Close
டிசம்பர் 3, 2024 5:14 மணி

இங்கிலாந்து விவாசாயிகள் மத்தியில் பிரபலமான புல் கரி என்று அழைக்கப்படும் பீட்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

உரமேற்ற தயார்நிலையில் நிலம்

சமீபமாக இங்கிலாந்தில் பீட் ப்ரி என்கிற சொல்லாடல் இங்கிலாந்து விவாசாயிகள் மத்தியில் பிரபலம். புல் கரி என அழைக்கப்படும் பீட் என்பது ஈர நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளில் காணப்படும் பல தாவரங்களின் சிதைந்து உருவாகிற எச்சங்களாகும். 1960 களின் முற்பகுதியில் இருந்து பிரிட்டிஷ் தோட்ட மையங்களில் விற்கப்படும் பெரும்பாலான உரங்களில் காணப்படும் பிரதான மூலப்பொருள் எனலாம். வீட்டு தோட்டத்திற்கான உரம் வாங்கியாச்சு. குறிப்பாக “பீட் ஃப்ரி கம்பொஸ்ட்” என பார்த்து வாங்கினேன்.

நீர் தேங்கி நிற்கும் நிலப்பரப்பு ‘பீட்லேண்ட்ஸ்’ அல்லது ‘பீட் போக்ஸ்’ என அழைக்கப்படும். இந்த இடங்களில் இருக்கும் தாவரங்கள் முழுமையாக சிதைவதைத் தடுக்கப்பட்டு, தாவரப் பொருட்கள் முழுவதுமாக மக்காமல் காலப்போக்கில் படிப்படியாக ‘கரி போல குவிகிற பீட் என்பது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக திரட்டப்பட்ட தாவரப் பொருட்களாகும்.

போதுமான ஆக்ஸிஜன் அல்லது அதிகப்படியான அமிலத்தன்மை அல்லது இரண்டும், இத்தகைய சதுப்பு நிலத்தின் நீருக்கடியில் காணப்படுவதால், அங்குள்ள சில தாவரங்கள் பகுதியளவு அல்லது முழுமையாக சிதைவடையாமல் இருக்கும். உலர்ந்த பீட் இலகுவானது, பஞ்சுபோன்றது, மண்ணின் காற்றோட்டத்திற்கு உதவுகிறது,
கரிமப் பொருட்களைச் சேர்த்து வைக்கிறது. தண்ணீரை உறிஞ்சி தக்க வைக்கிறது, கார- அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது, மேலும் அழுகல் மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பாக உள்ளது.

பீட்லேண்ட்ஸ் விலைமதிப்பற்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும். அவை இயற்கை மற்றும் காலநிலை ஆகிய இரண்டிற்கும் இன்றியமையாதவை. அவை தன்னிடம் ஏராளமான கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைப்பது மட்டுமின்றி, சிவப்பு பட்டியலில் இடம்பெற்ற பறவைகள் மற்றும் பாலூட்டிகள் முதல் மாமிச தாவரங்கள் வரையிலான அரிய வகை வனவிலங்குகளுக்கு அவை தாயகமாக உள்ளன.

இன்னும் சொல்லப் போனால் பீட்லேண்ட்ஸ் நீரியலில் பல நன்மைகளையும் சேவைகளையும் புரிகிறது. வெள்ளத்தைத் தடுக்க உதவும் பெரிய அரண்களாக திறம்பட செயல்படுகின்றன. பீட் தண்ணீரைத் தக்கவைக்கும் திறனைக் கொண்டுள்ளது, மேலும் ஈரநிலங்களும் அவற்றுடன் தொடர்புடைய வாழ்விடங்களையும் விரிவுபடுத்துவதற்கு பெரும் உதவி செய்கின்றன.

இயற்கை சூழலில் முக்கிய பங்காற்றும் பீட் , திறம்பட அதன் பணியை செய்ய ஆரோக்கியமாகவும் ஈரமாக இருக்க வேண்டும், இருப்பினும் அன்றாட மனித பயன்பாடு மற்றும் வணிக வர்த்தகம் ஆகிய இரண்டும் அதனை வெட்டி பிரித்தெடுப்பதால் அவை உலர்ந்து விடுகிறது. இதன் விளைவாக அடிக்கடி காட்டுத் தீ உருவாக சாத்தியம் உண்டு.

நிலப்பரப்பிலிருந்து பீட் அகற்றும் செயலானது அதை சுற்றியுள்ள தாவரவாழ்விடத்தை சிதைக்கிறோம் என பொருள். இதன் நேரடி விளைவாக, அந்த பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.எளிமையான சொற்களில் சொல்ல வேண்டுமெனில், இது மழைக்காடுகளை வெட்டுவது மற்றும் அந்த காட்டில் உள்ள வாழ்விடங்களை அழிப்பது போன்ற செயல்களுக்கு சமமானது.

பீட் சதுப்பு நிலங்கள் கார்பனை சேமித்து வைக்கும் ஒரு முக்கியமான களம். அதை வெட்டி பிரித்தெடுக்கும் போது, சேமிக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. இன்றைய நிலையில், பீட்லாண்ட்ஸ் பகுதியில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, இங்கிலாந்தின் வருடாந்திர பசுமைக்குடில் உமிழ்வுகளை விட4% -க்கும் அதிகமாக உள்ளது.

இது 2 மில்லியனுக்கும் குறைவான பிரிட்டிஷ் குடிமக்களின் கரியமில தடதிற்குச் சமம். ஒரு வருடத்தில் பிரிட்டனில் தோட்ட உரம் தயாரிப்பதற்காக தோண்டப்பட்ட பீட், கிட்டத்தட்ட அரை மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இது சாலையில் ஓடும் 100,000 வாகனங்கள் வெளியிடும் பீட் உருவாக்கம் என்பது ஓரிரு ஆண்டுகளில் நடைபெறுவதில்லை. இதற்கு பல நுறு ஆண்டுகள் பிடிக்கும்.

வணிக நோக்கில் தொடர்ச்சியாக அறுவடை செய்யும் போது, இது மீண்டும் வளர கணிசமான நேரத்தை எடுக்கும். இத்தகைய காரணங்களை கணக்கில் கொண்டு, பீட் பயன்படுத்துவதை முழுவதுமாக தடை செய்ய இங்கிலாந்து முயன்று வருகிறது. தோட்டக்கலைத் தொழிலில் பீட் பயன்பாடு சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது, 2020 ஆம் ஆண்டளவில் பீட் பயன்பாட்டை அகற்ற சுற்றுச்சூழல் உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான அலுவல் இலக்குகள் வெளியிடப்பட்டு, இங்கிலாந்து அரசாங்கம் பீட்லாண்ட்களைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. எனவே விவசாயிகள் மே 2024 -க்குள் பீட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீட் உபயோகத்திற்கு மாற்றாக, சந்தையில் பதப்படுத்தப்பட்ட மர பொருட்கள், தேங்காய் நார்கள் கிடைக்கின்றன. அவை உரக்கலவையில் கலந்து உபயோகிக் கலாம். இது தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளவும், காற்றுப் பைகளை உருவாக்கவும், தாவரங்கள் ஊட்டச்சத்துகளை அணுகவும் உதவுகிறது.

தோட்டக்கலை ஆர்வலர்கள், விவசாயிகள் பீட் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டனர்.இத்தகைய விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் வெகு வேகமாக பரவி, பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு சுற்றுப்புற சூழலுக்கு கை கொடுக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக நானும் “பீட் ஃப்ரி கம்பொஸ்டுகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். இயற்கையோடு ஒத்திசைந்து இயற்கை விவசாயம் செய்வதில் அலாதி இன்பம் இருக்கத்தான் செய்கிறது.

#இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top