Close
செப்டம்பர் 20, 2024 5:44 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 புதிய துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே மரமடக்கியில் நடந்த விழாவில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், ரூ.1.25 கோடி செலவில் 6 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் மருத்துவம்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் பொது சுகாதாரத்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் தலா ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் வடகாடு, மாங்காடு, கோவிலூர், மேலகாடு துணை சுகாதார நிலையங்களையும், அறந்தாங்கி வட்டாரத்தில் மறமடக்கி துணை சுகாதார நிலையம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும், கறம்பக்குடி வட்டாரத்தில் மருதன்கோன்விடுதி, துணை சுகாதார நிலையம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் ரூ.1.25 கோடி செலவில் 6 புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இத்துணை சுகாதார நிலையங்களில் 5 துணை சுகாதார நிலையங்கள் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அமையப் பெற்றது சிறப்பு வாய்ந்ததாகும். துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சிறப்பு மிக்க திட்டத்தினை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் ஜனவரி மாத இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இத்திட்டம் குறித்து தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்கப்படவுள்ளது. இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களால் கடைகோடி மனிதனுக்கும் தரமான மருத்துவம் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் புதுக்கோட்டை பழைய மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட் டதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைகள் அடிப்படையில் புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்க ளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏழை, எளிய பொதுமக்களுக்கு உயர்தரத்திலான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கப்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.

பின்னர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவத்துறையில் எண்ணற்ற முன்னோடித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் மூலம் மருத்துவமானது சிகிச்சை பெறுபவர்களின் இல்லத்திற்கே கொண்டு சேர்க்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ‘இன்னுயிர் காப்போம் 48” திட்டம் மூலம் விபத்தில் சிக்கியவர்களின் மருத்துவ செலவினை அரசே ஏற்கும், மேலும் விபத்து குறத்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.5000 வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அறந்தாங்கி அறிஞர் அண்ணா மருத்துவமனையினை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, தமிழகத்தில் 10.84 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கொரோனா 2வது மற்றும் 3 -ஆவது அலையினை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நடைபெற்று முடிந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த வீரர், வீராங்கனைகளுக்கு மருத்துவத்துறையின் சார்பில்; தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களை பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனவே முதலமைச்சர் மருத்துவத்துறையில் செயல்படுத்தப் படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொண்டு, நலமாக வாழ வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top