Close
நவம்பர் 22, 2024 10:27 காலை

ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் தானம் மூலம் மறுவாழ்வு பெற்ற இரு நோயாளிகள்

சென்னை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் பொருத்தப்பட்டது

ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் தானம் மூலம்  இரு நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்

சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் மூலம் பெற்ற கல்லீரல்கள் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் டாக்டர் பி.பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதன்மையர் டாக்டர் பி.பாலாஜி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் அறுவைச் சிகிச்சைகள் மூலம் மூளைச் சாவு அடைந்த இரண்டு பேரின் உடல் உறுப்பு தானம் மூலம் பெற்ற கல்லீரல்கள் ஆல்கஹாலிக் அல்லாத கொழுப்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட 46 வயது ஆண் நோயாளி மற்றும் வில்சன் டிசீஸ் என்ற நோயால் கல்லீரல் செயலிழந்த 19 வயது பெண் நோயாளி ஒருவருக்கும் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 வயது ஆண் ஒருவர் மூளைச் சாவு அடைந்ததை அடுத்து அவரது உறவினர்களின் ஒப்புதலுடன் கல்லீரல் தானம் பெறப்பட்டது.

பின்னர் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கல்லீரல் உடனடியாக சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பசுமை வழி சாலை ஏற்படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் உதவியுடன் சுமார் ஆறு மணி நேரத்திற்குள் சேலத்தில் இருந்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இரண்டாவதாக சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் விபத்து காரணமாக மூளைச் சாவு அடைந்த 26 வயது ஆண் ஒருவரின் கல்லீரல் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலோடு தானம் பெற்று ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்தப்பட்டது.  இரண்டு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு இரண்டு நோயாளிகளும் நலமாக உள்ளனர்.

இந்த அறுவைச் சிகிச்சைகள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர் ஜெஸ்வந்த், டாக்டர் மாலா,  மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் செல்வராஜ்,  நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் டில்லி ராணி மற்றும் ரேலா இன்ஸ்டூட்டை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களின் கூட்டு முயற்சியால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என அதில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top