Close
ஜூலை 7, 2024 10:53 காலை

சமையல்… குழாய் புட்டு, நீத்துப்பெட்டி புட்டு… இங்கிலாந்திலிருந்து சங்கர்..

அயலகத்தமிழர்கள்

சமையல்

புட்டு இரண்டு வகைப்படும். குழாய் புட்டு, நீத்துப்பெட்டி புட்டு

மாவு, புட்டு போன்றவற்றை அவிக்கப் பயன்படும் குழாய் வடிவ சாதனம் மரத்தால் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. தற்போது அலுமினியம், எவர்சில்வர் என பல பொருட்களால் செய்யப்பட்டு, பல வடிவங்களில் சந்தையில்கிடைத்தாலும், பனை ஓலையால் ஆன கூம்பு வடிவ நீத்துப்பெட்டி என வட்டார வழக்கில் அழைக்கப்படுகிற சாதனம் இலங்கையில் பிரபலம்.

இன்றும் கிராம, நகரப்புறங்களில் பயன்பாட்டில் உள்ள நீத்துப்பெட்டி நம் முன்னோர்கள் நமக்கு தந்த ஒரு சொத்து. தமிழர் பாரம்பரியத்தில் பல்வேறுபட்ட உணவுகள் காணப்பட் டாலும் காலை, இரவு உணவு வேளை பெரும்பாலும் புட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எல்லா வீடுகளிலும் புட்டு, ஒரு வேளை உணவாக அவர்களின் சாப்பாட்டு மேஜையில் இருக்கும். அந்தளவிற்கு இந்த உணவு பிரபலமாக உள்ளது. அரிசி மா, கோதுமை மா கொண்டு தயாரிக்கப்படும் புட்டு அவிப்பதற்காக இந்த நீத்துப்பெட்டியை பயன்படுத்துகிறார் கள்.

இது பெரும்பாலும் பனை ஓலை கொண்டு இழைக்கப்படும். தற்போது பிரம்பு கொண்டு இழைக்கப்பட்ட நீத்துப் பெட்டிகளும் சந்தைகளில் காணப்படுகின்றது. பனையோலை குருத்தை வெட்டி நிழலில் அல்லது வெயிலில் நன்றாக காயவிட்ட பின், அதை சீரான அளவுகளில் நீள நீள கீலங்களாக வெட்டப்பட்டு, ஓலைக்கீலங்கள் நேர்த்தியாக பின்னப்பட்டு நீத்துப்பெட்டி உருவாக்கப்படும்.

இதற்காக முற்றிய பனை ஓலையை பாவிக்க முடியாது, பின்னும் போது ஓலை மடிந்து உடைந்து விடும் என்பதால். அதற்காக மிகவும் இளம் குருத்தோலைகளையும் பாவிக்க முடியாது, பின்னப்பட்ட நீத்துப்பெட்டி உறுதியில்லாமல் வளைய கூடியவாறு இருக்கும் என்பதால். பொதுவாக இளம் குருத்தில் இருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது குருத்தோலை தான் வெட்டி எடுக்கப்பட்டு பயன்படுத்தப் படும்.

கூம்பு வடிவில் இழைக்கப்பட்டிருக்கும் நீத்துப்பெட்டியின் கூம்பின் முனைப்பக்கம் கீழ் நிற்கத்தக்கவாறு நீருள்ள பானையுள் வைத்தால், அரைவாசி நீத்துப்பெட்டி உள்ளேயும், அரைவாசி பானைக்கு வெளியேயும் இருக்கத்தக்கதாக பானையில் விளிம்பில் பெட்டி பொருந்தி நிற்கும். நீத்துப்பெட்டி தொடாதவாறு பானையில் நீர் இருக்க வேண்டும்.

பிடித்துத் தூக்க ஏதுவாக இரண்டு காது மடல்கள் போல் வடிவமைத்து பின்னப்பட்டிருக்கும். இதற்காக நீத்துப்பானை என்ற ஒரு பானை பாவிக்கப்படும். அதில் சிறிதளவு நீர் விட்டு நன்கு கொதிக்க ஆரம்பித்த பிறகு, நீத்துப்பெட்டியில் புட்டு மாவை நிரப்பி அதில் வைத்து நீராவி வெளியில் போகாதவாறு நீத்து மூடி என்ற சாதனத்தால் மூடி சில நிமிடங்கள் அவிக்கப் படும். நவீன மயமாக மாற்றங்கள் ஏற்பட்டாலும் நீத்துப்பெட் டியில் புட்டு அவித்து சாப்பிடுவதில் உள்ள சுகமே தனியானது தான்.

அரிசி மாவில் புட்டு செய்யலாம். புட்டு மாவு என்று கடைகளில் கிடைக்கிறது. சோள புட்டு மாவு, சம்பா கோதுமை புட்டு மாவு, சம்பா அரிசி புட்டு மாவு என்று பல வகைகளில் கிடைக்கிறது. அரிசி மாவில் லேசாக தண்ணீர் தெளித்து மணல் போல உதிர்த்து கொள்ள வேண்டும்.

அதிகம் தண்ணீர் சேர்த்து விட்டால் கட்டி கட்டியாகிவிடும். துருவிய தேங்காய் எடுத்து கொள்ள வேண்டும். புட்டு குழாயில் தேங்காய் துருவல் கொஞ்சமாக போட்டு அதன் மேல் புட்டு மாவு போட்டு மூடி விட்டு வேக வைக்க வேண்டும். ஆவி வந்தவுடன் எடுத்து சர்க்கரை, ஏலக்காய், கொஞ்சம் நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேவைப்பட்டால் வாழைப்பழம் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.

சிவப்பு அரிசி மா புட்டுவை, மாப்பிள்ளை சம்பா அரிசி மா புட்டு என்று கூறுவது வழக்கம். சிவப்பு அரிசி மா புட்டு மிகவும் இலகுவாக தயாரித்துக் கொள்ள முடியும். மாப்பிள்ளை சம்பா அரிசி மா புட்டு செய்வதற்கு (சிவப்பு அரிசி மா புட்டு) முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசி மாவை தயாரித்து கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை 3–4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய அரிசியில் இருந்து தண்ணீரை வடிகட்டி துணியிலோ அல்லது பனை ஓலையால் வேயப்பட்ட பாயிலோ பரவி உலர்த்த வேண்டும். உலர்ந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை மிக்ஸியில் அரைத்து சலித்து எடுத்து கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்த அரிசி மாவை இரும்பு கடாயில் போட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த அரிசி மாவை ஆற வைத்து வாளி அல்லது பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி புட்டு மா.
தேவை ஏற்படும் போது தேவையான அளவு இந்த மாப்பிள் ளை சம்பா அரிசி புட்டு மாவை எடுத்து தேவையான அளவு உப்பு கலந்து நன்றாக கொதித்த தண்ணீர் சேர்த்து குழைக்க வேண்டும்.

குழைத்த அரிசி மாவை சிறு சிறு துண்டுகளாக கொத்தி எடுத்து அதனுடன் தேங்காய் பூ சேர்த்து நீராவியில் அவித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான மாப்பிள்ளை சம்பா அரிசி மா புட்டு தயார். இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி மா புட்டு இலங்கை தமிழர்களின் காலை மற்றும் மாலை வேளைகளில் பிரதான பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்து தமிழர்களின் பிரதான உணவாகும். இந்திய மக்கள் பெரும்பாலும் தமிழ்நாடு மக்கள் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி மா
புட்டுடன் வெல்லம் சர்க்கரை போன்ற இனிப்பு கலந்து உண்பது வழக்கம்.

ஆனால் இலங்கை தமிழர்கள் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி மா புட்டுடன்கோழிக்கறி,  மீன் கறி, ஆட்டுக்கறி, நண்டு கறி, இறால் கறி, முட்டை கறி, பொரியல் அவியல் போன்ற கறிகளுடனும் உண்பது வழக்கம்.

புட்டுக்கும் தேங்காய் பூவுக்கும் உள்ள உறவு மற்றும் குழாய் புட்டுக்கும் கொண்டை கடலைக்கும் உள்ள உறவு என்பது அவ்வளவு இணக்கமானது

இலங்கையின் இடியப்பமும் புட்டும் தமிழ் நாட்டு மக்களின் இட்லி தோசை போன்ற அன்றாட வாழ்வில் உணவு. தாய் மண்ணை விட்டு உலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும், புட்டுடன் ஆன உறவைத் தமிழனிடம் இருந்து எந்த சக்தி யாலும் பிரிக்க முடியாத அளவிற்கு இன்றளவும் இருக்கி றது.வாரத்தில் சில நாட்கள் அவித்து சுவைத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top