Close
நவம்பர் 22, 2024 11:24 காலை

இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு: டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்த கல்லீரல் தொடர்பான கண்காட்சியை பார்வையிட்ட சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன்

இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் சுகாதாரத்துறை செயலர்  டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் குறித்த விழிப்புணர்வு தினம் (NASH-Non Alcoholic Steato Hepatitis) ஆண்டுதோறும் ஜூன் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரைப்பை மற்றும் குடலியல் துறையால் கல்லீரல் கொழுப்பு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  கல்லூரி முதன்மையர் டாக்டர் பி.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லீரல் கொழுப்பு நோய் குறித்த கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளுக்கு முகக்கவசங்களை வழங்கிய ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதில் முகக் கவசத்தின் அவசியம் குறித்து நோயாளிகளிடம் எடுத்துரைத்தார். பின்னர் அண்மை யில் தொடங்கப்பட்ட முழு உடல் பரிசோதனை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை நேரில் சென்று அவர் பார்வையிட்டார்.

30 சதவீதம் பேருக்கு பாதிப்பு:  பின்னர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் என்பது அண்மைக் காலமாக தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்நோயை ஆண்டு தொற்றா நோய்களின் பட்டியலில் மத்திய சுகாதார அமைச்சகம் சேர்த்துள்ளது.    கல்லீரல் கொழுப்பு நோய் என்பது அறிகுறி ஏதும் வெளியில் தெரியாமலேயே ஒருவரின் கல்லீரல் செயல் இழக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேருக்கு கல்லீரல் கொழுப்பு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறுகளினால் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுகிறது. தவறான உணவு பழக்க வழக்கங்கள்,  உடல் பருமன்,  நீரிழிவு, உடல் உழைப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கொழுப்பு கல்லீரலில் படிந்து இந்நோய் உருவாகிறது.

இந்நோய் ஏற்படுவதை தவிர்க்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அளவான உணவு, முறை யான உடற்பயிற்சி, வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிப்பது,  உடல் உழைப்பை பழக்கத்தில் கொண்டு வருவது போன்றவைகளால் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதை தடுக்கலாம்

 கொரோனா பரவல்: முழு எச்சரிக்கை தேவை:
கொரோனா நான்காவது முறையாக நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது,   மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும்போதும்,  அரசியல், குடும்ப, கலாசார விழாக்களில் பங்கெடுக்கும்போதும்,  பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் போதும் கொரோனா பரவல் ஏற்படுகிறது.

தமிழகத்தில் இந்நோய் பரவாமல் தடுப்பதில்  பல்வேறு தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம்களை பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அடுத்தடுத்த தவணைகளில் தங்களுக்கான தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.  மேலும் முகக் கவசம் அணியாமல் பயணிப்பது தொற்று பரவலின் வேகத்தை அதிகரிக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

தொற்று பரவலின் தாக்கம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.  ஏற்கெனவே மூன்று முறை ஏற்பட்ட கரோனா பரவல் மூலம் கிடைத்துள்ள அனுபவத்தின் அடிப்படையில் ஆக்சிஜன் தேவை,  படுக்கைகளின் எண்ணிக்கை,  மருத்துவ குழுவினர் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்வதற்கு தயார் நிலையில் தமிழக அரசு உள்ளது.

தொடர்ந்து உருமாறி வரும் கரோனாவால் உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை.  எனவே யாரும் பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை.  ஆனால் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியது அனைவரின் கடமையாகும் என்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்.

இந்நிகழ்ச்சியில் இரைப்பை மற்றும் குடலியல் நோய் துறை தலைவர் டாக்டர் எஸ். ரேவதி, கல்லீரல் அறுவைச் சிகிச்சை துறை தலைவர்  டாக்டர் எஸ்.ஜெஸ்வந்த், துணைப் பேராசிரியர் டாக்டர் பி.சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top