Close
செப்டம்பர் 20, 2024 7:03 காலை

பார்பெக்யூ- புறவெளி சமையல் முறை…. ஓர் பார்வை

அயலகத்தமிழர்கள்

பார்பெக்யூ- புறவெளி சமையல்

நமது முன்னோர்கள் எப்போது சமைக்கத் தொடங்கினர் என்று சரியாகச் சொல்வது கடினம். மானுடவியலாளர்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்ய தொடங்கினாலும், பைலோ ஜெனடிக் பகுப்பாய்வு மனித மூதாதையர்கள்1.8 மில்லியன் முதல் 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சமையலைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று கூறுகிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வொண்டர்வெர்க் குகையில் இருந்து எடுக்கப்பட்ட எரிந்த எலும்புத் துண்டுகள் மற்றும் தாவர சாம்பலின் மறு பகுப்பாய்வு, சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பகால மனிதர்கள் புறவெளி சமையலை அதாவது பார்பெக்யூ செய்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது.

தேசம் தேசமாக சென்ற ஸ்பானிஷ் வெற்றியாளர்கள் ஒரு புதிய இடத்திற்கு வந்த போது, கரீபியன் பழங்குடி மக்கள் வெயிலில் இறைச்சிகளை காயவைத்து, பதப்படுத்துவதை கண்டனர். இது ஒரு பழமையான மற்றும் கிட்டத்தட்ட முற்றிலும் உலகளாவிய முறையாகும்.

நாம் கூட இறைச்சிகளில் உப்பு தோய்த்து, வெயிலில் காயவைத்து, சில நாட்கள் கழித்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு இருக்கிறோம். அதனை உப்புக்கண்டம் என்றழைப்போம். பழங்குடி மக்கள் பொதுவெளியில் காட்டுப்பகுதிகளில் அதைச் செய்த போது முக்கிய பிரச்னையாக இருந்தது என்னவென்றால், இறைச்சிகள் கெட்டுப்போய், பூச்சிகளால் பாதிக்கப்பட்டன.

பூச்சிகளை விரட்ட, அந்த பூர்வீக சமையல்காரர்கள்சிறிய, புகைபிடிக்கும் தீயை உருவாக்கி, இறைச்சியை நெருப்பின் மீது அடுக்குகளில் வைத்தார்கள். புகையானது பூச்சிகளை விரட்டி, இறைச்சியைப் பாதுகாக்க உதவியது. மேற்கிந்தியத் தீவுகளின் பூர்வீக வாசிகள் இந்த செயல் முறைக்கு “பார்பகோவா” என்ற வார்த்தையை வைத்திருந்தனர். இந்த கூற்றில் சில விவாதங்கள் இருந்தாலும்,  இது நமது நவீன வார்த்தையானபார்பெக்யூவின் தோற்றம் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

மானுடவியலாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற வரலாற்றாசிரியர்கள் பார்பிக்யூவின் தோற்றம் பற்றி நூறு சதவீதம் உறுதியாக சொல்லவில்லை. இருப்பினும் செயல்பாட்டிலும் பெயரிலும் பார்பெக்யூவின் தோற்றம் இதுதான் என்று பாரம்பரியம் சொல்கிறது.

பார்பெக்யூ என்ற சொல் கரீபியன் பழங்குடியினரின் டைனோ என்ற மொழியிலிருந்து வந்தது. உயரமான மர மேடையில் கிரில் செய்வது என்பது பார்பகோவா. இந்த வார்த்தை முதன்முதலில் 1526 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள்பற்றிய ஸ்பானிஷ் ஆய்வாளர்களின் குறிப்பேடுகளில் அச்சிடப்பட்டது.

சுமார் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமினின் உயிரியலில் சில பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் முன்னோர்களுடன் ஒப்பிடும்போது, ஹோமோ எரெக்டஸ் மிகவும் சிறிய பற்கள், ஒரு சிறிய உடல் மற்றும் மிகவும் பெரிய மூளை ஆகியவற்றை கொண்டிருந்தது.

ப்ரைமாட்டாலஜிஸ்ட்கள் முன்வைத்த சர்ச்சைக்குரிய கருதுகோளின் படி,இந்த மாற்றங்கள் சமைத்த உணவால் உந்தப்பட்டது என்றும், உண்மையில், குரங்கு போன்ற மூதாதையர்களிடமிருந்து நமது வம்சாவளியை வேறு படுத்துவதற்கு சமையல் வழிவகுத்தது என்றும்ஹோமோ சேபியன்களின் உடல்கள் சமைத்த உணவு இல்லாமல் இருந்திருக்க முடியாது என்றும் நம்பினார்கள்.

சமையலுக்கு தேவையான நெருப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அறிவாற்றல் திறன்கள் தேவை, அதற்கு அப்பாற்ப்பட்டு சமையலுக்கான பொருட்களை தேர்வு செய்வது, ஒன்றுடன் ஒன்று சேர்ப்பது, சமையல் ஆகிற நேரம் அதற்காக காத்திருப்பது, எதை எப்போது சேர்ப்பது என்பதை நினைவில் வைத்திருப்பது மற்றும் சமையல் பொருட்கள் அடையும் உருமாற்ற செயல்முறை பற்றிய புரிதல், சமையலுக்குத் தேவையான அறிவாற்றல் மற்றும் நடத்தை திறன்கள் இவையெல்லாம் சிம்பன்சிகளிடம் இருப்பதாக சமீபத்திய சோதனைகள் ஊர்ஜிதம் செய்கிறது.

எனவே ஹோமோ எரெக்டசஸ்களிடமும் இந்த குணாதி சயங்கள் தொடர்ந்து ஹோமோ சேபியனுக்கு கடத்தப்பட்டி ருக்கிறது.சமைத்த உணவு உட்கொண்டதும் குறிப்பாக இறைச்சி நுகர்வு அதிகரித்ததால் மூளை அளவு பெரியதாக ஆகி இருக்கலாம் என்பது போன்ற சமையல் சார்ந்த கருது கோள்களில் பல குறைபாடுகள் உள்ளன.உயிரியல் சான்றுகளுக்கும் நெருப்பைக் கட்டுப்படுத்துவதற்கு கற்று தெரிந்த திறனுக்கும் இடையில் ஏற்பட்ட கால துண்டிப்பு முட்டுக்கட்டையாக இருந்தது ஒரு காரணம்.

சமையல் கண்டுபிடிக்கப்பட்ட போதெல்லாம், அது மனித கலாச்சாரத்தின் மிகவும் மாறுபட்ட மற்றும் கண்டுபிடிப்பு கூறுகளில் ஒன்றாக உருவானது. பல்வேறு வகையான விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் பாசிகள் ஆகியவற்றை நுணுக்கமாக பல நுட்பங்களைப் பயன்படுத்தி நாம் ஆயிரக்கணக்கான வகைகளில் அவற்றை சமைக்கிறோம்.

உண்மையில் உணவை உண்பதற்காக செலவிடும் நேரத்தை விட, சமையலுக்கான திட்டமிடுதலில் அதிக மணி நேரம் செலவழிக்கிறோம், பின்னர் பிரபலமான சமையல் நிபுணர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளைப் பார்க்க உட்கார்ந்து விடுகிறோம். அதிலிருந்து புதிதாய்ஏதேனும் கற்றுக் கொள்ளலாம் என்கிற ஆர்வத்தில்.

அந்த ஆர்வத்தின் தொடர்ச்சியாக, நீட்சியாக, உலகெங்கிலும் தங்கள் உணவை ஒரே மாதிரியாக சமைக்க ஆரம்பித்த மக்கள் புது புது வகையான உணவுகளை,மரபு வழி சமையலை மழுங்கடிக்காமல், உணவு கலைகளில் நவீனத்தை கூர்ப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

நாம் சமைக்கிறோம், நமக்காக சமைக்கிறோம். நமக்கானவர்களுக்காக சமைக்கிறோம். அதுவே நாம்.

#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top