Close
ஜூலை 7, 2024 11:00 காலை

வாசக்டமி விழிப்புணர்வு ஊர்தி பிரசார பயணத்தை தொடக்கி வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை

நவீன வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு ரதத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட குடும்பநல அமைப்பின் சார்பில், நவீன வாசக்டமி இருவார விழா விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா (27.11.2023) தொடக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ஏழை, எளிய பொதுமக்களின் மருத்துவத்திற்காக பல்வேறு திட்டங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்  மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் மருத்துவத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை நவீன வாசக்டமி (NON SCALPEL VASECTOMY – NSV) விழிப்புணர்வு ஊர்தி பிரசாரம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்தியில் ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை முறை குறித்த விழிப்புணர்வு பதாதைகள் 4 புறமும் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரதம் மாவட்ட அளவில் அனைத்து வட்டார பகுதிகளிலும் தனது விழிப்புணர்வு பிரசாரத்தினை ஒலிபெருக்கி மற்றும் துண்டுபிரசுரங்கள் வாயிலாகவும், குழு கூட்டங்கள் மூலமும் மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மாவட்ட அளவில் ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் நடைபெறும் முகாமில் தகுதி வாய்ந்த ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெறவும்,

நவீன வாசக்டமியின் பயன்கள் மற்றும் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்தும் துணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலம்)  விளக்கம் அளித்து பொதுமக் களிடம் கலந்துரையாடி, துண்டு பிரசுரங்களை வழங்கியும், விழிப்புணர்வு பணி மேற்கொள்ளும் பணியாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

மேலும் நவீன வாசக்டமி செய்து கொள்ள முன் வரும் தகுதி வாய்ந்த ஆண்களுக்கு அரசு வழங்கும் ஊக்க தொகை ரூ.1,100 மட்டுமல்லாது பயனாளிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு இதர சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா.

இந்நிகழ்வில், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.எஸ்.ஸ்ரீபிரியா தேன்மொழி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), கோமதி (மருத்துவம் மற்றும் குடும்பநலம்), சிவசங்கரி (மருத்துவம் மற்றும் காசநோய்), சிவகாமி (மருத்துவம் மற்றும் தொழுநோய்), குடும்பநல மக்கள் கல்வி தகவல் அலுவலர் வே.சேகர், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top