Close
நவம்பர் 22, 2024 8:04 காலை

சிலம்பம் – சில குறிப்புகள்… உங்கள் பார்வைக்கு..

அயலகத்தமிழர்கள்

சிலம்பாட்டம் -ஓர் பார்வை

சிலம்பம் பற்றிய பதிவை தொடங்குவதற்கு முன், என் சிலம்பாட்ட குருநாதர் சங்கிலித்தேவரை வணங்கி தொடர்கிறேன். இதை வாசிக்க அவர் இன்று நம்மிடையே இல்லை.

சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு. காட்டு விலங்குகளிடம் தம்மை காத்துக்கொள்ள மக்கள் கையாண்ட முறையானது, ஆதிகாலத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப்போராட ஆரம்பித்த காலத்தில் சிறு கத்தி, கோடரி, ஈட்டி, வேல், வாள்,போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முதலில் எடுத்தது கம்பு. மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் ‘சிலம்பு’. பின்னர் சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது.

வழக்கில் இந்த விளையாட்டை கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். உலகின் மிகப்பழமையான பாரம்பரிய தற்காப்பு கலையும் இது தான்.

சிலம்பாட்டத்தின் போது கால் மாற்றி மாற்றி வைத்து விளையாடும் போது சிலம்பொலி கேட்கும். கால் சிலம்பின் ஒலிகேட்டு பறவைகளும், மிருகங்களும் அந்த இடத்தை விட்டு ஓடும். இவ்விரண்டையும் பொருத்தி பார்த்து சிலம்பம் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப்படும் தொன்மையான
சிலம்பச்சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின்ஆட்சி முடிவுற்ற பிறகு,தமிழகம் பிற அந்நியர்களின் ஆக்கிரமிப்பால், அதன் தாக்கத்தால் அதன் பெயர்களும், ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன.

சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட இந்த கலையில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் கம்பினால் தொடுதல் போன்றவை அடிப்படையானவை.

சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஒரு வருடம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள்
பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்கு
குறைந்தது இருவர் வேண்டும். ஊர் திருவிழாக்கள், கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் தவறாது இடம்பெறுகிற, இந்த கலை தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் கற்று விளையாடி வருகின்றனர்.

மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை,
தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம்,
வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின்,அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக்கற்பதன் மூலம், சிலம்பக் கலையின் பல்வேறு உட்கூறுகளை கற்று தேற முடியும்.

உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடையும்
மெய்ப்பாடம் சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்.
குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப்பாடம். இது இரண்டாம் நிலைப் பயிற்சியாகும்.
மூச்சுப்பாடம் என்பது மூன்றாவதாக இடம் பெறும் பயிற்சியாகும். கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.

ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றை கற்றுக் கொண்டதற்கு பிறகு தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில ஆரம்பிக்கலாம்.

குத்துவரிசை என்பது சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியை கைகளால்வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும்.

எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ப, தன் நிலைகளை விரைவாக
மாற்றிக்கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும். ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே
தட்டுவரிசையையும் கற்றுக்கொள்ளலாம்.

மறுநிலையில் இருப்பவர் குத்துக்களை தம் மீது பாய்ச்சும்போது அவற்றை அவர்தம் நிலைக்கேற்ப தன் நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும்.
எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலகுவாக தம் பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும்.

குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது
அடி விழச்செய்தலை, வரிசைப்படுத்துவதே அடிவரிசை
என்பதாகும்.

குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை என கூடுதல் பாடங்களை கற்றுத் தேர்ந்த ஒருவர், அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சி அடையலாம்.

சிலம்பாட்டத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு,ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச்சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, சக்கர கிண்டி, கிளவிவரிசை, கதம்ப வரிசை, கருநாடக வரிசை, சித்திரச்சிலம்பம், கள்ளர் விளையாட்டு போன்ற 18 வகை சிலம்ப வகைகள் உள்ளன. இதில் ஆயுதம் பயன்படுத்தும் 20 உட்பிரிவுகளும் உள்ளன.

இத்தனை நுணுக்கங்கள், சிறப்பம்சங்கள், பாரம்பரியம் கொண்ட சிலம்பாட்டம், சிறு கிராமங்களில், குறு நகரங்களில் மட்டுமே விளையாடப்பட்டன. தற்போது தேசிய அளவில் விளையாடப்பட்டு, சில வெளி நாடுகளில் குறிப்பாக தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சர்வதேச போட்டிகள் வைத்து விருதுகள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும் சிலம்பம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விளையாட்டாக உருவெடுக்கவில்லை. எந்த ஒரு விளையாட்டும். கலாசார நிகழ்வும், உலகளாவிய ரீதியில், உடனே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தான், முனைப் போடு சிலம்பக்கலை சார்ந்த நிகழ்வுகளையும், வகுப்பு களையும் இளைய தலைமுறையினருக்கு மத்தியில் எடுத்துச் செல்லவேண்டும்.

இன்றில்லாவிடினும் என்றாவது ஒரு நாள் சிலம்பாட்டம், சர்வதேச போட்டிகளில் ஒன்றாக பங்கு பெறும். அப்போது முதல் கோப்பையை வெல்பவன், தமிழனாக தான் இருப்பான்.

# இங்கிலாந்திலிருந்து  சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top