புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மாவட்ட மனநல மையம் மற்றும் புறநோயாளிகள் பிரிவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் செயல்படுகிறது. இம்மையத் தில் ஆதரவற்று சாலைகளில் உலாவும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகிறது.
மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில் மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக்தெய்வநாயகம் தலைமையில், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, மனநல பணியாளர்கள் முருகானந்தம், சதீஷ்கண்ணா, அஞ்சலிதேவி, பெண்களுக் கான ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் சிலம்பரசி மற்றும் செவிலியர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சைக்கு அளித்து வருகின்றனர்.
இதன் மூலம் பலரும் மன நோயிலிருந்து குணமடைந்த பின்னர், அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு குணமடைந்து செல்லும் நபருக்கு அவர் வசிக்கும் மாவட்டத்தில் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை யில் தொடர் சிகிச்சை பெற உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட 160 -க்கும் மேற்பட்டோ ருக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.