Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

மருத்துவர்கள், பணியாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம்

சென்னை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உணர் திறன் மற்றும் செயல் திறன் மேம்பாட்டு பூங்காவை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற புதிய கட்டமைப்பு வசதிகள் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துமனை வளாககத்தில் ரூ. 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்காக உணர்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பூங்கா,

ரூ.10 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட சிறு பிராணிகள் கூடம், நீரிழிவு மையத்தில் ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நோயாளிகள் காத்திருக்கும் இடம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தார்.

மேலும் ஓராண்டு நிறைவடைந்த முழு உடல் பரிசோதனை மையத்தை பார்வையிட்டு அங்கு கூடுதல் கருவிகள், உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் மேலும்  கூறியதாவது:

புதிய வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டதன் மூலம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

இப்பகுதியில் வசிக்கும் பின்தங்கிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையத்தில் கூடுதல் சிகிச்சைகளை இணைக்கவும், மருத்துவர்கள், பணியாளர்களை ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கென தனியாக ஒரு கட்டடம் அமைக்க விரைவில் அமைக்கப்பட உள்ளது. மேலும் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் அமைப்பதற்காக விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

3 ஆயிரம் பேர் நியமனம்:

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1021 மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் சுமார் 7 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தமிழ் மொழித் தேர்வு, கொரோனாவில் பணியாற்றியவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் உள்ளிட்டவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டதால் இந்த நியமனம் கால தாமதம் ஆகிவிட்டது.

பெருந்தொற்றின்போது பணியாற்றிவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டதையடுத்து அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. எனவே மருத்துவ பணியாளர் தேரவு வாரியம் மூலம் முதல்கட்டமாக 1021 மருத்துவர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், 983 மருந்தாளுனர்கள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

அடுத்ததாக காலியாகவுள்ள சுமார் ஆயிரம் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப் படும். இனி வரும் காலங்களில் அனைத்து காலியிடங்களும் அவ்வப்போது உடனுக்குடன் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.

சென்னை மாநகரத்தில் வளர்க்கப்படும் மாடுகளை மாநகராட்சிக்கு வெளியே புறநகர் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும். இதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார் சுப்பிரமணியன்.

இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, ராயபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்திமலர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி, மாநகராட்சி நிலைக்குழு தலைவர் இளைய அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top