Close
நவம்பர் 21, 2024 11:41 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்…

நூல்விமர்சனம்

எனது அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்

சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்.. 1966 -இல் நவம்பர் 7 -ஆம் தேதி தொடங்கிய அவர் பொலிவிய பயணம், அங்கு நிகழ்த்திய புரட்சியின் போக்கு என தொடங்கி, 1967 அக்டோ பர் மாதம் 7 -ஆம் தேதி அதாவது அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் சிஐஏ வின் ஆதரவு பெற்ற பொலிவிய துருப்புக்களுக்கு எதிரான அவரது கொரில்லாப் போர் முறையை, போரிடுவதில் கையாண்ட மாற்று யுக்தியை அது சார்ந்த விவரத்தை குறிப்பேட்டில் குறிக்க தவறவில்லை. சேகுவேரா.

வனப்பகுதிகளில் முன்னேறிய அவரது தலைமையில் ஆன புரட்சிப் படை சறுக்கலை சந்தித்தாலும், அவரது சக புரட்சி யாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை, உற்சாகத்தை தரும்படியாக வார்த்தைகளை இறுதிவரை சொல்லி கொண்டே இருந்தார்.

பொலிவியாவை இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து விடுவிப்பதற்கான அவரது ராஜதந்திரம், ராணுவத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அவரது சிறிய படை ஆரம்பத்தில் பொலிவியன் இராணுவத்தை விஞ்சியது. ஒரு அரசியல் மாற்றத்தை அடைவதற்கான ஒரு தேர்ந்த முகவராக, கொரில்லா போர்முறையின் நம்பிக்கை நாயகனாக, பல கோடி கணக்கானவர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட சே, ரசிகர்களையும் எதிரிகளையும் ஒரே மாதிரியாகக் கவர்ந்த ஆளுமையாகவே இருந்தார்.

பொலிவிய நாட்குறிப்புகள் அவரது இறுதி நாட்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு எனலாம். அவரது இறப்பிற்கு சற்று முன்பு நிறைவுபெற்ற ஒரு கூர்மையான கையேடு மற்றும் விலைமதிப்பற்ற வரலாற்று ஆதாரம். அவரது மரணத்திற்குப் பிறகு, தோளில் தொங்கிய பையில் இந்த நாட்குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன. இறப்பிற்கு பின் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், சே உலகம் முழுவதும் புகழ் பெற உதவியது.

இந்த நாட்குறிப்பு தொகுப்பில் பிடல் காஸ்ட்ரோவின் அறிமுக உரையும், கேமிலோ குவாராவின் முன்னுரையும் இடம் பெற்றுள்ளது. இந்த டைரி புரட்சிகர வாழ்க்கையில் ஒரு போராளியின் எழுச்சியூட்டும் பதிவாகவும், நிகழ்கால எதிர்கால போராளிகளை நகர்த்தி செல்லும் நினைவுச் சின்னமாகவும் இருக்கும்.

ஒவ்வொரு கொரில்லா போராளியும் அவர்கள் வகுத்த ஒரு யுக்தியை பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, அந்த யுக்தியை களத்தில் யதார்த்தமாக்கி அந்த யுத்தத்தில் இறப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் கரந்தடி போர் முறையில் எழுதப்படாத சட்டம். அதை நிரூபித்தவர் சேகுவேரா.

எனது வீடு என்பது எனது இரு கால்கள்  என்று பயணத்தின் மேல் தீராக் காதல் கொண்ட, உலகையே சுற்றிப் பார்க்க விரும்பும் பயணிகளுக்கான முன்னோடியாக, பயணம் செய்யும் இடத்தின் மண்ணையும் மக்களையும் நேசித்த, தன்னுடைய பயணங்களில் இருந்தே ஒரு போராளியாக உருவெடுத்த சே என அன்போடு அழைக்கப்பட்ட சேகுவேரா வை தெரிந்துக்கொள்ள இந்த ஆவணம் ஓரளவிற்கு உதவும். வாசியுங்கள், வாய்க்கும் போது.

விமர்சனம்: சண். சங்கர், லண்டன்- இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top