Close
டிசம்பர் 3, 2024 5:30 மணி

இலண்டன் மாநகரில் பவா செல்லத்துரையின் நூல் அறிமுக விழா

லண்டன்

லண்டனில் நடைபெற்ற விழாவில் பேசுகிறார், எழுத்தாளர் பவா செல்லத்துரை

 லண்டன் நியூ மில்டன் நகரில் புத்தக கண்காட்சியும், பாவ செல்லத்துரை அவர்களின் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட நான்கு நூல்களின் அறிமுக நிகழ்வும் (07.09.2024) நடைபெற்றது.

நிகழ்ச்சி தொடக்கமாக கண்காட்சியை ஏற்பாட்டாளர்  பௌஷர்  அனைவரையும் வரவேற்றார்.  ஒருங்கிணைப்பாளர் சங்கர் சிறப்பு விருந்தினர் பவா செல்லத்துரைக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இதையொட்டி, அரங்கம் முழுதும் புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை, அரசியல், சமூகம், வரலாறு, பண்பாடு , மருத்துவம் என 500 -க்கும் மேற்பட்ட தலைப்புகளினான புத்தகங்கள்  பார்வைக்கு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  புத்தகக் கண்காட்சியில் நூல் அறிமுகம், எழுத்தாளர் அனுபவம், இலக்கிய கலந்துரையாடல் என பல்வேறு  நிகழ்வுகள் நடைபெற்றன.

இயற்கை விரும்பி, எழுத்தாளர், விமர்சகர், திரைப்பட நடிகர், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டின் தமிழ் மொழியில் ஆகச் சிறந்த கதை சொல்லியாக விளங்கும் பவா  செல்லத்துரையின் உரை வீச்சு நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக  அமைந்தது.

கதை சொல்லும் விதம், கதை பார்க்கும் விதம், கதை சொல்லும் நடை இம்மூன்றிலும் தனக்கே உரிய பாணியுடன், தனது கம்பீரமான குரலில்
கவர்ந்து இழுக்கும் படியாக, இயல்பாக யதார்த்தமாக பேசிய விதம் அரங்கில் இருந்தவர்களை  கட்டி போட்டது.

லண்டன்
எழுத்தாளர் பவா செல்லத்துரை

படைப்புகளின் வகைக்கேற்ப, ஒரே மேஜையில் இருக்கும் படியாகவும், பார்வையாளர்கள் நின்று பார்வையிட போதுமான இடைவெளி விட்டு
புத்தகங்களை காட்சிப்படுத்திய விதம் கவனத்தை ஈர்க்கும் வகையில்  இருந்தது. இந்த இலக்கிய விழா ஒருங்கிணைப்பிற்கான அர்ப்பணிப்பில் பௌஷரின் தன்முனைப்பு  இம்முறையும் வியக்கும்படி இருந்தது.

தீவிரமான பலதுறை தேடல்களை, ஆய்வுகளை, முற்போக்கு சார்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைமேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டுமே, புத்தகவாசிப்பு மிகவும் பேருதவியாக இருக்கும் என்கிற பொதுப்புத்தி உடைக்கப்பட்டு சாமான்யனுக்கும் புத்தக வாசிப்பு பழக்கம், அவனது சராசரி வாழ்வியலில் ஒன்றாக கலந்து விட்டது என்பதை புத்தக கண்காட்சிக்கு வந்து போகும் வாசகர்களையும், ஆர்வலர்களையும் கணக்கில் கொண்டு அவர்கள் மன நிலையை துல்லியமாக நம்மால் கணக்கிட முடிந்தது.

லண்டன்
பவா செல்லத்துரைக்கு நினைவுப்பரிசளிக்கும் விழா நிர்வாகி

புலம்பெயர்ந்து வாழும் எங்களை போன்ற தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் நேரில் சந்தித்துக்கொள்ளவும், உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ஒரு நிகழ்வாக இருந்தது இந்த விழா. அறிவுத்தேடலுடன் கூடிய இன்னொருவகையான நினைவுகளின் தேடல் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு இலக்கியப் பண்பாட்டு பெரு நிகழ்வில் சில மணி நேரங்கள் செலவழித்தது பயனுள்ளது என்பேன்.

# இங்கிலாந்திலிருந்துசங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top