Close
நவம்பர் 22, 2024 6:54 காலை

நவீன எழுத்துகளின் சிற்பி சுஜாதா பிறந்த நாள் இன்று

இங்கிலாந்திலிருந்து சங்கர்

எழுத்தாளர் சுஜாதா

தன் எழுத்தில் உள்ள குறைகளை, பாசாங்குகளைஅடையா ளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது. இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சுஜாதா.

தன் காலத்திலேயே, தனது நாவல்கள் சில, அபத்தமான வகையில் திரைப்படமாக்கப்பட்டது கண்டு, மனம் வருந்திய ஒரே தமிழ் எழுத்தாளரும் சுஜாதா தான். சில படங்களில், இவர் பணியாற்ற நேர்ந்தும், அபத்தமாகப் படமாக்கப்படுவதை தடுக்க இயலவில்லை.

தமிழ் எழுத்தாளர்களிலேயே, திரைப்பட விமர்சகராகவும் இருந்து, கடுமையான பாணியிலான திரைவிமர்சனங்களை வெளியிட்ட சிறப்பும் சுஜாதாவிற்கே உரியது. கணையாழி யின் கடைசி பக்கங்களில், அவர் வெளியிட்ட திரைப்பட விமர்சனங்கள் சர்ச்சையையும், புகழையும் ஒருசேர பெற்றுத் தந்தன.

அறிவியல்துறை சார்ந்த தமிழ் எழுத்தாளராக இருந்தாலும், பழந்தமிழ் நூல்களையும், செய்யுள்களையும், இளைய தலைமுறையினரும், எளிதாகவும், இனிதாகவும் அறியும் வகையில் சில படைப்புகளை சுஜாதா அளித்தது குறிப்பிடத்தக்கது.

இலக்கியங்களுக்குள் கோலோச்சியிருந்த எழுத்துகளை, தன் கற்பனையாலும் சிந்தனையாலும் நவீன உலகுக்குள் கொண்டுவந்து, இளைஞர்களுக்கு நளினம் பாய்ச்சியவர். அறுபதுகளில் ஆரம்பித்த அவருடைய எழுத்துப் பயணம், அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.

கி.ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட சுஜாதா, தன் மனைவியின் பெயரையே புனைபெயராக்கிக்கொண்டார். யாரும் பயன்படுத்தாத ஒரு புதிய மொழிநடையின் வாயிலாக அறிவியலுக்கும், இலக்கியத்துக்கும் புதிய பங்களிப்பைத் தந்தார். அவருடைய எழுத்து, தமிழுக்கு ஒரு பாய்ச்சல் என்றால் மிகையாகாது.

‘கலைஞர்கள் அறிவியல் எதிரிகள்’ என்கிற வசையை ஒழித்தவர். அறிவியல் புனைகதைகளைத் தமிழில் பிரபலப்படுத்தி, புனை கதையல்லாத அறிவியல் கட்டுரைகளுக்கு மத்திய அரசு விருது வென்ற தமிழர். மனதைப் பாதிக்கும் எந்தச் சம்பவம் எப்போது நடந்தாலும், அது போல் ஒன்றைப் பற்றி சுஜாதா ஏற்கனவே எழுதியிருப்பது நம் நினைவுக்கு வரும். செய்யுளோ,இலக்கியமோ,
விஞ்ஞானமோ, வரலாறோ அவர் விளக்கியது போல் இன்னொருவர் விளக்க முடியாது. ஒரு தமிழறிஞன் பெரும் விஞ்ஞானி ஆன விந்தை அவர் ஒருவரில் தான் நடந்தது.

பிரபலமாகாத பிற இலக்கியவாதிகளை தன்னுடைய ‘வாசக வங்கி’க்கு அறிமுகப்படுத்துவதை தன் கடமையாக கடைப்பிடித்து வந்தார். தீவிர இலக்கியத்துக்கும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளுக்கும் இடையில் பாலம் போட்டு நல்ல இலக்கியத்தைக் கொஞ்சமாகக் கடத்துகிறேன்’ என்று இவர் சொன்னது வெறும் அவையடக்கம் தான். ரயில் பயணி ஒருவர் மாத நாவலைப் படித்து விட்டு அதை வாழைப் பழத் தோல் போல ஜன்னலுக்கு வெளியே எறிவதைப் பார்த்த கையோடு, மாத நாவல் எழுதுவதை நிறுத்தி கொண்டவர்.

ரொம்ப நல்ல விஷயம் என்றால், அதிகபட்சம் மூன்று பக்கக் கட்டுரை எழுதலாம். குறைந்தபட்சம் என்று எதையும் சொல்லப்போவதில்லை’ என்பார். ஜனரஞ்சகமான, யாரையும் நோகடிக்காத சுகத்தை அவர் எழுத்துக்கள் கொடுத்தன‌. அவரது பிறந்த நாளில்.. சுஜாதா இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகளில் 6 வது கட்டளையை இன்று நினைத்து கொண்டேன்..

“இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள், இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்”

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top