கவிஞர் மீராவின்… கனவுகள்+ கற்பனைகள் =காகிதங்கள்…
“நீ எனக்கு காதலைத் தந்தாய்; அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது . நான் உனக்கு இந்த வசன காவியத்தைத் தருகிறேன்; இது ஏழையின் கண்ணீரைப் போல் உண்மையானதா என்று பார்” – மீராவின் இந்த தொகுப்பில் இதுப்போன்ற எளிமையான வரிகளுடன் வலிமையான அர்த்த செறிவுடன் கூடிய வசன கவிதைகளை காணலாம்.
என்பதுகளின் இறுதியில் கல்லூரி வாசலை தொட்டவர்களில் பெரும்பாலோனோர் இந்த கவிதைப் புத்தகத்தை கண்டிப் பாக தொட்டிருப்பார்கள். காதலில் விழுந்தவர்கள் கைகளிலும்
காதலில் விழ துடித்தவர்கள் கைகளிலும் இந்த புத்தகம் தவழ்ந்தது. காதலுக்கும் பெருமை கவிஞருக்கும் அது பெருமை.
கவிதையல்ல ஆக்கிக் கொள்ளலாம், கதையல்ல அமைத்துக் கொள்ளலாம் என்று இந்த தொகுப்பில், புதிய முயற்சியை வரையறுத்திருப்பார் மீரா. எனது கிறுக்கல்களை புத்தக வடிவில் அச்சிட்டபோது அதன் தலைப்பு கவிதையல்ல.., ஆக்கிக்கொள்ளலாம் என்பதாக அமைந்தது கூட விபத்தல்ல திட்டமிட்டே வைக்கப்பட்டது என சொல்லலாம்.
மேலும் என்னால் எழுதப்பட்ட பல கவிதை துணுக்குகளில்
மீராவின் தாக்கமும் செல்வாக்கும் பெரிதளவு விரிந்து கிடப்பதை உணரலாம். அதை சொல்வதில் எனக்கு சற்றும் கூச்சமில்லை.
கவிதை எழுதுபவர்களுக்கு காதல் என்பது கிரியா ஊக்கியா வும், கச்சாப்பொருளாகவும் அமைவது கட்டாய யதார்த்தம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கவிஞர்கள் தொடங்கி, இன்றைய கவிஞர்கள் வரையிலும் இந்த தொடர்பு அறுப்படாமல் தொடர்கிறது. கனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள் தொகுப்பிலும் கூட.
வாசிக்காதவர்கள் ஒருமுறையேனும் வாசியுங்கள், வாசித்தவர்கள் இன்னும் ஒருமுறை வாசியுங்கள்..,
கடந்த கால நினைவுகளின் பதிவு உங்கள் மனத்திரையில் ஓடும், நீங்கள் மட்டுமே அனுபவித்த அந்த உணர்வு
உண்மையாக ஒருமுறை கண்திரை முன் வந்து போகும்.உறங்கும் கால நிகழ்வு ஒருமுறை உசுப்பி விடப்படும்..,
விமர்சகர்: சண்.சங்கர்-லண்டன்-இங்கிலாந்து.