புதுக்கோட்டையில் தமிழ்நாட்டின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை புதுக்கோட்டையில் திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நன்றி பாராட்டினர்.
ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மருத்துவத்துறையில் பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி, தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில்,
‘மக்களைத் தேடி மருத்துவம்”, சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்- 48″, நலவாழ்வு நடைப்பயிற்சி 8 கி.மீ. சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற நலத்திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று பயனடையும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொண்டு நோயற்ற நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் மூன்றாவது பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கூறியதாவது:
ஏழை, எளிய பொதுமக்கள் நோயில்லா நல்வாழ்வு வாழ்ந்திட மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், 70 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதுக்கோட்டையில் ரூ.67.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் 15.11.2023 அன்று காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இக்கல்லூரியில் 2023-2024 -ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாகக் கட்டடம், மாணவ மாணவியர் விடுதிக் கட்டடம், ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
கூடுதலாக, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவம னைக்கு ரூ.5.10 கோடி மதிப்பிலான தேவையான அதிநவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான ஆசிரியர், நிர்வாகம், மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இந்தியாவிலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தரமான பல் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் இம்மருத்துவமனை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்ட பொதுமக்களுக்கும் பயனடையும் வகையில் அமைந்துள்ளது.
இந்த புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்த தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதாக ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து சுமதி கூறியதாவது:
நான் புதுக்கோட்டையில் வசித்து வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை திறந்து வைத்துள்ளார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் பல் மருத்துவ சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைக்கே சென்று வந்தோம். பல் மருத்துவத்திற்கு அதிகமாக செலவாகி வந்த நிலையில், சிகிச்சை பெறாமலேயே இருந்து வந்தோம்.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் எவ்வித கட்டணமின்றி பல் மருத்துவ சிகிச்சைகள் செய்து கொள்ள முடியும்.
தமிழ்நாடு முதலமைச்சர் எங்களைப் போன்ற மக்களின் துயர் துடைக்கும் வகையில் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங் களை செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் ஏழை, எளிய பொதுமக்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பல் மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த முதலமைச்சர் எனது சார்பிலும், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து மாணவி ஐஸ்வர்யா தெரிவித்ததாவது:
நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். இம்மருத்துவமனை தமிழ்நாட்டின் 3-ஆவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக திகழ்வது எங்களுக்கு பெருமைக்குரியதாகும்.
இம்மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன உபகரணங்கள் இருப்பதால் நவீன தொழில்நுட்பத்துடன் நாங்கள்
பயில்வ தற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களும் பல் மருத்துவ சிகிச்சை இனிமேல் பெற்றிட முடியும்.
இதன்மூலம் ஏழை, எளிய பொதுமக்களும் உயர்தரத்திலான சிகிச்சைகள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இம்மருத்துவமனையினை முதலமைச்சர் திறந்து வைத்துள் ளார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமைகிறது.
இந்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சருக்கு எனது சார்பிலும், என்னை போன்ற மாணவ, மாணவிகளின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு: க.பிரேமலதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,புதுக்கோட்டை மாவட்டம்.