Close
நவம்பர் 21, 2024 6:49 மணி

கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகை கற்பனையில் கூட சாத்தியமில்லை

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பொங்கல் கரும்பு

கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகை, கற்பனையில் கூட சாத்தியமில்லை. கரும்பைக் கடித்து ருசிக்காமல், பொங்கல் கழிந்ததாக நினைவில் இல்லை. இங்கிலாந்து வந்த பிறகு அந்த அனுபவம் அறவே அற்றுப்போனது.

சிறுபிள்ளையாக  இருந்த போது தம்பி, தங்கை, நண்பர்களு டன் சேர்ந்து கரும்பை துண்டு துண்டாக வெட்டி, கடித்து சுவைத்து சக்கையாக துப்பிய காலங்கள், நினைவில் வந்து நிழலாடுகிறது. இந்த பொங்கலுக்கு இங்குள்ள ஒரு தமிழ் கடையில் ரெண்டு துண்டு வாங்கி வந்து பொங்கல் வைத்தோம்.

பொங்கலில் கரும்பு முக்கியத்துவம் பெற்றதற்கு சிறப்பான காரணம் ஏதுமில்லை என்றாலும், தை மாதத்தில் பல அறுவடைகள் இருந்தாலும் ஒரு வருட நீண்ட கால அறுவடை பயிரான கரும்பை, பொங்கல் படையலில் சேர்த்ததின் காரணம் நல்லபடியாக அறுவடை நடந்துள்ளதை இறைவனுக்கு அறிவித்து, அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இருக்கலாம். பொங்கல் பண்டிகை என்பதே விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப் படுத்திய பண்டிகை தானே.

உலகமெங்கும் வெப்ப நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிற கரும்பு இந்தியாவில் எப்படி அறிமுகமானது என்று தமிழ் இலக்கியங்களின் மூலம் அறியமுடிகிறது. பசிபிக் தீவுகளில் இருந்தே, உலக நாடுகளுக்கு கரும்பு பரவியதாக சொல்லப் படுகிறது. இந்தியாவில் கி.மு.500 -களிலேயே கரும்பு பயிரிடப் பட்டதாக குறிப்பாக தமிழகத்தில் சங்க காலத்திலேயே பயிரிடப்பட்டு வந்துள்ளது.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்களில் ஒருவர், கடல் கடந்த நாடு ஒன்றில் இருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழ் நாட்டில் பயிரிடுவதற்கு ஏற்பாடு செய்ததாக புறநானூறு கூறுகிறது.

தித்திக்கும் கரும்பு பயிரை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்கள், தமிழர்களான தருமபுரி அதியமான்கள்! கடலுக்கு அப்பால் உள்ள நாட்டிலிருந்து அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டுக்கு கொண்டு வந்தவனது வழித்தோன்றல் என்று புறநானூறு கூறுகிறது.

கரும்பை அரைத்துச் சாறு பிழிந்து எடுக்கும் ஆலைகளும் சங்ககாலத்தில் செயல்பட்டன. கரும்புச் சாற்றில் இருந்து கருப்பட்டி, சர்க்கரை, கற்கண்டு முதலியனவும் செய்யப்பட்டது போன்ற ஏராளமான செய்திகளைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

கரும்பாலை ஒலிக்கும் போது, அருகில் இருக்கும் நீர் நிலையில் உள்ள பெரிய வாளை மீன்கள் துள்ளிப் பாயும் என்றும், நீர் வளம் மிக்க மருத நிலத்தில் கரும்பு விளைவிக்கப்பட்டு ஆலைகளில் அரைக்கப்பட்டது என்றும் புறநானூறு கூறுகிறது.

“கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கு” என்று வயல்களில் கரும்பும் நெல்லும் பயிரிடப்பட்டது குறித்து கூறிய சிலப்பதிகாரம், “பொங்கழி யாலைப் புகையொடு பரந்து, மங்குல் வானத்து மலையிற் றோன்றும்” – அதாவது கரும்பாலைகளில் கரும்புப் பாகைக் காய்ச்சுகின்ற புகை வெளியில் பரவி, அருகில் உயரமாகக் குவிக்கப்பட்டிருக்கும் நெற்பொலியைச் சூழும். அவ்வாறு புகையால் சூழப்பட்ட நெற்பொலி ஆனது, மேகம் சூழ்ந்துள்ள மலை போலத் தோன்றும் என்று கழனிகளில் விளைந்த கரும்பு ஆலைகளில் ஆட்டி காய்ச்சப்பட்ட நிகழ்வைச் சுவைபடக் கூறுகிறது.

கரும்பு என்பது உழைப்பை கற்று தரும் வகையில் உதாரணம் காட்டப்படுகிற பயிர். பொறுமையாக திடகாத்திரமாக, உறுதியாக வளர்ந்து, இறுதியில் மக்களுக்கு தித்திப்பை வழங்குகிறது. இளமையில் கஷ்டப்பட்டு மக்கள் உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் முதுமையில் இனிமையான வாழ்வு கிடைக்கும் என்பதை உணர்த்துகிற இந்த கரும்பு உழவர் திருநாளில், முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சர்யமில்லை.

# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top