அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் சு.வெங்கடேசனின் வேள்பாரி…
நவீன தமிழ் கதை மரபில் தடம் பதித்த எழுத்துகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். உலக சினிமா, உலக இலக்கியம்
என நம்மை திசை திருப்பிய காலத்தை, மெல்ல மெல்ல மலையேற செய்து, நம் சொந்த இலக்கியங்களை உலக அரங்கில் பேச வைக்கிற முயற்சியை தோழர்சு.வெங்கடேசன் போன்ற ஆளுமைகள் சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கின்றனர்.
இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதி வடிவம் தான் வேள்பாரியின் கதை என்கிற போது, அதை உடனே படிக்க வேண்டும் என்கிற ஒரு துடிப்பு உள்ளுக்குள் உருவாகியதன் விளைவாக முதல் பாகத்தை முடித்து விட்டேன்.
மேம்போக்காக புரட்டி பார்த்தால் கூட, வீரயுக நாயகன் வேள்பாரி பற்றிய சுவையான தகவல்களை உள்வாங்கி கொள்ள உள்ளுக்குள் ஒரு உந்துதல் இயல்பாய் பிறந்து விடும்.
பெரும்பாலான புதினங்கள் மற்றும் திரைப்படங்கள் கதாநாயகனை சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும். கதாநாயகன் என்றாலே அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். அவன் எப்பொழுதும் வலிமை வாய்ந்தவனாக சித்தரிக்கப் பட்டு இருப்பான். மிகைப்படுத்தப்பட்ட கதாநாயகத்தனம் தூக்கலாக காட்டப்படுவது எழுதப்படாத மரபு.
வேள்பாரியில் அதெல்லாம் இல்லை. வேள்பாரிக்கு என ஒரு சில தனித்திறமைகள் இருக்கும். அதே போல் புதினத்தின் மற்ற அனைத்து வீரனுக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகள் இருக்கும். இரண்டையும் சொல்லத் தவறவில்லை. சாதாரணமாக கதாநாயகன் உட்பட இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்கள் தான் மனதில் பதியும்.
வேள்பாரியில் ஒவ்வொரு வீரனும் தன் திறமையால் அதை வீழ்த்தி நமக்குள் எளிதாக உட்புகுந்து விடுகின்றனர்.
அவர்களை கையாள தெரிந்து வழிநடத்தும் தலைவன் வேள்பாரி, போருக்கு வகுக்கப்படும் வியூகங்களும் அதை வீழ்த்த கையாளப்படும் யுக்திகளும் அபாரம்.
ம செ வின் நேர்த்தியான ஓவியங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. காட்டை பற்றி, அதன் விலங்கினங்களை பற்றிய பெரிய தகவல் களஞ்சியத்தை பாரியின் வீரத்தோடும் பரம்பு மக்களின் வாழ்க்கையோடு தூவி அலங்கரித்திருக் கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். வாசிக்க வேண்டிய புத்தகம்
இங்கிலாந்திலிருந்து… சங்கர் 🎋