Close
நவம்பர் 22, 2024 2:25 காலை

 மறைந்தும் மறக்கமுடியாத கேப்டன் விஜயகாந்த்..

இங்கிலாந்திலிருந்தகு சங்கர்

மறைந்தார் கேப்டன்

 மறைந்தார் கேப்டன்..,
மதுரை மண்ணுக்கே உரிய துணிவு மிக்க விஜயகாந்துக்கு,
கிராமப்புறங்களில் வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. 80-90-களில் பிறந்த பலருக்கு ஆதர்சமான நாயகன் யார் என்று கேட்டால் நிச்சயம் விஜயகாந்த் என்று பலர் சொல்வார்கள்.

அவருக்கு திரையில் ஒரு வேடம் நிஜத்தில் ஒரு வேடம் எல்லாம் கிடையாது. நிஜத்தில் எப்படியோ திரையிலும் அப்படி தான்.
திரையில் எப்படியோ நிஜத்திலும் அப்படித்தான். தர்மம் செய்வதில் சளைக்காதவர். திரைத்துறையின் இவ்வளவு உயரத்தை அவர் எளிதில் பெறவில்லை. அடுக்கடுக்கான பல தோல்விகள், பல அவமானங்கள். அனைத்தையும் அனுபவித்தவர் விஜயகாந்த்.

ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த அவரை எஸ்.ஏ.சி தான் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அதனால் எஸ்.ஏ.சி மீது தனி மரியாதை உண்டு அவருக்கு. அதன் பின்னும் செந்தூரப் பூவே, ஊமை விழிகள் போன்ற படங்களின் மூலம் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அவருக்கு என ரசிகர் கூட்டமும் உருவாகி வளர்ந்தது.தனது தயாள குணத்தால் புகழையும் பெற்றார்.

ரஜினிகாந்துக்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் போல், விஜயகாந் துக்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்தி ருக்கிறார். ஆபாவாணன், ஆர்.வி.உதயகுமார் என பல புதுமுக இயக்குநர்களைத் திரைக்கு அறிமுகப்படுத்தி வைத்த விஜயகாந்த், தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங் களிலும் நடிக்கவில்லை.

தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர். புரட்சிக் கலைஞர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘கேப்டன்’ என வலம் வந்தார்.

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்த போது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா வில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் விஜயகாந்த் வீட்டில் 100 பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு பரிமாறப்படும் என சொல்வார்கள். எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமை யை முடித்த போது விஜயகாந்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் தனது அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவை கைபிடித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் அனைவரையும் ஒன்று கூட்டி போராட்டம் நடத்தியது இவர் மட்டுமே. இலங்கை மக்கள் சாகும் போது எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று மறுத்தவர். மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழகு பார்த்தவர்.

விஜயகாந்த் என்ற நடிகர் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் தலைவராக உருமாறிய வருடம் 2005. விஜயகாந்த் என்ற தனி மனிதனுக்காகத்தான் தேமுதிக கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியது. முதல் தேர்தலிலேயே 8.2 % சதவீத வாக்குகள் பெற்றார்.

பிற அரசியல்வாதிகளை ஒப்பிடும்போது ஆரம்பம் முதலே நல்ல நோக்கங்கள் உடையவர். அலங்காரமில்லாத பேச்சு. அதில் ஒரு வித உண்மை தன்மையும், மக்கள் மீது அக்கறையும் வெளிப்படையாகத் தெரியும்!

ஏழை எளிய மக்களுக்கு இன்னும் பல நன்மைகள் நடக்கும், குற்றம் செய்தவர்களுக்கு தாமதம் இன்றி தண்டனை கிடைக்கும், பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவார்,

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கி போட்டு மிதிப்பார், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தெருவில் ஓட விட்டு அடிப்பார்.., என்கிற எதிர்பார்ப்பு எல்லாம் தவிடு பொடியானது. ஏறுமுகமாக இருந்த அரசியல் வாழ்க்கை சரிவை சந்தித்தது.

எது எப்படியாக இருப்பினும், உடல் நிலை நலிவடைந்து, சிகிச்சை பெற்ற போது.., அநீதிகளை தட்டி கேட்கும் கேப்டனாக, பழைய பன்னீர்செல்வமாக!! சத்திரியனாக!! மீண்டும் மீண்டு வர வேண்டும் என்கிற அனைவரது பிரார்த்தனையும் பொய்த்து விட்டது.

அரசியலைத் தாண்டி அனைவருக்கும் பிடித்தமான ஒரு மாமனிதம்மறைந்து விட்டது .

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top