Close
நவம்பர் 22, 2024 4:27 காலை

பாவேந்தர் பாரதிதாசன்(ஏப்.21) நினைவுநாள்…

பாரதிதாசன்

பாரதிதாசன் நினைவுநாள்(ஏப்.21)

ஒரு இயக்கத்தின் மீதான அதீத பிணைப்பால் சாதியை மட்டும் உக்கிரம் கொப்பளிக்க சில எழுத்துகள் உவப்பாக இல்லையென்பதை தவிர்த்து மற்றபடி அவரது படைப்புகள் அனைத்துமே ஒரு மகாகவிக்கு உரிய ஆழத்தோடும் விரிவோடும் சுவையோடும் பெருமையோடும் அமைந்தவை. இருந்தும் கூட அவரின் காழ்ப்புணர்ச்சி தொனித்த அவரது எழுத்துகள் கூட என்னை ஈர்த்தன.

கல்லூரி பருவத்தில் எனக்கில்லாத யாப்பிலக்கண அறிவினால் (இன்றுவரையும் இல்லையென்பது வேறு விஷயம்). அவர் பலவாறாக அமைத்த யாப்புகளையும் சந்தங்களையும் உணர்ந்து படிக்க இயலாமல் போனது.
இயற்கையை பாடிய ராபர்ட் ஃபிராஸ்ட் என்னை மிகவும் கவர்ந்தவர். ஆனால் வோர்ட்சுவொர்த்து, பிராஸ்ட்டு ஆகியவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டவர் நம் நறுக்கு மீசைக்காரன். கவிஞன் என்றால் நடப்பை மறந்து கனவுலகில் திரிபவன் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. அதை தகர்ந்தெறிந்தவர் பாவேந்தர்.

தனது சமூகத்தின் இன்னல்களை, பாட்டாளி மக்களின் படும்துயரை, தனது சொற்களால் காலத்தின் ஏட்டில் செதுக்கியவர்.
இலக்கிய விவாதங்களில் பாரதிதாசனுடைய பேச்சு, எழுத்து இரண்டுமே நுட்பமும், ஆழமும் பொருந்தி இருக்கும். கவிதைகளை எழுதுவதிலும், திரைக்கதை−வசனம் எழுதுவதிலும் காட்டிய ஆர்வத்தை, ஏனோ திரைப்படப் பாடல்கள் எழுதுவதில் பாரதிதாசன் காட்டியதே இல்லை.

முதியோர் காதலையும் , பட்ட மரத்தையும் பாடுபொருளாக் கிய ஒரே இந்திய கவிஞர் பாரதிதாசனே ஆவார்.எனக்கு இரண்டு கவிதைகள், நான் படித்ததில் மிகவும் பிடிக்கும். இரண்டுமே திரைப்படத்தில் பாடலாக வந்துள்ளது.
1. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா…
2. அவளும் நானும் அமுதும் தமிழும்.. முதல் பாடல், ஒருவரின் துணை கலையை கற்று இருந்தாலோ அல்லது கலை ரசனை யுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனியதாக இருக்கும் என்பதையும், இரண்டாவது பாடல், ஒரு ஆண் அவனும் அவனுடைய துணையும் எப்படி சிறப்பாக ஒத்துப் போக வேண்டும் என்பதை சொல்வது போலவும் உள்ளது.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top