Close
நவம்பர் 22, 2024 2:17 மணி

புதுக்கோட்டை நகராட்சி 27 வது வார்டில் 13 ஆண்டுகளாக சாலை போடவில்லை: உறுப்பினர் மூர்த்தி பேச்சு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சித்தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டம்

புதுக்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகர் மன்றத்தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது.

இதில், துணைத்தலைவர் எம். லியாகத்அலி, ஆணையர் நாகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகர்மன்ற உறுப்பினர்  எஸ். மூர்த்தி(27 வதுவார்டு) பேசியதாவது: எனது வார்டில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். சட்டத்துறை அமைச்சர் குடியிருக்கும்  கீழ 2-ஆம் வீதியில்  போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது. இந்த வீதி சாலையில் 32 பள்ளங்கள் இருக்கின்றன. சாலை அமைத்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது. இதுநாள் வரை புதிய சாலை போடவில்லை.

மழை காலம் தொடங்கிவிட்ட நிலையில்,  தோரண வாய்க்கால்களில் சேர்ந்துள்ள மண்ணை அள்ளி சாலையில் போடுவதால் அதை மழை நீர் அடித்துச்செல்வதால் சாலைகள் மண்மேடாகி விடுகின்றன. மண்ணை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும். மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை செய்து தருவதாக அரசு அளித்த உறுதியை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார் மூர்த்தி.

புதுக்கோட்டை
நகராட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்

நகர் மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு(9 -வது வார்டு) பேசுகையில், புதுக்கோட்டை நகரில் நகராட்சிக்குச்சொந்தமான பல்வேறு இடங்களில் தொழில் செய்து வருபவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்துவதில்லை. இதனால் நகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்நிலையில், டவுன் ஹாலை சுற்றியுள்ள கடைக்காரர்கள் நீண்ட நாள்களாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டவுன் ஹால் வளாகத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான அளவில் கட்டிடங்கள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இது குறித்து நகர் மன்றத்தலைவர்  ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் செந்தாமரைபாலு.

நகர்மன்ற உறுப்பினர்கள் சுபசரவணன், எஸ். அப்துல்ரஹ்மான்,ராஜாமுகமது, அனுராதா, முகமதுபர்வேஸ், ரமேஷ்பாபு, வளர்மதிசாத்தையா உள்பட பல உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை  மன்றத்தில் பதிவு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top