நான் படித்த பள்ளிக்கூடத்திற்கு திங்கள்கிழமை நேரில் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. இந்த பொன்னான வாய்ப்பை அமைத்து தந்தவர் அன்பிற்குரிய ஆசிரியர் மனோகரன். எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர், அன்பாக என்னை கண்ணு என அழைப்பவர்.ஒரு சில மணி நேரத்தில் முடிவு செய்தோம்.
வெறுமனே சென்று பார்ப்பதை விட, ஒரு சிறிய தேநீர் விருந்தை ஏற்பாடு செய்யலாமே என முடிவு செய்த போது, தலைமையாசிரியர் மணியரசன் அவர்கள் இன்முகத்துடன் இசைவு தெரிவித்தார்.
12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்த பள்ளிக்கூடத்தை பார்க்க செல்கிறோம் என்கிற துள்ளல் மனதிற்குள். பல பெருமை களை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு இந்த கட்டிடம் கட்டு குலையாமல் கம்பீரமாய் நிற்பதை கண்டு பெருமிதம் கொண்டேன்.
பல நல்லாசிரியர் விருதுகளையும், நல்ல தேர்ச்சி விகிதத்தையும் தந்துக்கொண்டிருக்கிற எமது பள்ளி, பல ஆயிரம் மாணவர்களை பண்படுத்தி இந்த சமூகத்திற்கு தாரை வார்த்துக்கொண்டிருக்கிறது. பல மாணவர்கள் உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் வெற்றிக்கொடி கட்டி பறக்கிறார்கள்.
மாலை 3 மணி போல அனைத்து ஆசிரியர்களையும் நூலக அறையில் சந்தித்தோம். பள்ளித் தோழமைகள் அதிகம் கலந்துக் கொள்ள இயலவில்லை.
அனந்தா, கயிலை, எனது தம்பி பாபு, அண்ணன் பையன் மோகன் என்கிற அளவில், கிடைத்த நேரத்தில் ஆசிரிய பெருமக்களுடன் உரையாடினோம். நான் 1988 ஆம் ஆண்டில்
மேல்நிலைக்கல்வியை முடித்து, வெளியே வந்துவிட்டேன். எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள்.
தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அறிமுகம் இல்லாவிடினும், பல நாட்கள் பழகியது போன்றுமுகமலர்ச்சி யுடன் முன்னாள் மாணவர்களாகிய எங்களுக்கு நேரம் ஒதுக்கி உரையாடியதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டோம்.
இந்த பள்ளி வளாகத்தில் எங்கள் காலடி படாத இடமே இல்லை. சிறிது நேரம் காலாற நடந்து முடித்த போது, அன்றைய நாளின் வகுப்புகள் முடிய, மாணவர்கள் குதூகல கூச்சலுடன் வெளியே வந்தார்கள். அவர்களோடு நாங்களும் பள்ளியை விட்டு வெளியேறினோம். ஆனால் எந்த வித ஆரவாரமுமின்றி அரைமனதுடன் பழைய நினைவுகளில் மூழ்கிய படி..ஒரு நிறைவான(3.7.2023) நாளாக அமைந்தது.
# திருச்சியிலிருந்து(இங்கிலாந்து) சங்கர் 🎋#