Close
டிசம்பர் 3, 2024 6:01 மணி

திருமயத்தில் மாற்றுத்திறனாளிகளின் கணக்கெடுப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம்

புதுக்கோட்டை

திருமயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கலைக்குழுவினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு  தெருமுனைப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறன் கொண்டவர்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவ்வாறு அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இது போன்ற விழிப்புணர்வு பிரசாரம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பேருந்து நிலையப் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

பிரசாரத்தின் போது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலைக்குழுவினரின் இசையுடன் பாடல் மூலம்  மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கப்பட்டது.

துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மூலம் மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் திட்டங்களின் விவரம்:

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை 40 சதவீத மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப் படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை, சட்டம் முடித்தவர்களுக்கு உதவி தொகை, சுய வேலை வாய்ப்பில் வங்கி கடன், பார்வையற்றோருக்கு இலவச பேருந்து பயண சலுகை, அரசு பேருந்துகளில் 75% பயண சலுகை, மாற்றுத்திறனாளியின் துணையாளர் பயண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது.

மேலும் மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகளை பெற சம்பந்தப் பட்ட அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொண்டு அதிகாரிகள் கேட்கும் சான்றிதழ்களை சமர்ப்பித்து பதிவு செய்வதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசின் சலுகைகளை பெற்று பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவனத் தின் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே மாற்றுத்திறனாளிகள் தயக்கமின்றி களப்பணி யாளர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். கணக்கெடுப்பில் கலந்து கொள்வதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சமூக தரவு பதிவுகளில் இடம் பெற ஒரு வாய்ப்பாக அமைகிறது.

மேலும்  விவரங்களுக்கு… 04322-223678. 98947 56231, 98421 63510, 77084 09443. 97892 48965 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அறிந்து  கொள்ளலாம் என பிரசாரத்தில் தெரிவிக்கப்பட்டது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top