அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரோடு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என்றும் ஜூலை 11 -ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழக முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு ஆகியோரது தலைமையில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரின் திரு உருவ சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதே போல மாநகர் மாவட்ட கழக அலுவலகமான புரட்சி தலைவி அம்மா மாளிகையில் உள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கேசவமூர்த்தி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார் மாவட்ட மாணவர்கள் இணைதச் செயலாளர் நந்தகோபால்,மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெகதீஷ் தங்கவேலு உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விரைவில் வாழ்நாள் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பு ஏற்க உள்ளதாகவும் இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களின் எண்ணங்களை பிரதி பலிக்கும் தீர்ப்பாக உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேபோல் ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் இரா.மனோகரன், முன்னாள் எம்.பி செல்வகுமார சின்னையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூந்துறை பாலு ஆகியோர் தலைமையில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.