Close
நவம்பர் 21, 2024 11:08 மணி

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்ஆய்வு

புதுக்கோட்டை

கறம்பக்குடி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன்  (15.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மருத்துவத்துறையின் கட்டமைப்பு களை மேம்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கறம்பக்குடி அரசு மருத்துவ மனையின் செயல்பாடுகள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கறம்பக்குடி அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து 36 படுக்கைகள் கொண்ட தாலுகா மருத்துவமனையாக கடந்த 2015-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 3 மருத்துவர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டு 3 மருத்துவர்கள் பணியில் உள்ள நிலையில் ஒரு மருத்துவர் கூடுதலாக மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 5 செவிலியர் பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தலைமை செவிலியர் பணியிடம் காலியாக உள்ளது. நாள்தோறும் சராசரியாக 450 புறநோயாளிகளும், 14 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனைக்கு பணி நிலையில் உள்ள மருத்துவர்களுடன் மற்ற மருத்துவமனைகளில் இருந்து மேலும் 02 மருத்துவர்கள் மாற்றுப் பணியில் பணியமர்த்தப்பட்டு 06 மருத்துவர்களுடன் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இம்மருத்துவமனையில் படுக்கைவசதியுடன் கூடுதல் கட்டடம் வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயும், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 கோடி ரூபாயும் பெறப்பட்டு 50 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடப்பிரிவு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் மருத்துவர்கள், பணியாளர்களின் காலிபணியிடங் களை நிரப்புவதற்கும், அவர்களுக்கான தங்குமிடம் கட்டுவதற்கும் நிதி நிலை அறிக்கையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பிணவறை கட்டுவதற்கான இடத்தினை தயார் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய நுண்கதிர் கருவி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, சிடி ஸ்கேன் கருவி  மூலம் பெற்று வழங்கப்படும். மேலும் நிரந்தரப் பணியிடங்கள் 3 மாத காலத்திற்குள் தோற்றுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும். இதன் மூலம் இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை அவர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் மரு.சண்முககனி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன்.

இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.எஸ்.ஸ்ரீபிரியாதேன்மொழி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, கறம்பக்குடி பேரூராட்சித்தலைவர் முருகேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top