புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்தார்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 01 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் ‘ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சி களில் ஊட்டச்சத்தை தூண்டுதல்” என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைத்து அலுவலர்களும் உறுதி மொழியை ஏற்றுக்கொண் டனர்.
உறுதிமொழி: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கிய மான உடல் நிலையை அடைய நான் இன்று உறுதிமொழி ஏற்கிறேன். தேசிய ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நான் உறுதி செய்வேன்.
ஆரோக்கியம் என்பது சரிவிகித சத்தான உணவு, தூய்மை யான குடிநீர், சுகாதாரம், சரியான தாய்மை, பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங் களில் உள்ளது. தேசிய ஊட்டச்சத்து இயக்கமானது நாடு முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக மாற ஒவ்வொரு வீடு, ஒவ்வொரு பள்ளி, ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு நகரமும் ஊட்டச்சத்துள்ள உணவு மற்றும் நலவாழ்வு சம்பந்தமான கருத்துக்களை அறிய நான் உதவுவேன்.
இந்த மக்கள் பேரியக்கத்தின் மூலம் எனது நாட்டிலுள்ள எனது சகோதரிகள் சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் சிறந்த ஆரோக்கியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவெடுப்பர். ஆரோக்கியமான மக்களால் ஆனது வலிமையான தேசமாகும் என்று தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.