Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… ஃபிரான்ஸ் காஃப்காவின்.. தி ட்ரையல்..

அலமாரியிலிருந்து

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் -டிரைய்ல்

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்..ஃபிரான்ஸ் காஃப்காவின்  “தி ட்ரையல்“..

ஒரு சமூகத்தின் அபத்தத்தை அனுபவிக்கும் ஒரு பாத்திரத்தைப் பற்றி நீங்கள் படிக்கும் போது இது உங்கள் ஆன்மாவில் ஏற்படுத்தும் ஒட்டுமொத்த விளைவு எப்படி இருக்கும் என இந்த, தி ட்ரையல் புதினத்தை வாசிக்கும் போது உணரலாம்.

ஒரு சாதாரண தொழிலாளி, இந்த நூற்றாண்டின் சராசரி மனிதர்களான நம்மில் ஒருவனாக விடுதியொன்றில் தங்கி தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஜோசப் கே. எந்த முகாந்திரமும் இல்லாமல் படுக்கையில் இருந்து எழுந்தி ருக்கும் முன்பே கைது செய்யப்படுவதும், எப்படியாவது குற்றத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முயல்வதும், நீதி அமைப்பின் குளறுபடிகளால் தன் மீதான தவறாக போடப்பட்ட வழக்கின் வழியாக, அதை சரிசெய்வ தற்காக எதிர்த்து போராடுவதும், படிப்படியாக நம்பிக்கை இழந்து இறுதியாக சட்டத்தின் இரும்பு பிடியில் இருந்து வெளிவர முடியாமலேயே இறந்து போவதும் தான் கதை.

ஜோசப் கே, கைது செய்யப்பட்டவனே தவிர அவனுக்கு எதுவுமே மறுக்கப்படவில்லை. தாம் கண்ணுக்குப் புலனாகாத ஒரு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறோம் மற்றும் விரட்டப்படுகிறோம் என்ற பிரக்ஞை தரும் தீராத வலியுணர்வைத் தவிர. எந்த உரிமையும் தன்னிடமிருந்து பறிக்கப்பட விட்டாலும் இறுதியில் தான் செய்த குற்றம் எதுவென்று தெரியாமலேயே 31 -ஆவது பிறந்த நாள் அன்று, இருட்டறையில் இரண்டு காவலர்களால் தண்டிக்கப்பட்டு உயிர் துறக்கிறான் என வாசிக்கிற போது சமீபத்தில் நடந்த காவல் நிலைய மரணங்கள் நம் கண் முன் வந்து போகின்றன.

ஆசிரியரின் உளவியல் சிக்கல்கள் மற்றும் விளைவுகளை, இந்த நாவலில் பாத்திரப்படுத்த நாயகனுள் நேரடியாக ஈர்க்கப்பட்டதை காணலாம். காஃப்கா அதிகாரத்துவத்தின் பெரும் சக்தியை, புரிந்துகொள்ள முடியாத மற்றும் அர்த்தமற்ற விதிகளால் திணிக்கப்பட்ட மூச்சு திணறலாக சித்தரிக்கிறார்.

தன்னை நியாயப்படுத்தி கொள்ளும் அதிகாரத்துவம், அதிகாரத்துவம் தனக்காக சொல்லிக்கொள்ளும் சுயகாரணம் மற்றும் அந்த மாபெரும் அரக்கனை எதிர்க்க முயற்சிக்கும் வலுவிழந்த தனிமனிதனின் போராட்ட குணம் – இது காஃப்காவின் அனைத்து கதைகளிலும் சொல்லப்படுகிறது.

காஃப்காவின் “தி ட்ரையல்” படைப்பின் மூலமாக இந்த சமூகத்தில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு சுதந்திரமான இருத்தலியல்வாதியின் முதல் கணக்கு பதிவு செய்யப்பட்டது எனலாம். சொல்லப்படாத கோரிக்கைகளின் தொகுப்பை ஒரு சாமானியனின் தலையில் எவ்வாறு இந்த சமூகம் வைக்கிறது என்பதை நாவல் பேசுகிறது. உண்மையில் பேசப்படாத மற்றும் எழுதப்படாத இந்த சட்டம் என்னவென்று யாருக்கும் தெரியாது.

இந்த கோரிக்கைகள் வழித்தோன்றலாக தொடர்ந்து சமூக நெறிமுறைகளின் சட்டமாக கட்டமைக்கப்பட்டு, மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலமே நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உறவுகளின் அகநிலை அம்சங்களில் எது “சரியானது” அல்லது “தவறு” என தீர்மானிக்கப்பட்டது சோகம் என்பதை தன் எல்லா படைப்புகளிலும் சொல்ல தவறியதில்லை.

ஒருவேளை சமூகத்திலிருந்து உள்ளார்ந்த தத்துவங்களையும் நாம் பெற்ற தார்மீக நெறிகளையும் தூக்கி எறிந்தால், ஒவ்வொரு தனிமனிதனின் செயல்களின் சரியான தன்மையைஅளவிடுவதற்கு எந்த வழியும் இருக்காது.

பொருத்தமற்ற சமூக நடத்தைகளை , சமூகத்தில் பொருத்தி பார்த்து அதுவே சரி என்கிற உணர்வை தந்து விடக்கூடும் என காஃப்கா அஞ்சினார்.அந்த பயத்தை அவர் இறக்கும் வரையில் அவரால் இறக்கி வைக்க முடியவில்லை.  இருத்தலியல் வாதிகள் சுதந்திரமானவர்கள், ஒருவேளை பொறுப்பற்ற நிலைக்குத் துணிந்தவர்கள் என்று நீட்சே கூறியது நம் நினைவுக்கு வருகிறது.

பின்வரும் காரணங்களுக்காக நீங்கள் காஃப்காவைப் படிக்க வேண்டும்: சொந்த வாழ்க்கையில் மிகவும் வேதனைப்பட்ட ஒருவரின் படைப்புகளை நாம் படிக்க வேண்டும் எனில் ,
மக்கள் தங்கள் வாழ்வில் எப்படி சிக்கிக் கொள்கிறார்கள் அல்லது அவர்கள் எப்படி மற்றவர்களின் பிடியில் விழுந்து முற்றிலும் கையறு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதைப் பற்றி படிக்க வேண்டும் எனில்.. ஒரு ஓவியம் அல்லது ஒரு இசை போல, தனது கதைகள் மூலம் தன்னை வெளிப்படுத்திய காஃப்காவை படிக்க வேண்டும்.

காஃப்கா உரைநடை ஒரு அழகு ஒவ்வொரு கதையும் நமக்கு பல சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. அசாத்திய அர்த்தம் பொதிந்த எழுத்துலகிற்கு தன்னை உருமாற்றிக்கொண்ட காஃப்கா..யதார்த்த பாணியில் எழுதப்பட்ட நாவல்களில் தேவையற்ற அலங்காரங்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கை யை வெளிப்படுத்துகின்றார். அவரது படைப்பு களில் சொல்லப்படாதவை ஏராளம்.வாசகர்களாக நாம் தான் நம் சுய சிந்தனைகள் மூலம், அவர் சொன்ன குறியீட்டு உலகத்தின் நவீனத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

விமர்சகர்: சண்.சங்கர்-லண்டன்-இங்கிலாந்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top