ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் , 1904–07 காலகட்டங்களில் எழுதப்பட்ட பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாகும். அயர்லாந்தின் டப்ளின் நகரத்தை சுற்றி மட்டுமே , அங்குள்ள மாந்தர்களின் வாழ்வியலை அவர்களின் மன நிலையை பிரதிபலிக்கும் படைப்பாகும். தமிழில் வண்ண நிலவனின் தாமிரபரணி கதைகள் கூட ஜேம்ஸ் ஜாய்சின் தாக்கம் எனலாம். லாசரா, மௌனி இவர்களுடைய நடையிலும் ஜேம்ஸ் ஜாய்ஸ் தெரிவார்.
இந்த 15 சிறுகதைகள் முழுவதும் குழந்தை பருவத்தினர், இளம்பருவத்தினர், வயதானவர்கள் என வகை வகையாக பிரித்து அவர்களின் கதைகளை வரிசைக் கிரமமாக அவை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்கள் ஐரிஷ் நடுத்தர வர்க்கத்தை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தின் மத்திய தர வாழ்க்கையை பிரதான களமாகக் கொண்ட இக்கதைகள், ஐரிஷ் தேசியவாதம் உச்சத்தில் இருந்த போது எழுதப்பட்டவை.
மிகவும் கவனமாக அமைக்கப்பட்டுள்ள படைப்பின் கட்டமைப்பு, சோதனை ரீதியான உரைநடை, கதாபாத்திர விவரிப்பு மற்றும் நகைச்சுவை ஆகியவை இந்த படைப்பை, வரலாற்றில் சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக பேச வைத்திருக்கிறது. நாம் இலகுவாக பின்பற்ற எளிதான உரையாடலுடன் எழுதப்பட்டிருக்கிறது.
இது அயர்லாந்தில் உள்ளவர்களை பற்றி பேசினாலும், உலகின் எந்த மூலையில் இருக்கும் நடுத்தர வருமானம் உள்ள மக்களை எளிதாக தொடர்பு படுத்துவது போலவே படைக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்த கதைத்தொகுப்புக ளுக்கான பலம். ஜாய்ஸ் உண்மையில் கதைமாந்தர்களின் உடல்மொழிகளை பயன்படுத்தாமல் அவர்களின் உணர்ச்சிகளை பயன்படுத்தி, தனது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிறார். கதைகள் சிறியவை ஆனால் அது சொல்லும் செய்திகள் பெரியவை.
ஒவ்வொரு கதையிலும் புனையப்பட்ட கதாபாத்திரத்தின் நுண்ணறிவு அல்லது உணர்தல், ஒரு தொலைநோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கதை சூழலை மிகவும் யதார்த்தமானதாக மாற்றும் பொருட்டு, நெருக்கமான விவரங்களை கூட அதன் போக்கிலேயே விவரித்திருக்கிறார் . இது வாசிப்பாளர்களுக்கு கதாபாத்திரங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.
நிலையற்ற மனம் உடையவராகவும் பெரும் குடிகாரராகவும் வாழ்ந்த ஜாய்ஸ், அன்றைய நாளில் கத்தோலிக்க மதம், மனிதனின் அடிப்படை அபிலாஷைகள்மீது செலுத்திய ஆதிக்கத்தையும் அதன் விளைவாக எழுந்த குற்றவுணர்ச் சியையும் தனது கதைகள் வழியாக வெளிப்படுத்தி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.
சுயசரிதத்தன்மை மிகுந்த டப்ளினர்ஸ் எழுதப்பட்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் டப்ளின் நகரம், இந்த படைப்பின் வாயிலாக உலகெங்கும் உள்ள இலக்கிய வாசகர்களை தன்பால் இன்றுவரை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
ஜேம்ஸ் ஜாய்ஸ் பதினெட்டு முறை பதினைந்து வெவ்வேறு வெளியீட்டாளர்களிடம் இந்த தொகுப்பை சமர்ப்பித்தார். சில கதைகளை நீக்கினால் வெளியிடுவதாக ஒருவர் ஒப்புக்கொண்டார். ஆனால், ஜாய்ஸ் மறுத்துவிட்டார்.
மற்றொருவர் அதை அச்சிட்டார், பணம் செலுத்தாமல் நகலைத் திருப்பித் தர மறுத்தார்.
இன்னொருவர் வெளியிட்ட பதிப்புகளை அனைத்தையும் வாங்கி எரித்தார். இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக, ஜேம்ஸ் ஜாய்ஸ் அவர்களிடமிருந்து பிரதியை திரும்ப பெற்று பல போராட்டங்களுக்கு பிறகு 1914 ஆம் ஆண்டில் இறுதியாக இதை வெளியிட்டார்.தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதிவுகளில்.., வாய்க்கும்போது இந்த 15 கதைகளின் மையக்கருவை சுருக்கமாக விவரிக்கிறேன்.
விமர்சகர்: சண்.சங்கர், லண்டன், இங்கிலாந்து.