சிவகங்கையில் 110 அரங்குகளுடன் முதல் புத்தக திருவிழா ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் அளவில் நடைபெறவுள்ளது.
அத்துடன் சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள பொருள்களும் இதில் இடம்பெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் புத்தகத் திருவிழா வருகின்ற ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது .
இந்த புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 600 நபர்கள் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு பொதுமக்களின் இயக்கமாக நடத்துவதற்கும், மாவட்ட மக்கள் அனைவரிடமும் புத்தக வாசிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறுவயதிலேயே புத்தக வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் நோக்கில் இது அமைக்கப்பட உள்ளது.
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் புத்தக கண்காட்சி திறக்கப்பட்டிருக்கும். மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெறும். கூடுதலாக கீழடி அகழ்வாராய்ச்சி பொருள்கள் இந்த புத்தக கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.