கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ், பரிசுகளை வைக்கும் ஐதீகத்தின் தோற்றத்திற்குள் மூழ்கினால், மனதைக் கவரும் அந்த பாரம்பரியம் ஒரு வளமான வரலாற்று மரபு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டியதில்லை.
ஆனால் அதன் அழகு இந்த கொண்டாட்ட நாளில் பன்மடங்கு அதிகரிக்கிறது. கிறிஸ்துமஸுக்கு பரிசளிக்கும் வழக்கம் ஜெர்மனியில் 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என சொல்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் மரங்கள் இனிப்புகள் மற்றும் பொம்மைகளால், வாழ்த்து அட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று குழந்தைகள் அவற்றை அனுபவிக்க அனுமதிக்கப் பட்டனர்.
இதிலும் விக்டோரியா மகாராணியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் பிறந்த அவரது கணவர் இளவரசர் ஆல்பர்ட்டின் தாக்கத்தால், வின்ட்சர் கோட்டையில் கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்த போது இந்த வழக்கம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக மரத்தைச் சுற்றி அதன் கீழ் பரிசுகள் வைக்கப்பட்டன. இது படிப்படியாக, உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளுடன் கலந்து உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாக மாறியது. இதற்கென பிரத்தியேக காரணம் இருப்பதாக தெரியவில்லை.ஒவ்வொரு பரிசும் அன்பு, அக்கறை மற்றும் நல்லெண்ணத்தை குறிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் குழந்தைகளின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின் நம்பிக்கையில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. அவர்களது பிஞ்சு கைகள், கிறிஸ்துமஸ் மரத்தடியில் போர்த்தப்பட்ட பரிசுகளிலிருந்து விலகி இருப்பதில்லை. எப்போது அவற்றை பிரித்து பார்ப்போம் என்று அவர்கள் கைகள் பரப்பரப்புடன் இருப்பதை பார்த்துக் கொண்டிருப்பது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் மரத்திற்கு கீழ் பரிசுப்பொருள்களை வைப்பதும், கிறிஸ்துமஸ் தினமன்று அவற்றை பிரிப்பதும் ஐதீகம் என நாமும் பின்பற்றுகிறோம். ஆனால் பல வீடுகளில் குழந்தைகளுக்கு பொறுமை இல்லை, பண்டிகை நாளுக்கு முன்பே பிரித்து எடுத்து விடுகின்றனர்.
ஐதீகத்தை மீறுவதும் அதை உடைப்பதும் அவர்கள் எண்ணமல்ல. பிள்ளைகள் கல்லூரியில் காலடி வைத்தாலும் இன்னும் மறையாத மழலைத்தனங்களை மெச்சாமல் இருக்கமுடியவில்லை.
குழந்தைகள் வளர்வதும், வளர்ந்த பிறகும் குழந்தைகளாக இருப்பதும் நமக்கு சந்தோஷம் தான்.நாம் பெரியவர்கள் ஆகி விட்டோம். நாம் நம் குழந்தை பருவத்தில் பண்டிகை கொண்டாட்ட காலங்களில் செய்த மீறல்களை நம் பிள்ளைகள் பிரதிபலிக்கும் போது, இழந்த அந்த நமது பால்ய காலத்து ஏக்கம், பண்டிகை காலங்களில் கூடுதலாக நம் மீது படர்ந்து விடுகிறது..குழந்தைகளோடு சேர்ந்து நாமும் குழந்தைகளாக கொண்டாடுவோம்.அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..,
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #