Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

புதுக்கோட்டையில் மீண்டும் புதுப்பொலிவுடன் இன்று முதல் இயங்கவுள்ள அரசு தாலுகா மருத்துவமனை…!

புதுக்கோட்டை

மீண்டும் இன்று முதல் இயங்கவுள்ள பழைய அரசு மருத்துவமனை

புதுக்கோட்டை நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் புதுப்பொலிவுடன் புதுக்கோட்டை தாலுகா மருத்துவமனையாக உருவெடுத்து  (16.12.2022) வெள்ளிக்கிழமை  மாலை 5 மணிக்கு மக்களுக்கு சேவை அளிக்க உள்ளது.

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் பொது அலுவலக வளாகத்துக்கு அருகே 1871-இல் நகரப் பொது மருத்துவமனை (டவுன் ஜெனரல் ஹாஸ்பிடல்) தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு, 1974-இல்  புதுக்கோட்டை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை யாக தரம் உயா்த்தப்பட்டது. பிறகு,  நாட்டின் முதல் பெண் மருத்துவரான டாக்டா் முத்துலட்சுமி ரெட்டிக்கு புகழ் சேர்க்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனை எனப் பெயா் சூட்டப்பட்டது.

அதன்பிறகு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை நகரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் முள்ளூா் கிராமத்தில் 127 ஏக்கா் பரப்பளவில் 2017 -ல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மருத்துவக் கல்லூரி வந்த பின்னா், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை அறந்தாங்கி பகுதிக்கு மாற்றப்பட்டது.நகரின் பழைமையான அரசு மருத்துவமனை காலிசெய்யப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு  மாற்றப்பட்டது.

தற்போது மாவட்ட மனநலத் திட்ட மையமும், காசநோய்ப் பிரிவு அலுவலகம் மற்றும் ஊரக நலப்பணிகள் – குடும்ப நலப் பிரிவு அலுவலகமும், டாம்ப்கால் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இங்கு செயல்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் அவசரத் தேவைக்கு, புறநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக் குச் செல்ல வேண்டியுள்ளதால், நகரில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுநல ஆா்வலா்கள் தொடா்ந்து  வலியுறுத்தி  வந்தனர். சில அரசியல் கட்சிகள்  ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்

இந்த கோரிக்கை திமுக தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்பதால்,  புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா வலியுறுத்தியதன்பேரினல், சுகாதாரத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் இந்த மருத்துவமனை வளாகத்தை நேரில் பாா்வையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடந்த 6 மாதங்களுக்கு முன் கூறிச்சென்றார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விழுப்புரம் மக்களின் கோரிக்கையை ஏற்று நகரில் உள்ள மருத்துவமனையிலேயே அவசர சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவு தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. அண்மையில், கரூரிலும் இதேபோன்ற கோரிக்கை எழுந்தபிறகு, அமைச்சா் செந்தில்பாலாஜியின் முயற்சியால், பழைய அரசு மருத்துவ மனை ரூ. 20 கோடியில் புனரமைத்து செயல்படுத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் எவ்விதப் போக்குவரத்து நெரிசலும் இல்லாத, விசாலமான கட்டட வசதியைக் கொண்டுள்ள இம்மருத்துவமனை வளாகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையாக  நீடித்து வந்த  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் புதுப்பொலிவுடன்  வெள்ளிக்கிழமை (16.12.2022) மாலை 5 மணிக்கு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

புதுக்கோட்டை
தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்

மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் செயல்படத் தொடங்கிய பின் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மூடப்பட்டு புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் என அனைத்து செயல்பாடுகளும் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து மருத்துவக் கல்லூரி வெகு தொலைவில்  இருப்பதால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சை பெற வேண்டியவர்கள்  போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

ஆகவே, மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள புதுக்கோட்டை நகரிலேயே பழைய அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

புதுக்கோட்டை
திறப்பு விழா ஏற்பாடுகளில் ஈடுபட்ட மருத்துவ அலுவலர்கள் -ஊழியர்கள்

இந்நிலையில், புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., முத்துராஜா தேர்தல் வாக்குறுதி அளித்தபடி,  முதலமைச்சர்  ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் நேரில் கோரிக்கை வைத்தததுடன், சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசியும் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையை  மீண்டும் திறக்க தீவிர முயற்சி மேற்கொண்டார்.

இதையடுத்து தமிழக அரசு  வெளியிட்ட அரசாணையின் படி முதல்கட்டமாக  புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு   வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு  தொடங்கப்படுகிறது. இதை தொடர்ந்து தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருந்தாளுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்.எல்.ஏ., டாக்டர் முத்துராஜா, மாவட்ட பொறுப்பாளர் கே.கே.  செல்லபாண்டியன், நகர் மன்றத்தலைவர் திலகவதி, நகரச்செயலாளர் ஆ. செந்தில் மற்றும் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top