“காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு. அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு…! – கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது.
கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி…
சங்க இலக்கியங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனின் நினைவு நாள் (அக்.17).
அனைத்துத் துறைகளிலும் பல நூல்களை எழுதியுள்ள கவிஞரிடம், ‘‘நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நூலைப் பின்பற்றுங்கள். ஆனால், நூலாசிரியரைப் பின்பற்றாதீர்கள்’’ என்றாராம். காலப்பெட்டகத்தின் ஞானப்பேழை கவிஞர் கண்ணதாசன். காலமாகி பல ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!
கண்ணதாசனுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் சொல்லத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும் பட்சத்தில் அதை ஒப்புக் கொள்ளத் தயங்கியதும் இல்லை.
இந்திய ஜனாதிபதியை போல் சம்பளம் பெறுகிறேன். ஆனால், இந்தியாவைப் போல் கடன்பட்டு இருக்கிறேன்’ என்று குறிப்பிடுவார். தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை.
காந்தியின் சுயசரிதையை போலவே தனது வாழ்க்கை வரலாற்றை உண்மையுடனும் நேர்மையுடனும் ‘வனவாசம்’ மற்றும் ‘மனவாசம்’ ஆகிய நூல்களில் பதிவு செய்தார். ‘ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது.
அதனால் எனது சரிதம் மற்றவர்களுக்கு பாடமாக அமையட்டும்’ என முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பார். மனித மனத்தின் லௌகீக ஆசைகளுக்கும், இறைவன் குறித்த தேடலுக்குமான ஆகச் சிறந்த உதாரணம் என்றால், முத்தையா எனும் கண்ணதாசனின் வாழ்க்கை தான்.
நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன், அவர் மாண்டு விட்டால் அதை பாட்டில் வைப்பேன். நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..,
தலைமுறைகளைத் தாண்டி, தலைமுறை இடைவெளியைத் தாண்டி இன்றும் நம் நெஞ்சில் குடியிருந்து, மக்கள் மனங்களில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மகோன்னத மனிதர்களிடம் தான், மரணம் கூட தோற்றுவிடுகிறது. கவிஞனில் கண்ணதாசன் ஒரு காலக்கணிதம். மரணத்தையும் தோற்கடித்த மகா கவிஞன்.
#இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋#