Close
நவம்பர் 22, 2024 12:22 காலை

 தக்காளி… வரலாற்று குறிப்புகள்..

அயலகத்தமிழர்கள்

தக்காளியின் வரலாறு

போர்ச்சுகீசியர்கள் தான் தக்காளியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்று உணவு வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சீமைத்தக்காளி நம் நாட்டிற்கு வரும் முன்பே மணத்தக்காளி, சொடக்குத் தக்காளி, மரத்தக்காளி போன்றவை ஏற்கனவே நம்மிடம் இருந்து வந்தவை!.

தக்கிணி – என்ற சொல்லிலிருந்து தக்காளி என்ற பெயர் வந்திருக்கலாம். தக்கிணி – என்றால் மிகச் சிறியது, சிறிய அளவிலானது என்று பொருள்.இன்றைக்கும் தக்கிணி யோண்டு என்ற சொல் வழக்கில் உண்டு. அதாவது சீமைத்தக்காளிக்கு முன்பே நம்மிடம் இருந்த தக்காளிகள் தக்கிணி தோற்றம் கொண்டவையே!

நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தான் தக்காளி பயிரிடப்படும் நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது, உலக அளவில் தக்காளி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2 -ஆவது இடத்தில் உள்ளது. 2022 -ல்
20 மில்லியன் டன்னுக்கும் மேலாக தக்காளிபயிரிடப்பட்டதாக, தேசிய தோட்டக்கலை வாரியம் மதிப்பிட்டு இருக்கிறது.

உணவு வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது போல, தக்காளிக்கு இந்திய மண்ணில் 200 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கிடையாது. ஆரம்பத்தில், தக்காளி அளவில் சிறிதாக இருந்தது. ஆனால், ஹைப்ரிட் தக்காளி வந்த பிறகு, அவற்றின் நுகர்வு வெகுவாக அதிகரித்தது. தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைக்குப் போய்விட்டது. எப்போதெல்லாம் விளைச்சல் குறுகி, குறிப்பிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போதுமான அளவின்றி, பற்றாக்குறை ஏற்படுகிற போது, விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

தக்காளி காய்கறி வகையில் வருமா/ பழ வகையில் வருமா?!என்கிற விவாதம் பல காலம் நீடித்தது. தாவரவியல் ரீதியாக, தக்காளி ஒரு பழம், ஏனெனில் அது ஒரு பூவிலிருந்து உருவாகிறது மற்றும் விதைகளைக் கொண்டுள்ளது.

உணவியல் நிபுணர்களின் பார்வையில், இது ஒரு காய்கறி யாகவும் கருதப்பட வேண்டும் என்பதாகும். இருப்பினும் இதை வழக்காக எடுத்துக்கொண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம், 1893 ஆம் ஆண்டு தக்காளியின் சமையல் பயன்பாடுகள் காரணமாக இது ஒரு காய்கறியாக கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது,

பூவாகி, காயாகி, பழமாகி முடிகிற தக்காளி, காய்கறியாகக் கருதப்படும் ஒரு பழம். ஆகையால் தக்காளி பழ வகையை சார்ந்ததே.தக்காளி என்பது காய்கறி வகை; தக்காளிப் பழம் என்பது பழவகை. வாழைக்காய் காய்கறி என்கிற போது , வாழைப் பழம் பழவகை தான், அதே போல தான் இதுவும்.

தக்காளியை நாம் பெரும்பாலும் பழக்கடைகளில் பார்ப்பதில்லை. தக்காளியை நாம் காய்கறி கடைகளில் பார்க்கிறோம்.ஆக எந்த கடையில் தக்காளியை நாம் பார்த்திருக்கிறோமோ அதுவே அதனுடைய இருப்பிடம் என்கிற முடிவுக்கு நாம் வருவோம்.

 ஒரு காலத்தில், பிரிட்டனில் தக்காளி விஷத்தன்மை வாய்ந்த பழமாக பார்க்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அதன் இலைகள். சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்த பெல்லடொன்னா தாவரம் விஷயத்தன்மை உடையது.இதன் இலையும் தக்காளியின் இலையும் ஒரே மாதிரியாக இருப்பதால் தக்காளியையும் விஷத்தன்மை உடையதாக கருதப்பட்டது .

மேஜைகளை அழகாக அலங்கரிக்கவே தக்காளிகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. 1800 களில் கூட அமெரிக்காவில் தக்காளியை சந்தேகத்துடனேயே அணுகினர். ‘விஷத்தன்மை வாய்ந்த ஆப்பிள்’ என்றும் தக்காளி
அழைக்கப்பட்டது. தக்காளியை உண்ட பணக்காரர்கள் உயிரிழந்ததாக சில புத்தகங்களில் கூட குறிப்பிடப்பட்டுள் ளதாக செய்திகள் பரப்பப்பட்டன.

ஆனால், இது முற்றிலும் தவறானது. ஏனென்றால், இந்த இறப்புகளுக்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய ‘பியூட்டர்’ பாத்திரங்கள் தான் என்பது பின்னாளில் கண்டறியப்பட்டது.
தக்காளியில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த அமிலம் காரீயத்துடன் வினையாற்றும்போது ஃபுட் பாய்சனிங் அதாவது உணவு நஞ்சாகியிருக்கலாம் என கணிக்கப்பட்டது.

தக்காளி விஷம் என்று தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட காரணத்தை மனதில் கொண்டு, பழங்கால திரையரங்கு களில் நாடகமோ கச்சேரியோ தரமாக இல்லாமல், தாறுமாறாக நடக்கிற போது தக்காளியை வீசினர்!.
விரக்தியை வெளிக்காட்ட, எதிர்ப்பை பதிவு செய்ய இந்த பழக்கம் இன்னும் சில இடங்களில் வழக்கத்தில் இருக்கிறது.
பதிவை வாசித்து விட்டு, கையில் தக்காளியை கையில் எடுத்து விடாதீர்கள்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🍅 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top