Close
நவம்பர் 24, 2024 12:16 காலை

புத்தக அலமாரியிலிருந்து… ஹோமரின் இலியட்-ஒடிஸி..

நூல்விமர்சனம்

ஹோமரின் இலியட்-ஒடிஸி

கிமு 8 -ஆம் நூற்றாண்டில் ஹோமர் எழுதிய கிரேக்க இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்பு இலியட் மற்றும் ஒடிஸி ஆகும். இவை இரண்டில் இலியட்டை முதலில் வாசிக்கலாம். இலியட்டின் தொடர்ச்சி ஒடிஸி என சொல்லப்படாவிட்டாலும் அதன் தொடர்ச்சியாக ஒடிஸியை வாசிக்கலாம்.

பார்வையில்லாத ஹோமர், கதைகளை கவிதைகளாக சொல்ல சொல்ல அவருக்கு பின்னால் வந்தவர்கள் தொகுத்து வைத்ததாகவும், ஒடிஸி படைப்பாக்கத்தில் ஹோமர் பங்கு இருக்கவில்லை எனவும், இப்படைப்புகளின் காலம் கூட ஒரு தோராயக்கணிப்பு என்கிற கூற்றும் நிலவுகிறது.

எது எப்படியாகினும் கிரேக்க இலக்கிய மரபில் ஹோமரின் தாக்கம் இருந்தே வந்திருக்கின்றன. அவரது வரிகள் உலகளவில் மேற்கோள்களாக பெரிதளவில் காட்டப்பட வில்லை (நம்ம கம்பன் அளவிற்கு அல்ல)என்றாலும்,  இந்த இரட்டை காப்பியங்கள் உலக சிந்தனைகளில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தாமலில்லை.

இலியட், ட்ரோஜன் போரின் கதை, இது வாசிப்பவர்களுக்கு பல தார்மீக பாடங்களை, தலைவர்கள் எப்படி தங்கள் வீரர்களை மரியாதையுடன் நடத்துவது, மன்னிப்புகளை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் குடும்ப பிணைப்புகளை மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்குகிறது.

ஓடிசியஸ் என்னும் மாபெரும் வீரனின் கதைதான் ஒடிசி காவியம். காதலும் வீரமும் வரிக்கு வரி ததும்புகிறது. ஒரு பெண்ணும் அவளுக்காக நடக்கிற யுத்தமும் தான் கதையின் அடிநாதம் என எளிதாக சொல்லிவிடலாம்.  ஒரு ஐந்து புள்ளிகளில் இரண்டு இதிகாசங்களையும் கீழ்வருமாறு ஒப்பீடு செய்யலாம்.
இலியட்:
1) ஒரு யுத்தம் பற்றியது. போர், பதுங்கியிருத்தல், தாக்குதல், சண்டைகள் குறித்தது.
2) ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடைபெறுகிறது, முக்கியமாக டிராய் கடற்கரை மற்றும் அதை சுற்றிய நகரம் சூழ்ந்து.., போரின் 50 நாட்களை மட்டுமே விவரிக்கிறது, இருப்பினும் நாம் முழு நிகழ்வுகளையும் பார்த்த உணர்வைப் பெறலாம்..,
3) கதையில் அரக்கர்கள் கிட்டத்தட்ட இல்லை என சொல்லலாம்.
4) கடவுள்கள் மனிதர்களை போலவே சண்டையிடுகிறார்கள், கோபப்படுகிறார்கள், ஒருவரையொருவர் மற்றும் மனிதர்களை ஏமாற்றுகிறார்கள், மேலும் மனிதர்களால் தோற்கடிக்கப்படுகிறார்கள்.
5) முடிவு மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும், மிக ஆழமானதாக உள்ளது.

ஒடிஸி:
1) வீடு திரும்பலில், அதற்கான பயணம் பற்றியது. அனைத்து வகையான புராதானம் மற்றும் வரலாற்று இடங்களை நேரடியாக உள்ளடக்கியது.
2) ஒடிஸியஸின் பயணத்தின் கடைசிப் பகுதியை மட்டுமே விவரிக்கிறது, இருப்பினும் பழைய சாகசங்களையும் காணலாம்.
3) எல்லாவிதமான அரக்கர்களும் விசித்திரமான இடங்களும், மனிதர்களும் இருக்கிறார்கள்.
4) கடவுள்கள் ஓரளவு மரியாதைக்குரியவர்களாக சித்தரிக்கப்படுகிறது.
5) மகிழ்ச்சியான முடிவைக் கொண்டுள்ளது.

ஹோமரின் ஒப்பற்ற கவித்துவ புதையலை பக்கத்துக்கு பக்கம் பார்க்கலாம். இருபத்தி நான்கு அத்தியாயங்களை கொண்ட ஒரு காவியக் கவிதையில் ஆரம்பகால கிரேக்க தொன்மங்கள் மற்றும் புனைவுகள் உள்ளன.சாகசம், மர்மம், முன் வரலாற்றைப் பற்றிய புரிதல் இவற்றை விரும்புவர்கள் இந்த புத்தகத்தை படிக்கலாம்.

-விமர்சனம்: சண்.சங்கர், லண்டன்-இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top