Close
நவம்பர் 21, 2024 4:44 மணி

 முக்கனிகளும்(மா பலா வாழை .. முத்தமிழும்(இயல் இசை நாடகம்)..

அயலகத்தமிழர்கள்

முக்கனிகள்

முக்கனிகள் தரும் மரங்களை இங்கிலாந்தில் வளர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. சிறு கன்றுகளாக வீட்டிற்குள் வளர்கிறது தற்போது. பொதுவாக குளிர் பிரதேசங்களில் இத்தகைய மரங்கள் செழித்து வளர்வதில்லை.

உலக வெப்பமயமாதல் நிகழ்வால்,20 -30 வருடங்களுக்கு முன்னர்இங்கிலாந்தின் பல பகுதிகளில்இருந்த குளிரும் பனிப்பொழிவும்இன்றைய நாளில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மெல்ல மெல்ல தட்பவெட்பம் மாறுகிறது.

இத்தகையசூழலில் மா, பலா, வாழை மரங்கள்தோட்டத்தில் வைத்தாலும் தழைத்து செழித்து வளர்ந்து காய் கனிகளை தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றுதான்நினைக் கிறேன். வேண்டுமானால்ஆசைக்கு வீட்டிற்குள் வைத்து அழகு பார்க்கலாம்.

மா, பலா, வாழை என்று முக்கனிகளை தமிழ் மொழியின் இயல், இசை, நாடகம் என்பதாக ஒப்பிட்டு பார்க்கலாம். மா – முக்கனியில் முதல் கனி, ராஜ கனி. அது போல தான் முத்தமிழின் முதற்பிரிவு “இயல்”. மாம்பழம் சில இனிக்கும், சில புளிக்கும், சில மாங்கனிகள் பார்வைக்கு அழகாக இருக்கும். மாங்கனிகளைப் பொறுக்கி, தேர்ந்தெடுத்துப் புசிக்க வேண்டும்.

இதுபோலவே, இயல் இயற்றமிழும் பல வடிவிலே, பல முறைகளிலே, பற்பல பண்புகளை கொண்டது. பயன் தருவதாகவும், பயனற்றதாகவும் பல விதங்களில் அமைந்திருக்கின்றது.

புராண இலக்கியம், படைப்பிலக்கியம், பொழுது போக்கு இலக்கியம், கற்பனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்று இயற்றமிழ் எத்தனையோ, சுவையும் சுவையற்றது மான, பயனும் பயனற்றதுமான பல இலக்கியங்களைக் கொண்டிருக்கிறது.

பலா – தடித்த தோலுடன், கையைக் குத்தக்கூடிய முட்களையுடையதாகத் தோன்றுகிறது பலாப்பழம். பார்வைக்கு கரடு முரடாக தெரிந்தாலும், சிரமம் பாராது தோலை உரித்து விட்டால், உள்ளே இருப்பதோ தேன் போன்ற சுவையான சுளைகள்.

முள் நீக்கித் தோலை உரித்தெடுத்துப் பெறும் பலாச் சுளையைப் போன்றதுதான் ”இசை.” இசையைக் கற்பது இசையில் ஞானம் பெறுவது எளிதல்ல! இசையில் தேர்ந்திட, இராகம், தாளம், இன்னும் எத்தனையோ முறைகளைத் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும்.

இவைகள் அனைத்தும் எடுத்த எடுப்பிலேயே சுவையைத் தராது. முள்ளை நீக்கி பலாசுளையை எடுக்கும் போது தான் தித்திப்பு தெரிவது போல இசைத் தமிழிலும் அப்படித்தான்.

வாழை – தோலை உரித்ததும் பழத்தைச் சுலபத்தில் உண்ண முடிகிறது. உரித்தவுடனே வெகு எளிதிலே பழத்தின் பயனை பெறுகிறோம். அது போலவே முத்தமிழின் மூன்றாவது பிரிவு “நாடகம்”. வாழை போலவே நாடகம் ! .

அரங்கேற்றத்திலும் நடிகர்களை தேர்ந்தெடுத்தல், பயிற்சிக் காலம், பின்னணி, என எல்லாம் முதலில் ஒன்று சேர்ந்து அமையச் சற்று சிரமமாக இருக்கும். அமைந்தபின் தோல் உரிக்கப்பட்ட வாழைப்பழம் போல தான். சுலபமாக இலகு வாக அமைந்து விடும். இப்படிப் பட்டதே நாடகம். ஆக முத்தமிழோடு முக்கனிகளும் ஒன்றிணைந்து இருப்பது போல் இவை மூன்றும் என்னோடு தற்போது..

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top