சரித்திரமும் எழுதுவார். எதிர்காலமும் எழுதுவார். ஒரு தீர்க்கதரிசி போல எதிர்காலத்தில் நிகழும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் எழுதுவார்.
திரைப்படத்துக்கு எழுதுவார். குக்கிராமத்து கதையையும் எழுதுவார். அமெரிக்கா கதையையும் எழுதுவார். பாட்டியிடம் அடி வாங்கியதையும் எழுதுவார். காதலுக்கு துணை போவதையும் எழுதுவார். காஞ்சி பெரியவாளையும் எழுதுவார். கமலுக்கும் கதை எழுதுவார்.
ஜானவாசமும் எழுதுவார், ஜீனோவும் எழுதுவார். பஞ்சகச்சம், உத்தராயணியும், உஞ்சவிருத்தியும் எழுதுவார். சமயங்களில் நம்ம கூட இருந்து பார்த்தாரோ என எண்ணுகிற அளவுக்கு, ஸ்ரீரங்கத்து தேவதைகளை எழுதுவார். மொத்தத்தில் அவர் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ். அவரிடம் இல்லாத, கிடைக்காத கருத்துக்களும், கதைகளும் இல்லை. சுருங்க சொன்னால் ஒரு நயாகரா நீர்வீழ்ச்சி சுஜாதா.
சுஜாதா என்றதும் என் மனதில் முதலில் தோன்றும் விஷயம் அவரது எழுத்து நடை தான். அவரது முன்னோடிகளின் சமகாலத்தவரின் நடைகள் ஆமை வேகம், இவரது நடையோ ராக்கெட். தமிழை விட ஆங்கில உரைநடையும் புனை வெழுத்தும் எப்போதும் பலபடிகள் முன்னால் இருப்பவை.
சுஜாதாவின் எழுத்து ஓரளவிற்கு இந்த இடைவெளியைக் குறைத்தது எனலாம்! அவரது நடையில் ஒருவித அலட்சியமும் அவசரமும் தொனிக்கும் – “இவதான் நாயகி, கண்ணு அழகா இருக்கும், அத விடு, இவ என்ன பண்ணானா..,” – என்பதைப் போலப் பரபரப்பாகச் செல்லும் அந்த வேகந்தான் அவரது நடையின் கவர்ச்சி.
அடுத்து அவரது விஷய ஞானம்! உலகில் எல்லாம் தெரிந்தவர் யாரும் இல்லை என்பது உண்மைதான், ஆனால் சுஜாதாவின் வாசகர்களைப் பொறுத்தவரை அவருக்கு தெரியாதது எதுவுமே இல்லை. அவரால் சுவாரசியமாக எழுத இயலாதது என்று ஒன்று இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை!காபி போடுவது முதல் குவாண்டம் இயற்பியல் வரை, தன் தந்தையின் இறப்பைக் கூட படிப்பவரைக் கட்டிப் போடும் வசீகரத்தில் வடித்தவர் அவர்.
‘சுஜாதா வீட்டு லாண்டரி பில்லைக் கூட பத்திரிகைகள் பதிப்பிக்கும்’ என்று பலரை வயிறெரிய வைத்த ஜாலம் அவர்!
இறுதியாக எளிமை! ஆங்கிலத்தில் ‘நோ புல்ஷிட்’ என்பார்கள், அந்த மனநிலைதான் அவருடையதும். தேவையற்ற ஆணிகளைப் புடுங்கிப் போட ஒரு கணமும் தயங்காதவர் அவர்!
கவர்ச்சியான எழுத்து ஆனால் ஆடம்பரம் இருக்காது! தொலைதூர வானில் அமைதியாக நீராவிக் கோடு இழுத்தபடி செல்லும் ஜெட் விமானம் போன்றவர் அவர்!
”தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது” இந்தச் சுட்டெரிக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர் இவர். தமிழின் எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரே நேரத்தில் அவரின் நாவல்கள் தொடர்கதைகளாக வந்தன. சுவாரஸ்யம் அவரின் கோட்பாடு.
இலக்கியங்களுக்குள் கோலோச்சியிருந்த எழுத்துகளை, தன் கற்பனையாலும் சிந்தனையாலும் நவீன உலகுக்குள் கொண்டுவந்து, இளைஞர்களுக்கு நளினம் பாய்ச்சியவர். அறுபதுகளில் ஆரம்பித்த அவருடைய எழுத்துப் பயணம், அவர் இறக்கும்வரை தொடர்ந்தது.சுஜாதாவை பிடிக்காதவர் இருக்கலாம், படிக்காதவர் இல்லை.
கொசுறு செய்தி:உணவு விஷயத்தில் வெந்தயக்குழம்பு, கீரை மசியல், சுட்ட அப்பளம் சுஜாதாவிற்கு மிகவும் பிடித்தவை. இவை மூன்றும் எனக்கும் பிடித்தவை.
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋 #