Close
நவம்பர் 25, 2024 12:01 காலை

எம்எல்ஏ போராட்ட அறிவிப்பால் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம்

புதுக்கோட்டை

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ சின்னத்துரை

கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்ட நவடிக்கை கந்தர்வகோட்டை  எம்எல்ஏ சின்னதுரை  தலைமையிலான போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த  வெற்றி என சிபிஎம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு தாலுகா மருத்துமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், மருந்துப் பொருட்கள் இருப்பதில்லையென அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். தாலுகாவின் தலைநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஏதோ அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போல செயல்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பலகட்ட முயற்சி எடுத்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இதனால், கறம்பக்குடி அரசு தாலுகா மருத்துவமனையை 24 மணி நேரமும் மருத்துவர்களோடு செயல்படும் மருத்துவமனையாக தரம் உயரத்த வேண்டும். போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும். விஷம் முறிவு மருந்து உட்பட அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் அனைத்துக் கட்சியினர் சார்பில் கடந்த 07.06.2023 அன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 06.06.2023 அன்று கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவரத்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் 13.06.2023-க்குள் 5 மருத்துவர்களைக் கொண்டு 24 மணிநேரமும் செயல்படுத்துவது, கூடுதலாக செவிலியர்களை நியமிப்பது, போதிய மருந்துகளை இருப்பு வைப்பது என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் கறம்பக்குடி பேருராட்சித் தலைவர் உ.முருகேசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஞானசேகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நியாஸ், சின்னத்தம்பி, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகன்நாதன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து, மஜக மாவட்டச் செயலாளர் முகமதுஜான் உள்ளிட்டோர் புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ராமசாமி, மருத்துவ அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஏற்கெனவே இருந்த 3 மருத்துவர்களில் 2 பேர் விடுமுறையில் சென்று இருந்தனர். விடுமுறையில் இருந்த ஒருவர் மீண்டும் பணிக்கு வந்துவிட்டார். கூடுதலாக 2 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிரந்தனர். தற்பொழுது அங்கு 4 பேர் பணியில் உள்ளனர். விடுப்பில் உள்ள ஒருவர் விரைவில் வந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 4 செவிலியர் களுடன் கூடுதலாக 2 பேர் நியமிக்கப்பட்டு மொத்தம் 6 செவிலியர்கள் பணியமர்தப்பட்டனர். நாய்கடி, பாம்பு கடி ஊதிய மற்றும் மருந்து மாத்திரைகளை போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் மண்டிக்கிடந்த புதர்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டிருந்தது.

மருத்துவமனை வளாகத்தை முழுமையாக ஆய்வுசெய்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top