொழிற்சாலைக்கான கனவினை வளர்த்துக் கொள்கிறான். உற்சாகமாக இருக்கும் நேரங்களில் குதிரைகளை மையமாக வைத்து கவிதைகள் எழுதுகிறான்.
அந்தக் கவிதைகள் இந்நாவலுக்கு மிக மிக அத்தியாவசி யமான ஒரு அம்சம். பலர் அந்த கவிதைகளில் லயித்து போக வாய்ப்பிருக்கிறது, எனக்கு குதிரைக் கவிதைகள‘ கடினமாக இருந்தது. உள்வாங்கிக் கொள்வதில் சிரமம் இருந்தது. இருப்பினும் நாவல் முழுவதும் வரும் குதிரை பற்றிய புதுக்கவிதைகள், வேகமாக போகும் கதைக்கு
தடைக்கற்களாக அமையவில்லை.
எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் நடுவில் போராடும் ஒரு சராசரி மனிதனான விஸ்வநாதனின் மனைவியாக வரும் தாரிணி பாத்திரம் யதார்த்தமாக படைக்கப்பட்டிருக்கிறது. கற்பனையில் பறக்கும் கணவனின் தலையில் தட்டி, தரைக்கு கொண்டு வருகின்றாள்.
இறுதியில் விஸ்வநாதனும் தாரணியும் அவனுடைய குதிரைக் கவிதைகளை புத்தகமாக வெளியிட யோசிக்கிறார்கள். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது இரும்பு குதிரைகள் என்று வைக்கிறார்கள். அப்போது இரும்புக்கும் குதிரைக்கும் இடையே “க்” வருமா என்பதான உரையாடல் ரசிக்கும்படியாக உள்ளது. இலக்கண மீறலை எழுத்தாளர் இலக்கிய நயத்துடன் சொல்கிறார்.
குடும்ப சூழல் காரணமாக தனது மாணவனும், இடைத்தரகருமான வடிவேலின் கடையில் வேலை செய்ய வரும் நாணுஅய்யர், தனது மகள் காயத்ரிக்கு காந்திலால் போக்குவரத்து நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறார்.
அதன் மூலம் விஸ்வநாதனுக்கு நாணு ஐயரின் நட்பு ஏற்படுகிறது. விஸ்வநாதன் கல்யாணமாகி குழந்தைகளுக்குத் தகப்பன் என்று தெரிந்தும் அவன் மூலமாக காயத்ரி குழந்தை பெற விரும்புகிறாள் .
திருமணத்திற்கு முந்தைய இணைந்து வாழ்தல் என்கிற உறவு முறை ஒழுக்கமான முறைதானா என்கிற விவாதம் நம் கலாசாரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே காயத்ரியின் இந்த ஆசை நியாயமானதுதான் என்று தகப்பன் நாணு அய்யரும் ஒத்துக்கொள்கிறார்.
ஆனால் இந்த விபரீத ஆசைக்கு விஸ்வநாதன் மறுத்து விடுகிறான். புதினத்தில் காயத்ரி பாத்திரம் மட்டுமே சலிப்பை தருகிறது. அவளது அறிவிஜீவித்தனமான பேச்சுகள் ஜீரணிக்கும் படியாக இல்லை. அதற்காக பெண்கள் அதிபுத்திசாலிகளாக தங்களை காட்டிக்கொள்ளக்கூடாது என்கிற கட்டுப்பெட்டி கருத்தியல்வாதி நானில்லை.
நாவலில் நயமான நல்ல பாத்திரங்களும் உண்டு. ஒரு நல்ல முதலாளி என்பவன் தான் வளர்வதுடன், தன் தொழிலாளர் களையும் சேர்த்து வளர்க்க வேண்டும். இப்போதும் அது போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். ராவுத்தர் பாத்திரம் அப்படிப்பட்ட ஒன்று. பாலகுமாரனின் பெரும்பாலான படைப்புகளை போன்றே இந்த புதினத்திலும் பிராமண மொழி நடை உண்டு. அத்தனை கதாபாத்திரங்களின் வாழ்விலும் ஏதோ ஒரு விதத்தில் வந்துக் கொண்டே இருக்கிறது.
யாரோ ஒருவருடைய வியாபார தந்திரம், மற்றொருவருடைய வியாபாரத்தை சாய்க்கிறது என்கிற சூத்திரத்திற்குள் வந்து போகும் .. லாரியின் முதலாளி, லாரி ஓட்டும் டிரைவர், லாரிக்கு லோடு பிடித்து தரும் தரகர்கள், க்ளீனர்கள். லாரியில் பணம் கொடுத்து செல்லும் பயணிகள், இவர்களை நம்பி பிழைக்கும் சாலையோர சல்லாப இரவு தாரகைகள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் பையன்கள்.
இப்படி பல பாத்திரங்களை பிடித்து இழுத்து தொகுத்து காட்டுகின்றார். கதைமாந்தர் வாயிலாக இயல்பாக வரும் சின்ன சின்ன விஷயங்களை, உணர்வுகளை, வாழ்க்கை முறைகளை நேர்த்தியாக சொன்ன இந்த படைப்பு பாலகுமாரனின் வியக்க வைக்கும் காலத்தால் அழிக்க முடியாத படைப்பு என்றால் மிகையல்ல.
எனது கல்லூரி காலத்தில் பாலகுமாரன் தவிர்க்கமுடியாத எழுத்தாளர் என்பதை உணர்ந்த அந்தப் பருவத்தில், அவரது படைப்புகள் அனைத்தையும் தேடி தேடி வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் வெளிவராத அவரது படைப்புகள் மட்டுமே நான் வாசிக்காதவை என்கிற அளவிற்கு இருந்தன.
பத்திரிகைகளில் ஒரே காலத்தில் ஏழு தொடர்களை எழுதியவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். கூடவே பாக்கெட் நாவல் பதிப்பில், புயலாக வந்த ஜி. அசோகன் அவர்களுடன் பாலகுமாரன் கைகோத்து வெளியான படைப்புகளும் பிரபலம் அடைந்த சமயம் அது. பெரும்பாலான புத்தகங்களை நூலகத்தில் எடுத்து வாசிக்கிற நான், பாலகுமாரனின் புத்தகங்களை எப்படியாவது விலை கொடுத்து வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அளவிற்கு அவரது எழுத்துக்களுக்கு விசிறியாக இருந்தேன்.
அவர் எப்போது விசிறி சாமியாருக்கு விசிறியாகி போனாரோ அன்றிலிருந்து அவருக்கு நான் விசிறி என்கிற நிலையில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்தேன். அது அவரது நிலைப்பாடு. திருவண்ணாமலை ஐக்கியத்திற்கு பிறகான அவரது படைப்புகளில் எனக்கு தேவையான ஏதோ ஒன்று காணாமல் போனதாக உணர்ந்தேன்.
அதன் பிறகு அந்த எழுத்து சித்தரின் எழுத்துகளை வாசிக்கவில்லை. எதுவாக இருப்பினும் தீவிர இலக்கிய வாசிப்பு என்னும் சீரிய இடத்துக்கு என்னை ஏற்றிவிட்ட ஏணியே, பாலகுமாரனின் வெகுஜன இலக்கியம்தான். அவரது படைப்புகளை, மீள் வாசிப்பிற்கு உட்படுத்தும் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு மெல்லிய பூங்காற்று கன்னத்தை வருடி விட்டு தான் செல்கின்றன.
விமர்சகர்: சண்.சங்கர், லண்டன், இங்கிலாந்து.