Close
செப்டம்பர் 20, 2024 5:29 காலை

அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர் உ.வே.சா

இங்கிலாந்திலிருந்து சங்கர்

உவேசா

உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்.., சுருக்கமாக உ.வே.சா. என அழைக்கப்பட்டார். சிறப்பு பெயருடன் தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பலரில் உ. வே. சா குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும், கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

உ.வே.சா இல்லாமல் இருந்திருந்தால், தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும்புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக் காது.

மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். நூற்றுக்கணக் கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்து நமக்குத் தந்தவர் உ.வே.சா.

தன்னுடைய சொத்துகளை கூட விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார். இந்த தமிழ்த் தாயின் தலைமகனின் அரிய சேவைக்காக அவர் பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.

இவர் ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும் படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழு புரிதலுக்கும் வழி வகுத்தார்.

புறநானூறு-34 பாடலைத் திருத்தி ‘குரவர்த் தப்பிய’ என்ற சொல்லை ‘பார்ப்பார்த் தப்பிய’ என்று திரித்துப் பதிப்பித்தார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. பிற தமிழறிஞர் பெருமக்கள் அதைச் சுட்டிக்காட்டி திருத்தவில்லை என்றாலும் தேவநேயப் பாவாணர் அவர்கள் தமது “தமிழ் வரலாறு” என்னும் நூலில் கண்டித்துள்ளார்.

‘நான் பார்த்த ஓலைச்சுவடியில் ‘பார்ப்பார்’ என்றுதான் இருந்தது என்று ஒரு ஓலைச் சுவடியை, மூலமாக உ வே சா காட்டிய போதும், அன்றைய இலக்கிய உலகம் அதை ஏற்பதற்கு தயாராயில்லை. இது குறித்த விரிவான பார்வையை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

அக்காலத்தில் பிரதிகளை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர் ஊராகத் தேடி கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று அவைகளனைத்தையும், நன்று படித்து ஒப்பு நோக்கி, இவைகளுக்குள் வேறுபாடு இருக்குமானால் எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பித்தார்.இவர் பிரதிகளைத் தேடித் தேடி தமிழகம் முழுவதும் அலைந்த விவரம் என் சரித்திரம் என்கிற தனது சுய சரித்திர புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

உ.வே.சா அவர்கள் வாழ்வைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அவரது சுயசரிதமான ‘என் சரித்திரம்’ மற்றும் ‘நினைவு மஞ்சரி’ கட்டுரைகளை வாசித்தால், அவர் ஆற்றிய பணி தெரியும். இன்றைய தமிழ்த் தலைமுறை பிள்ளைகளுக்கான பெரும் சொத்துகளைத் தேடித்தந்த உ.வே.சா. அவர்கள், தமிழின் அரும்பெரும் நூல்கள் எப்படி எல்லாம் மீட்கப்பட்டன என்பதை சுவாரஸ்யம் குறையாமல் விளக்கி இருக்கிறார்.

வாகன போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான மைல்களை உ.வே.சா பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு, உணவு உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராக சென்று, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி, கிடைத்ததை உண்டு, பழைய நூல்களை பதிப்பித்து தமிழ்த் தொண்டாற்ற வேண்டும் என்னும் குறிக்கோளைத் தவிர வேறெதனையும் தம் வாழ்நாளில் உ.வே.சா சிந்தித்ததே இல்லை.

…இங்கிலாந்திலிருந்து  சங்கர்🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top