Close
செப்டம்பர் 20, 2024 8:47 காலை

செர்னோபில் அணு உலை பேரழிவு நினைவலைகள்..

அயலகத்தமிழர்கள்

செர்னோபிள் பேரழிவு நாள்(ஏப்.26)

செர்னோபில் பேரழிவின் விளைவுகள் மற்றும் பொதுவாக அணுசக்தியின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளை உள்ளடக்கியது.

ஏப்ரல் 26, 1986 அன்று, உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்த நான்காம் அணு உலை சோதனையின் போது கட்டுப்பாட்டை இழந்து, வெடித்து தீ விபத்துக்கு உள்ளானது. பெரிய அளவிலான கதிர்வீச்சு வளிமண்டலத்தில் வெளியானது.

அணுஉலையில் இருந்த யுரேனியம் எரிபொருள் அதிக வெப்பமடைந்து பாதுகாப்பு வளையங்களை தாண்டி உருகியது. அணு உலையின் மேல் கான்கிரீட் மற்றும் எஃகு குவிமாடம் போன்ற கண்டெய்ன்மென்ட் அமைப்பு அதாவது ஒரு விபத்து ஏற்பட்டால் ஆலைக்குள் கதிர்வீச்சை வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அமைப்பு இல்லாமல் இருந்ததும் விபத்தின் விபரீதத்திற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

இதன் விளைவாக புளூட்டோனியம், அயோடின், ஸ்ட்ரோண்டியம் மற்றும் சீசியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்கள் பரந்த பரப்பளவில் சிதறிக்கிடந்தன. உலை மையத்திற்குள் காற்று நுழைந்ததால், கூடுதலாக கிராஃபைட் பாளங்கள் அதிக வெப்பநிலையில் தீப்பிடித்து, சுற்றுச்சூழலில் கதிரியக்க பொருட்களை வெளியேறியது.

உடனடியாக இறந்தவர்கள் 31 என்றும், அதன் பிறகு இறந்தவர்கள் சுமார் 4000 என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கதிரியக்கக்தையும் , 9 நாட்களாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைப்பதிலும் ஈடுபட்டவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என பலர் சில வருடங்களிலேயே உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தனர்.

சுமார் 4143 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு, கதிர் வீச்சு நிறைந்த வாழ தகுதியில்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. மரம் செடி கொடி, நீர், உணவுப் பொருட்கள், உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் கதிரியக்கத்தை உள் வாங்கி, உயிர் பலி வாங்க தயாராக இருந்தன.

நமது நவீன கனவுகளை, அணுசக்தி பேரழிவுகள் போன்ற பயங்கரமான சில விஷயங்கள் வேட்டையாடுகின்றன. செர்னோபில் பேரழிவு 37 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தாலும், அணுசக்தி எப்பொழுதும் பாதுகாப்பானதா என்கிற விவாதத்தின் மீது நீண்ட நிழலை வீசிய வண்ணம் தான் இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அழிவின் ஊற்றான அணுவை கண்டு பிடித்தது. உலகிற்கு வரமல்ல சாபம். அணுவை பிளக்கும் போதும், இணைக்கும் போதும் மாபெரும் வெப்ப ஆற்றல் உருவாகிறது. இதை மனித நலனுக்கும், அழிவுக்கும் பயன்படுத்த இயலும்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்த அணு ஆற்றலை ஆயுதமாக பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று, தயாராக இருந்த போது, அதற்கு இரையானது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி. அதன் பிறகு அணு சக்தியை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த உருவான வழிகளில் ஒன்று அணு மின்சாரம்.

காற்று ஆலை மற்றும் சூரிய ஆலையால் ஒரு போதும் நமது மின் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. அனல் மின் நிலையங்களுக்கும் அதிகரித்து வரும் நமது தேவைகளுக்கும் சிறந்த மாற்று (இன்றைய சூழலில்) அணு உலைகளே.அணு உலை தொழில்நுட்பமும், அணு கழிவுகளை கையாளும் விதமும் முன்னேறியிருந்தாலும், அணுசக்திக்கான எதிர்ப்பு என்பது இந்தியாவில் மட்டும் இல்லை, உலகில் பல நாடுகளிலும் உண்டு.

அணுசக்தி மூலம் மின் பிறப்பித்தலுக்கு, நிறைய எதிர்ப்பு இருக்க தான் செய்கிறது.மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றோடு விளையாடுவது எப்போதுமே அளவுக்கு மீறிய பாதிப்பையே ஏற்படுத்தும் என்பது உண்மை.

செர்னோபில் இப்போதும் வசிக்கத்தக்க பாதுகாப்பான இடமாகவே இருக்கிறது. அணு உலைகள் அமைந்த ஆலை பகுதி நீங்கலாக, அதை சுற்றி உள்ள பகுதிகள் வருடம் முழுவதும் வசிக்கும் அளவுக்கு பாதுகாப்பாகவே இருக்கிறது.

அணு ஆலையை சுற்றி 30கிமீ ஆரத்தில் உள்ள இடங்கள் பிரத்தியேக மண்டலமாக குறிக்கப்பட்டுள்ளது. அங்கு எவரும் வசிக்க இயலாது என்ற கட்டுப்பாடு இருந்த போதிலும் சொற்ப அளவிலான மக்கள் அங்கு பல வருடங்களாக வசித்து வருகின்றனர்.

தற்போது பிரத்தியேக மண்டலத்தில் கட்டமைப்புகளுக்கு விவசாய உற்பத்திக்கு தடை உள்ளது. அங்கு கதிவீச்சின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால் இந்த தடையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

இருப்பினும் மக்கள் மனதில் உள்ள அச்ச உணர்வால் இங்கு நிரந்தரமாக வசிக்க பலர் பின்வாங்கக்கூடும், அரசு சலுகைகள் விதித்தால் அதற்காக சிலர் முன்வரக்கூடும். நாளடைவில் அச்ச உணர்வு குறையும் போது செர்னோபில் சுற்றியுள்ள இடங்களில் அதிக அளவில் மக்கள் இடம் பெயரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. குறைந்த பட்சம் பிரத்தியேக மண்டலத்தின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு, நாம் வாழும் காலத்தில் அங்கு மக்கள் வசிப்பதை காணமுடியும் என்று கருதுகிறேன்.

…. இங்கிலாந்திலிருந்து  சங்கர்….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top