தோழர் ஜீவா மகத்தான பொதுவுடமைத் தலைவர், அவரின் கொள்கைகள் மற்றும் மேன்மையை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கடந்த தலைமுறையின் கடமை. தனது நண்பன் காமராஜரிடம் எந்த உதவியும் எதிர்பார்க்காமல், அவரையும் கொள்கை அளவில் எதிர்த்த சமூக சொற்பொழிவாளர். அவரோடு கம்யூனிஸம் மறைந்து விட்டது.
கம்யூனிஸ பெருமை இப்போது சமரசம் செய்து கொண்டு, அதன் கொள்கையை கூறுபோட்டு கொண்டிருக்கிறது. சுயநல மில்லாத பொதுநல தியாகிகள் வாழ்ந்த புண்ணிய தமிழகம், தற்போது சுயநலவாதிகளின் கூடாரமாகி கொண்டிருக்கிறது. ஜீவாவின் சிந்தனைகள் இளைஞர்கள் மனதில் விதைக்கப் படவில்லை, மறைக்கப்பட்டது.
பாரதிக்கு, தாசனாக தன்னை சமர்ப்பணம் செய்த பாரதிதாசனும், பெரியார் தன் திருமணத்தின் போது, முடிவெடுப்பதில் குழப்ப நிலையில் இருந்தபோது ஆலோச னை வழங்கிய ராஜாஜியும், மிக நெருக்கமான உறவு இல்லையென்றாலும் அம்பேத்காரை, மிக மரியாதையுடன் நடத்திய காந்தியும், தான் இறக்கும் தருவாயிலும் காமராஜரை நினைவு கூர்ந்த ஜீவானந்தமும், மேன்மக்கள் மேன்மக்களே என்பதை நமக்கு உணர்த்தியவர்கள்.
அவர்கள் கொண்ட கருத்தியல்களின் பொருட்டே ஒருவர் மீது மற்றொருவர் பகைமை பாராட்டினர், இருப்பினும் அவர்களுடைய Friendship and mutual respect are separate from personal ideologies. தற்போது இதுபோன்ற ஒரு வேறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட தனித்தன்மை கொண்ட ஆளுமைகளை ஒரு ஒப்புமைக்காக தேடுகையில் ஒருவரும் இல்லை என்பதே நடைமுறை. கேள்விப்பட்ட இரு நிகழ்வுகள், அவரது நினைவு நாளில், என் நினைவுக்கு வந்து போகிறது. பகிர்ந்து கொள்கிறேன்.
ஜீவா, காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றை தொடங்கி நடத்தினார். அங்கு காந்தி வர வேண்டும் என்று விரும்பினார்.இதைக் கேள்விப்பட்டு காரைக்குடிக்கு வந்திருந்த காந்தி ஜீவாவை பற்றி அறிந்து, சிராவயல் ஆசிரமத்திற்கு நேரில் சென்று பார்த்தார்.
ஜீவாவிடம் ஆசிரமம் நடத்த சொத்து ஏதாவது வைத்திருக்கிறீர் களா? என்று கேட்டதற்கு எனக்கு ஏது சொத்து? நாடு தான் என்னுடைய ஒரே சொத்து என்று பதிலுரைத்தார் ஜீவா. அதைக்கேட்டு நெகிழ்ந்து போன காந்தி “இல்லை இல்லை நீங்கள் தான் இந்தியாவினுடைய சொத்து” என்றார்.
தமிழ்நாட்டில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது பள்ளி திறப்பு விழாவிற்கு தாம்பரம் சென்றார். பள்ளியை தொடங்குவதற்கு தொடர்ந்து வலியுறுத்தியவர் ஜீவா என்பதற்காக, அவரை விழாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்து ஜீவாவின் வீட்டிற்கு சென்றார் காமராஜர்.
வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாத அந்த வீட்டுக்குள் சென்றார். அப்போது ஜீவா மாற்று வேட்டி இல்லாததால் கட்டியிருந்த வேட்டியை துவைத்து காய வைத்துக் கொண் டிருந்தார். இதைப் பார்த்து கண்கலங்கிய காமராஜர் ஜீவாவிடம் இது தான் உங்கள் வீடா, உங்களுக்கு நல்ல மாற்று வீட்டை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னதற்கு இந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் நீங்கள் புது வீடு தந்தால் நானும் வாங்கிக் கொள்கிறேன், இல்லையேல் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.
ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்ப்பணித்தவர். தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு தன் இறுதி மூச்சு வரை போராடியவர் தோழர் ப. ஜீவானந்தம்.இன்றைய நாளில் தமிழக பொது அரசியலின் உன்னதமான ஜீவாவை நினைவு கூர்வோம்.
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #