Close
நவம்பர் 22, 2024 10:37 காலை

அலமாரியிலிருந்து… எழுத்தாளர் ஜெயமோகனின்.. சிறுகதைத் தொகுப்பு… அறம்…

அலமாரியிலிருந்து..

எழுத்தாளர் ஜெயமோகனின் அறம்- சிறுகதை தொகுப்பு

அலமாரியிலிருந்து. புத்தகம்.. எழுத்தாளர் ஜெயமோகனின்.. சிறுகதைத் தொகுப்பு… அறம்..

நவீன தமிழ் இலக்கியத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய சிறுகதை தொகுப்பு “அறம்”. ஒவ்வொரு கதையும் உண்மை மனிதர்களின் கதை என்பதால், வாசிப்பு பழக்கமற்ற பலரும் வாங்கி வாசித்த படைப்பு இது.

இக்கதைகளில் உள்ள நாயகர்கள் உண்மையான மனிதர்கள். சமகால மனிதனின் அறத்தில் தோய்ந்த பெருவாழ்க்கையை ஒரு படைப்பு சொல்கிற போது, அதை வாசிப்பதின் மூலம் இழந்த அந்த நம்பிக்கையை, அறவிழுமியங்களை நாம் மீட்டுக்கொள்ளலாம் என்கிற உயரிய எண்ணம் தான் வாசகர்களை வாசிக்க சுண்டி இழுக்கிறது.

இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பன்னிரண்டு கதைகள், இந்த சிறுகதைத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த போது பெரும் வாசக வரவேற்பைப் பெற்றன. இணையதளத் திலேயே இவ்வளவு சிறுகதைகள் வெளியாகியது. தமிழிலக் கிய சூழலில் முக்கியத்துவம் உடைய முன்னோடி நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அறம் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் உள்ளன:

1. அறம்: ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த ஒரு எழுத்தாள னின் வாழ்க்கை; அந்த காலங்களில் எழுதுபவர் களுக்கு இடையேயான உறவு எப்படி இருந்தது என்பதை அழகாய் உணர்த்தும் கதை.

2. சோற்றுக்கணக்கு: ஈகை பண்பை அப்பட்டமாக விளக்கும் கதையிது. இந்த கதையின் நாயகர் நம்மிடையே அதிகம் பேசுவதில்லை. அவரது கரங்கள் தான் பேசுகின்றன. அள்ளி அளித்துக் கொண்டே இருப்பது மையம்.

3. மத்துறு தயிர்: குரு-சிஷ்யன் கதையில் குருவின் பெருமை, சிஷ்யனின் அருமை பேசப்படுகிறது. சிஷ்யனுக்காக குரு ஒருவர் காலில் விழவும் தயாராக இருக்கிறார். கம்பரை சிலாகிக்கும் விதம் கம்பராமாயணத்தை மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டுகிறது.

4.வணங்கான்:ஒருவனின் உழைப்பு எப்படி அவனை உயர்த்துகிறது. எப்படி ஒருவனின் எழுச்சி அவனை உயரத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை விரிவாக பேசுகிறது. அடைப்பட்டு, அடைக்கப்பட்டு கிடந்தவன் வெகுண்டெழுந்தால் விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் சொல்லப்படுகிறது.

5. மயில்கழுத்து: தனக்கான சுயதருமத்தை கண்டு கொள்ளும் அற்புத தருணத்தை பதிவு செய்யும் கதை இது. சிறு சலனம் போல் இருந்தாலும், நாம் கதையைப் புரிந்துகொண்ட விதத்தை மாற்றி போட்டுவிடும் சில வரிகள். அப்படிப்பட்ட வரிகளை முன்வைத்து இந்த கதை வடிவமைக்கப்பட்டிருக் கிறது.

6.யானைடாக்டர்: ஒரு ஆன்மீக பணி போன்று ஆறாக் காதலுடன் அதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு மாமனிதனின் கதை. இவரைப் போன்ற மனிதர்கள் நம் அரசால், சமூகத்தால், கௌரவிக்கப்படாமலும், கண்டு கொள்ளப்படாமலும் தான் இருப்பார்கள் என்பதுதான் நாம் வாழும் காலத்தின் சமூக விழுமியங்கள் விளக்கிக் காட்டும் நிதர்சனம்.

7. நூறு நாற்காலிகள்: ஒரு தாய்க்கும் மகனுக்குமான கதை என்கிற ரீதியில் தொடங்கும் இந்த கதை, ஒரே ஒரு சமூகத்திற்கும் ஏனைய உலகிற்கும் இடையேயான கதை என்பது சில பக்கங்களை தாண்டிய பின்னர் புரிய வருகிறது. ஒரு சமூகத்தின் முந்தைய நிலையையும், வளர்ச்சியையும், மாறுதல்களையும் உணர இத்தகைய பதிவுகள் அவசியம். இதுபோன்று இன்னும் பல நூறு நாற்காலிகள்தேவைப்படலாம்.

8. தாயார்பாதம்:  தஞ்சை மாவட்டத்தில் ஒரு குடும்பத்துக்குள் நிகழும் கதை. காலம்காலமாக குடும்ப அமைப்பில் தன் சுயத்தை இழக்கும் பெண்ணின் கதை. தி.ஜானகிராமனின் ஒரு சிறுகதையையே படிக்கும் பிரமையைத் தருகிறது, ஜெயமோகனின் நடை.
9. பெருவலி: இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேல ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துட்டு போறது. ஒருவரால் தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதையை இப்படி சொல்ல முடியுமா? அப்படி சொன்னால், சத்தியமாக அவர் யோகியாக இருக்க வேண்டும் அல்லது எழுத்தாளனாக இருக்க வேண்டும்! இருவரையும் இங்கு காணலாம்.

10. ஓலைச்சிலுவை – அந்த காலகட்டத்தில் இருந்த மருத்துவமனைகளின் நிலையை மிக தெளிவாக கூறும் கதை. எட்டு பிள்ளைகள் பெற்ற, சாமியாடி குடும்பத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண் வயிற்றுப்பாடுக்காக மதம் மாறுவதையும், தொடர்ச்சியாக அவர்கள் சந்திக்கும் சவால்களையும் பேசுகிறது.

11. கோட்டி:அன்றைய காலகட்டத்தில் இருந்த சாதீய அடக்குமுறைகளை விளக்குவதன் மூலம், தற்போது அதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், பெரிய அளவில் எந்த மாற்றமும் நிகழாத அதன் சமகால நிலையையும் புரிந்து கொள்ள முடிகிறது இந்த கதையின் ஊடாக.

12. உலகம் யாவையும்: இந்த உலகமே இன்று கோடான கோடிக் கருத்துகளால் ஆனதாக உள்ளது. உலகம் யாவையும் தம்முள் உள்வாங்கிக் கொண்டு, பேதம் பாராட்டாத பேரறத்தின் ஆளுகைக்குள் பிரபஞ்சம் முழுவதையும் கொணர நினைத்தவர்களாய் வலம் வருகிறார்கள் இக்கதையின் மாந்தர்கள்.

நம் சம காலத்திய இலக்கிய கர்த்தாக்களை நமக்கு நன்கு பரிச்சயமானர்களை. தன் பார்வையில் ஜெயமோகன் இந்த 12 கதைகளில் பொருத்தி பார்த்திருக்கிறார் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது. நாமும் கூட நம்முடன் பழகி பயணிக்கும் நபர்களை இந்த கதைகளில் கண்டுக் கொள்ளலாம்.

– இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top