ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் (டிஎம்இ) உள்ளிருப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது, அரசாணை 293-ஐ அமல்படுத்தி, அதனடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் முழக்கமிட்டனர். அவர்களுடன் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
எனினும், அரசாணையை உடனடியாக அமல்படுத்துவது தொடர்பாக எவ்வித உறுதியான முடிவையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, 100 -க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சிறை வைத்தனர். பின்னர் மாலையில் மருத்துவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற ஒரே மாதத்தில், அரசு மருத்துவர்களுக்குப் பயன் தரும் வகையில் அரசாணை 293 -ஐ அறிவித்தார். 2021 ஜூன் 16-ஆம் தேதி வெளியான அரசாணை, இதுவரை அமல்படுத்தப்படவில்லை. சிலரது எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆணை பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. அனைவருக்கும் ஊதிய உயர்வு கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
ஆகவே, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை 293-ஐ அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம். பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இனிமேலும் அரசாணை அமல்படுத்தாவிட்டால் நோயாளி களின் சிகிச்சை பாதிக்கப்படும் நிலை ஏற்படும். அரசு டாக்டர்கள் 18 ஆயிரம் பேருக்கு ரூ.1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அரியர்ஸ் கிடைக்கும். அத்துடன் மாதம் தோறும் ஊதிய உயர்வின் பலனும் கிடைக்கும்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை நிதித்துறையால் அங்கீகரிக்கப் பட்டு அனைத்து மருத்துவமனை தலைமை நிர்வாகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு கையெழுத்துக்காக கடந்த 21 மாதங்களாக காத்திருக்கிறது. ஆனால் அமல்படுத்துவதில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக் கிறார்கள் என்றார் அவர்.